இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு – கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.