உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதில்லை – ரணில்

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதனைத் தவிர உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு செயற்பாடுகளிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதானால் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதமானோர் புது முகங்களாக இருப்பது பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.