பொருளாதார ரீதியில் நாடு அடுத்த ஆண்டு தற்போதுள்ளதை விட பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும். இது தொடர்பில் எம்மால் விடுக்கப்படும் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரது இந்த செயற்பாடுகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் நாமும் எண்ணினோம்.
எனினும் அவரது இலக்கு நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதல்ல. மாறாக இலாபமீட்டும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனம் என்பவற்றை தனியார் மயப்படுத்துவதாகும். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
மத்தள விமான நிலையம் வருமானத்தை விட 21 மடங்கு செலவினைக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறானவற்றையே மறுசீரமைப்பதற்கு ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளது. காரணம் அவரது வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் மீது வரி சுமையை சுமத்துபவையாகவே உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நாடு பொருளாதார ரீதியில் வீழச்சியடையும் என்பதை அறிந்திருந்தும் அது தொடர்பில் மத்திய வங்கியால் எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி எச்சரிக்கை விடுக்காவிட்டாலும் பொறுள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் அதனை செய்திருந்தோம். அடுத்த ஆண்டு இதனை விட பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று இப்போதும் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆணவத்தினால் நாம் கூறும் விடயங்களை உதாசீனப்படுத்துகின்றார். இதற்கு பதிலாக தன்னை ஹிட்லர் எனக் கூறிக் கொண்டும் , இராணுவத்தினரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை அடக்குவேன் என்று கூறுகின்றார்.
மக்கள் இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் கூட, மீண்டும் 75 சதவீதம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்