முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம், மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நீண்ட காலம் சிறையில் இருந்த 6 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். மாநில அரசின் உரிமைகளை உறுதிப்படுத்தியதுடன், ஆளுநரின் செயல்பாட்டுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் சரியான பாடம் புகட்டியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது ஆளுநரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, காலத்தில் விடுதலை செய்ய தவறிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தில் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை வரவேற்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சிறையில் இருப்போரை விடுதலை செய்வது குறித்து முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் மோசடி நாடகத்தை நடத்தி வந்தனர். இதற்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து, நீதி வென்றே தீரும் என்பதை நிலைநாட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: 2018-ல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டிருந்தால், அப்போதே அவர்கள் விடுதலையாகி இருப்பார்கள். அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேருக்கு கிடைத்த தீர்ப்பு தாமதமானாலும் அவர்களின் விடுதலை வரவேற்கத்தக்கது.
விசிக தலைவர் திருமாவளவன்: 6 பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்க பாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரி.
26 தமிழர் உயிர் காப்புக் குழுதலைவர் பழ.நெடுமாறன்: விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கை தமிழர்கள். அவர்களை பிற வெளிநாடுகளில் வாழும் அவர்களது உறவினர்களிடம் அனுப்ப வேண்டும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு. இனியாவது அரசமைப்புச் சட்ட கடமையில் இருந்து தவறாமல் ஆளுநர்கள் நடக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பேரறிவாளனை தொடர்ந்து, மற்ற 6 தமிழர்களின் நீண்ட சட்டப் போராட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவர்கள் புதியதோர் வாழ்வை தொடங்க வாழ்த்துகள்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 7 பேர் விடுதலைக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனிசாமி ஆட்சியின்போது, அமைச்சரவையைக் கூட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவின் சட்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் சேது.கருணாஸ் உள்ளிட்டோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.