இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கு இடையில் இன்று (ஜன 11) புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இலங்கையின் அதிருப்தியை அமைச்சர் அலி சப்ரி வெளிப்படுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை கனேடிய அரசாங்கத்தினால் பல்வேறு முக்கிய தடைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் கனேடிய உயர்ஸ்தானிகரை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வரவழைத்து அமைச்சர் இலங்கையின் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தமை இந்த முக்கியமான தருணத்தில் பொறுப்பற்ற செயலாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நல்லிணக்கத்தை அடைவதற்காக ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் நாடு ஈடுபட்டுள்ள வேளையிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.