உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார்.
அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ந்தும் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (30) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த சபையில் பல தடவைகள் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னர் எதுவும் இடம்பெறவில்லை.
தாக்குதல் தொடர்பில் ஆராய குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என சபாநாயகரான நீங்கள் தெரிவித்தீர்கள்.
அமெரிக்க பென்டகன் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கு ஒத்ததாக எதிர்க்கட்சியின் தலைமையில் விசாரணை குழு அமைப்பதே யோக்கியம் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.
அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ் அதிகாத்துக்கு வரும்போது இதன் சூத்திரதாரிகளை தேடுவதாகவே தெரிவித்தார்.
அதேபோன்று ஸ்கொட்யாடை பயன்படுத்திக்கொண்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேபோன்று இதுதொடர்பாக நிச்சயமாக விசாரணை மேற்கொள்வதாக ஜேர்மன் ஊடகமொன்றுக்கும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக மறைக்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.
இந்த தாக்குதல் தொடர்பில் பேராயர் கர்தினால், கத்தோலிக்க சபை சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
எனவே உயிர்த்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் மன்னிப்பு கிடையாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
அதேபோன்று பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடிரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கிய எவருக்கும் மன்னிப்பு இல்லை.
அதேபோன்று இந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தங்களின் கடமை பொறுப்பை புறக்கணித்த எவருக்கும் பாதுகாப்பும் இல்லை சந்தர்ப்பமும் வழங்கப்படாது.
ஏனெனில் இந்த தாக்குதல் காரணமாக பேராயர் கர்தினால் உட்பட கத்தோலிக்க மக்கள் பாரிய வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் ஊடாகவே எனக்கும் தந்தை இல்லாமல் போனது.
அதனால் இந்த பயங்கரவாதத்துக்கு எமது நாட்டில் இடமில்லை. பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.
பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு கடமை ரீதியாக தங்களின் பொறுப்பை புறக்கணித்து செயற்பட்ட எவருக்கும் நாங்கள் மனிப்பு வழங்குவதில்லை.
அவர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவோம். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள யாரையும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு துராேகம் இழைக்கப்போவதும் இல்லை.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்ற விடயத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.