இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி திட்டமானது 2023 ஆம் ஆண்டில் முக்கியமானதாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கு இடையிலான 75 வருட கால இராஜதந்திர உறவினை நினைவுக்கூறும் இத்தருணத்தில் இருதரப்பு பல்துறைசார் உறவுகள் மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான ஒத்துழைப்புகள் போன்ற துறைகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்வத்துடன் இந்த கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பிரதி தூதுவர் டொக்ளஸ் இ. சோனெக் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு பயிற்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே பிரதி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க கடற்படையின் 7 ஆவது படைப்பிரிவை சேர்ந்த யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் ஒருவாரக்கால கூட்டுப்பயிற்சிகளை முன்னெடுக்கும் வகையில் இந்த கப்பல் கொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளிலும் இந்த போர் கப்பல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுப்பட உள்ளது.
CARAT/MAREX என்பது கொழும்பு, திருகோணமலை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கடற்படை தளங்களில் முன்னெடுக்க கூடிய இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும். விசேடமாக இம்முறை ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் கூட்டாண்மையின் 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த கூட்டுப்பயிற்சி திட்டங்களுக்கு அப்பால் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் யோசனைகள் மற்றும் தந்திரோபாயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையிலும் நவீன உத்திகளில் போர் மூலோபாயங்களை பயிலும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலின் துணை கட்டளையதிகரி கெப்டன் சீன் லூயிஸ் தெரிவித்தார்.
யுஎஸ்எஸ் ஏங்கரேஜ் போர் கப்பலானது கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுப்பட கூடியதாகவும் அதனுடன் தொடர்புப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளை ஈடுப்பட கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உட்பட போர் வாகனங்களை தாங்கி செல்ல கூடிய வல்லமை இந்த கப்பலுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் மற்றும் வான் பாதுகாப்பு, சிறிய படகு செயல்பாடுகள் மற்றும் கடல் பாதுகாப்பு அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த ஒருவார கால பயிற்சி திட்டம் அமையும் எனவும் கூறினார்.
ஒவ்வொரு பயிற்சிகளும் படைகளுக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பை மிகச்சரியாக பிரதிபலிக்கிறது என்றும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல், அறிவு, திறன் மற்றும் இலக்குகள், கலாச்சாரங்கள் மற்றும் இலட்சியங்கள் பற்றிய புரிதலை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் இருதரப்பு பங்காளித்துவத்தை வலியுறுத்தும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.