இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது , இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் , மேலும் பல நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.
உண்மையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஆதரவளித்திருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றிருக்க முடியாது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை கடந்த ஆண்டு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.
இதன் காரணமாக முதன் முறையாக கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது.
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்தமை , மின்சாரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமை , மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
எவ்வாறிருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து அவர் தெரிவித்துள்ள போதிலும் , அது தொடர்பில் விரிவான விபரங்களை வெளியிடவில்லை