நல்லிணக்கத்துக்கான நடைமுறைகளை ஜனவரி 31இற்கு முன்னர் நிரூபியுங்கள்! தமிழ் பேசும் தரப்புகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் நீடிக்கும் காணி ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காணல், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், புதிய அரசமைப்பு தொடர்பில் ஏற்கனவே எட்டப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணக்கப்பாட்டை அடைதல் ஆகிய விடயங்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை ஜனாதிபதி தரப்பு செய்ய வேண்டும் என்று தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.இனப் பிரச்னைக்கு தீர்வு எட்டும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அழைப்பு விடுத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையகத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தென்னிலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் கலந்து கொண்டன.

ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் தற்போதும் நீடிக்கும் காணிகள் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விடயங்களை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சரும் இப்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மூலமாக செய்யப்பட்ட விடயங்களை முன்வைத்தனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் சட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டே அவர்களை விடுதலை செய்ய முடியும். அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய முடியும் என்று கூறினர்.

வேண்டியது நீதியே

அவர்களின் கருத்துக்கு பதில் உரைத்த சம்பந்தன், “காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதும் அதனைத்தான்…” என்று கூறினார்.

தொடர்ந்து, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பிளவுபடாத இலங்கைக்குள் – உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு உச்ச அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று சம்பந்தனும், விக்னேஸ்வரனும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து இந்த அனைத்து விடயங்களையும் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “13ஆவது திருத்தச் சட்டத்தை நான் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

 

13ஐ ஆதரித்த ஹக்கீம்

இதைத் தொடர்ந்து சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதன் பின்னர் படிப்படியாக முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார். 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட மனோ கணேசன் மலையக தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு

எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேம தாஸ, 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், பிளவுபடுத்த முடியாத இலங் கைக்குள் – ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன், சமஷ்டி மூலம் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண் டும். அதேசமயம், அபிவிருத்தி பணிகளும் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப் பட வேண்டும் என்று கூறினார்.

நசீர் அஹமட் எதிர்ப்பு

சுற்றாடல் துறை அமைச்சரான நசீர் அஹமட் மாத்திரம் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக்கூடாது என்று எதிர்ப்பைக் கிளப்பினார். சுமந்திரன் எம். பி, அரசமைப்பு விடயத்தை ஆரம்பத்தில் தொடங்க வேண்டியதில்லை. இது தொடர்பாக பல அறிக்கைகள் – இணக்கப்பாடுகள் – வரைவுகள் கூட இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேர்த்து ஓர் இணக்கப்பாட்டை எட்டி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்திலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனெனில் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சனைக்கு தீர்வு என்ற காலக்கெடுவை வைத்திருக்கிறார். எனவே, ஜனவரியில் முடிவு – இணக்கம் ஒன்று எட்டப்பட வேண்டும். இது மிகக் குறுகிய காலம் என்றாலும் அனைவரும் முயற்சிப்போம் – என்றார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனவரியில் ஒரு திகதியில் கூடிப் பேசுவது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மகிந்த மௌனம் இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து மகிந்த ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்ற போதிலும் அவர்கள் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.