உயிர்த்த ஞாயிறு தாக்குதல் புதிய ஆதாரங்கள் புறக்கணிப்பு – பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வெளிப்படையான சுயாதீனமான பொறிமுறையின்மை குறித்து நாங்கள் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம்.

இந்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது.

தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல விசாரணைகளை முன்னெடுத்தன.

ஆனால் இந்த விசாரணைகள் உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஆராயவில்லை. புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள்.
அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால் (Syndicated Surveys) நடத்திய கணக்கெடுப்பின் படி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சனத் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் – அதாவது 53% – நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று கருத்துக்கள் கணக்கெடுப்பில் பங்குபற்றியவர்கள் இடையே கேட்கப்பட்டன, தங்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

⦁ ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

⦁ இது உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.

⦁ உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

53% உள்ளூர் அரசியல் சக்திகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புகின்றனர் – 30% இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர், 23% மக்கள் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக 8% பேர் மட்டுமே நம்புகின்றனர் (முதல் பதில்). 39% சதவீதம் பேர் தங்களுக்கு இது தொடர்பாக எந்தவித கருத்தும் இல்லை என்றும் அல்லது கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர்.

2019 ஏப்ரல் 21, (உயிர்த்த ஞாயிறு) அன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில் மொத்தமாக 269 நபர்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 அக்டோபரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வாக்களிப்பு பங்காளியான வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது. சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் ஐ.நா தலையிட வேண்டும் – இலங்கை கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைக்கான இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆதரவளிக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமைகளிற்கான ஐக்கிய நாடுகளின் பிரதி ஆணையாளர் நடா அல் நசீவை சந்தித்தவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஐநாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கர்தினாலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சமில்பெரேராவும் கலந்துகொண்டுள்ளார்.

நீதிக்கான எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள்கள் குறித்து ரணில்ராஜபக்ச அரசாங்கம் அலட்சியமாகயிருப்பதால் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் குற்றச்சாட்டினை தொடர்ந்து சர்வதேசரீதியில் கண்காணிக்கப்பட்ட முழுமையான விசாரணைக்கு கத்தோலிக்க திருச்சபை விடுத்த வேண்டுகோளிற்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஐ. எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடன் வெளிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய மையங்களில் குண்டுகளை வீசும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நாட்டுக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.

பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர்.

குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் ? – இலங்கை ஜனாதிபதி கேள்வி

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

DW NEWS உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சனல் 4 சமீபத்தில் அம்பலப்படுத்திய அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காடிட்டனர்.

இருப்பினும் சனல் 4 ஆவணப்படம் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் நடந்ததற்கும் உணர்ந்ததற்கு முற்றிலும் மாறுபாடு உள்ளமையினால் இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

Posted in Uncategorized

ஜனாதிபதியின் செனல் – 4 விசாரணைக்குழுவை நிராகரிக்கின்றோம் – கத்தோலிக்க திருச்சபை

செனல் 4 காணொளி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” செனல் 4 வினால் கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய கிடைத்தது.

அதேபோன்று அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிய கிடைத்தது.

இன்னுமொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவால் இந்த விசாரணைகள்பாரபட்சம் இன்றி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இந்த கேலியான முயற்சிகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.

செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மட்டுமல்ல அதற்மேல் விசாணைகளை மேற்கொண்டு தெளிவாக ஆரோக்கியமாக பாரபட்சம் இன்றி ஒழுங்குமுறையான விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

ஆரோக்கியமான சர்வதேச விசாரணை குழுவின் விரிவான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்த அரசாங்கம் தயார் – விஜயதாச ராஜபக்ச

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுகளுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையானது புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நிறுவனமாகும். ஆகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் காணொளி தொடர்பான சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினேன். தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக அன்று பலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அன்று நான் கூறி 29 மாதங்களுக்குப் பிறகு அனைவரின் கண்களும் திறக்கப்பட்டுள்ளன. அன்று எனது அறிக்கையை ஆராய்ந்திருந்தால் அந்த மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றம் ஊடாக அதற்கு தடையை பெற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம். இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்கள் தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர்” இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

15 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்திய மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர் தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அவர்கள் செயல்படத் தவறியதால் உயிரிழந்தவர்களுக்கு மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் 97,500/- ரூபாவை ஓய்வூதியமாகப் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285/ ரூபா பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.