வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னி விளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.
யாழ்ப்பாணம் – கோப்பாய்
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.
கொடிகாமம்
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நேறறு மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகச்சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் – யாழ்ப்பாணம்
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதான ஈகச்சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.
வல்வெட்டித்துறை கம்பர் மலை
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால்
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு கடற்கரை
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற் கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச் சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர். குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மட்டக்களப்பு – வாகரை
மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
மன்னார் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,அரசியல் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆட்காட்டிவெளி
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் நேற்று மாலை நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .
திருகோணமலை
திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில், சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.