முத்துராஜாவின் பராமரிப்பு செலவை தாய்லாந்திடம் கேட்கப் போகும் முன்னாள் தியவடன நிலமே

தாய்லாந்து மன்னர் தலதா மாளிகைக்கு வழங்கிய யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், யானையின் பராமரிப்பு செலவுக்காக வழக்கு தொடரப்போவதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பரிசாக வழங்கியதை திருப்பிக் கேட்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து முத்துராஜா யானை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை யானை ஆரோக்கியமாக உள்ள போதிலும், யானை குறித்த தவறான தகவல் தாய்லாந்திற்கு நாடா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானைக் குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்குமாறு கோரப்பட்டதாகவும், அதன்படி 1986ஆம் ஆண்டு அரசர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா யானையை தலதா மாளிகைக்கு பரிசளித்ததாகவும் முன்னாள் தியவடன நிலமே கூறுகிறார்.

யானை துன்புறுத்தப்பவில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனம் தவறான தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.