“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் துதிபாடுவோரை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – இவ்வாறு சிங்களக் கடும்போக்குவாத நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டில் பயங்கரவாதத்தை விதைத்து – சொத்துக்களை நாசப்படுத்தி – மூவின மக்களையும் பிளவுபடுத்திய ஒரு அமைப்பின் தலைவரைத்தான் வடக்கு – கிழக்கில் உள்ள ஒரு தரப்பினரும், புலம்பெயர் தமிழ் மக்களும் தேசியத் தலைவராகப் புகழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு வாக்குப் பிச்சை கேட்கப் பிரபாகரனைப் பகிரங்கமாகத் துதிபாடி வருவது வழமை.
இந்நிலையில், மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் அல்லது பிரதமராக வர வேண்டும் என்ற கனவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பிரபாகரனைத் துதிபாடியுள்ளார்.
பிரபாகரன் உருவாகப் பௌத்த பிக்குகளோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது சிங்கள மக்களோ காரணம் அல்லர் என்பதை மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும்.
பிரபாகரனிடம் இருந்த பயங்கரவாதக் குணத்தாலும், அவரிடம் இருந்த இனவெறியாலுமே அவர் அரச படைகளுக்கு எதிராக – சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கினார். நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யவிட்ட அவர், இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது படையினரின் தாக்குதலில் மரணத்தைத் தழுவினார்.
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இனிமேல் யாரும் துதிபாடினால் அவர்களை அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” – என்றனர்.