காணி ஆக்கிரமிப்புகளை உடன் நிறுத்த ஜனாதிபதி இராணுவம்,திணைக்களங்களுக்கு உத்தரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி ஆக்கிரமிப்பு – சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போது திணைக்களங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.

காணிகள் ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் என்பன காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதுடன் சுவீகரித்தும் வருகின்றன. இவை உடனயாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், இந்த மாகாணங்களில் ஒவ்வொரு திணைக்களங்களும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு விடயங்களை கையாள்வது என்பது தொடர்பில் ஒரு பொறிமுறை அமைத்து அது தொடர்பில் பேசி முடி வெடுத்தே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தின.

தொல்லியல்துறை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர். அத்துடன், இது விடயத்தில் ஜனாதி பதியின் உத்தரவுகள்கூட பின்பற்றப்படுவதில்லை என்று சுமந்திரன் எம். பி. சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாலும் தொல்லியல் திணைக்களத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால் இந்தத் திணைக்களத்தை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கலாம் என்று சித்தார்த்தன் எம். பி. இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் 20 இடங்களில் தாங்கள் தவறாக நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறினார்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி இது தொடர்பில் தீர்வுகளை எட்டலாம். தீர்வு காண முடியாத விவகாரங்களை அடுத்த சந்திப்பில் பேசலாம் எனவும் ஜனாதிபதி யோசனை கூறினார்.

பயங்கரவாத சட்டம் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது. அதனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர். எனினும், பயங்கரவாத தடை சட்டம் தேவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். இதனால், டக்ளஸூக்கு எதிரான நிலைப்பாட்டை சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் வெளிப்படுத்த அது கடும் விவாதத்தை கிளப்பியது.

அரசியல் கைதிகளாக தற்போது சிறைகளில் 30 பேர் இருக்கின்றனர். இவர்களில் 14 பேரின் வழக்குகள் நிறைவடைந்து விட்டன. இதில், பாதிக்கப்பட்ட இரு தரப்பினர் மன்னிப்பு அளிக்க முன்வரவில்லை. இதனால் இருவரை விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. மகேஸ்வரன் மற்றும் சரத் பொன்சேகா தரப்பினரே இதுவரை சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், 12 பேரை விடுதலை செய்ய முடியும். 16 பேர் தொடர்பான வழக்குகள் நடைபெறுகின்றன. இதனால், அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க முடியாது. எனினும், அவர்களை பிணையில் விடுவிப்பது குறித்து ஆராயப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது. முகநூலில் பதிவிட்டவர்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளை முடிவுறுத்துமாறும் இதன்போது தமிழ் தரப்பினர் கோரியிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ஆணைக்குழுவை நியமித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.

1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராய வேண்டும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். இது தொடர்பிலும் சுமந்திரனுக்கும் டக்ளஸூக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதில், தலையிட்ட ஜனாதிபதி 2000 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய குழு நியமிக்கலாம். தேவை ஏற்படின் மற்றொரு குழு 1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி ஆராயலாம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தின் பிரதிநிதி, இதுவரை 20 முறைப்பாடுகளை தமது பணிமனையால் ஆராயப்பட்டது என்றும் இராணுவம், தனிநபர்கள், சில அரசியல் கட்சிகள் பற்றியும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின் பின்னரே இந்த விடயத்தை செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சில் தென்னாபிரிக்க மாதிரியான நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சர்வதேச அங்கீகாரம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் நாளை (இன்று) பேசுவோம் என்று ஜனாதிபதி கூறினார். இதன்போது, இந்த வகையான முடிவற்ற சந்திப்புகளால் எந்த பலனும் இல்லை என்று சம்பந்தன் சுட்டிக் காட்டினார்.

நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. பேச அழைத்தோம் – வந்தீர்கள் – பேசுவோம் – முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த பேச்சில் தமிழ் கட்சிகள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், த. கலையரசன், இ. சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் எம். பியும் பங்கேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்), கு. திலீபன் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்