சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.
இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.
அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.
இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.