பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் அதிகாரத்தை இல்லாது செய்யும் வகையில், 22 ஆவது திருத்தச் சட்டமூலமொன்றை அடுத்தவாரம் அளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.

இதில், பொலிஸ் அதிகாரத்தை சிறிது காலம் கழித்தும், ஏனைய அனைத்து அதிகாரங்களை உடனடியாக வழங்கவும் ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை இதுதொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வர, சர்வக்கட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்திலிருந்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களையே அவர் செய்துள்ளார் என்பது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் அனைவருக்கும் தெரியவரும்.

எனவே, மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்துச் செய்யும் வகையில், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபை நாம் தயாரித்துள்ளோம்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடக்கிய சட்டத்தரணிகள் குழுவே இந்த வரைபை தயார் செய்துள்ளனர். இதனை நாம் அடுத்தவாரமளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்” தெரிவித்துள்ளார்.