இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை – இந்திய உறவுகளின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்து பரந்துப்பட்டு பல துறைகளில் கூட்டாண்மையுடன் செயற்படுவது தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

புது டெல்லியில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவின் தற்போதைய நிலைமை குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதியும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் இதே போன்றதொரு கலந்துரையாடல் டெல்லியில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியது. பொருளாதார ஸ்தீரதன்மையை உருவாக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைகளின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அவசியத்தை சர்வதேச அரங்குகளில் வலியுறுத்தி வருகின்றது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் (எக்ஸிம்) இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது