15 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்திய மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.