பௌத்த விகாரை ஒன்றில் வைத்து யானை முத்துராஜா மோசமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, பல அரச சார்பற்ற நிறுவனங்கள் யானைகளை பெரஹரா கலாசாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை விளம்பரப்படுத்த முயல்வதாக அஸ்கிரிய பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு பெரஹரா காலத்திலும் மேற்கொள்ளும் திட்டமிட்ட பிரசாரம் இது என்றும் தேரர் கூறினார்.
“எந்த நாட்டிலும் ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த கலாச்சாரம் உள்ளது, சிங்கள பௌத்த கலாச்சாரத்தில், யானைகளைப் பயன்படுத்தினோம், இங்கிலாந்தில், குதிரைகள் தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர்களின் அரச விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்“ என்று அவர் கூறினார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2022 இல் மனித-யானை மோதலின் போது அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்டன. ஆனால் துஷ்பிரயோகம் காரணமாக வளர்ப்பு யானைகள் எதுவும் இதுவரை இறக்கவில்லை என்றார்.
யானைகளை பராமரிப்பதற்கு தொழில் பயிற்சியோ அல்லது கல்வியோ வழங்காததே யானைகள் துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்றும், விகாரைகளுக்கு யானைகளை வழங்கக்கூாது என பாஹியங்கல ஆனந்த சாகர தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடாதிபதி, யானை வளர்ப்பு எப்போதும் நடைமுறையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, எமது சொந்த பெரஹரா கலாசாரத்தை பாதுகாக்க அந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.