‘‘பிக்குகளுக்கு அவதூறு ஏற்படுத்த ஒருசிலர் திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. நாங்கள் உயிருடன் இருக்கும்வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளிக்கக் கூடாது. அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் நாடுகளுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம்’’ என்று பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது, எமது நாடு சுத்தமாக தேரவாத பெளத்தத்தை பாதுகாத்துவரும் நாடாகும். இதனை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். எமது அரசர்கள் ஒவ்வொருவரும் பெளத்த சாசனத்தை பாதுகாக்கவே யுத்தம் செய்தார்கள். சாசனத்தை பாதுகாப்பதற்காகவே இந்த நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே இதனை பாதுகாக்க வேண்டியது சிங்கள மக்களின் முக்கிய பொறுப்பாகும். தற்போதுள்ள இளைய பிக்குகள் பெளத்த தர்மத்தை பரப்புவதற்கு இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா போன்ற சகல நாடுகளும் பெளத்த நாடுகளாகும். ஆனால் அந்த நாடுகள் இன்று பெளத்த நாடுகள் இல்லை. அதற்கு காரணம் அவர்கள் சாசனத்தை பாதுகாக்கவில்லை. நாம் சாசனத்தை பாதுகாத்தமையின் காரணமாகவே, 2500 வருடங்கள் கடந்தும் எமது நாடு இன்றும் பெளத்த நாடாக இருக்கின்றது. அந்த சாசனத்தை பாதுகாப்பதற்கான முழு பொறுப்பு இன்று பிக்குகளுக்கும் இருக்கிறது. ஒருசில பிரதேசங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் பிக்குகளை பராமரித்தாலும் அநேகமாக சிங்கள மக்களே அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள். சிங்கள மக்கள் இலங்கையிலேயே வாழ்கிறார்கள். நாடு சிக்கலுக்குள்ளானால் சிங்கள மக்களும் சிக்கலுக்குள்ளாகுவார்கள். சிங்கள மக்கள் சிக்கலுக்குள்ளானால் பிக்குகளின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும். அவர்களின் இருப்பு சிக்கலுக்குள்ளான பெளத்த சாசனமே இல்லாமல் போகுமளவுக்கு சிக்கல் நிலை ஏற்படும். அதனால் மொத்த தர்மமும் இல்லாமல் போய்விடும். அதன் காரணமாகவே எமது நாட்டில் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிக்குகள் முன்னிருந்தார்கள்.
மன்னர் காலத்தில் இடம்பெற்ற போர் நிலைமைகளின்போது போருக்கு பிக்குகள் ஆதரவாக இருந்தமைக்கு காரணம் பெளத்த சாசனத்தை பாதுகாப்பதற்காகவாகும். இவ்வாறு எமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகள் தவறு செய்துவிட்டால் அல்லது குரலை உயர்த்தி பேசிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். பிக்குகளை எமது தேசத்தின் முன்னோர்களாக கருதுகிறோம். அவ்வாறெனில், இது நாட்டின் உயிர் நாடியின் மீதும் கலாசாரத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். இது திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகும். மேற்குலக நாடுகளின் அனுசரணையில், எந்தவொரு சமயத்தையும் மதிக்காத, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் செயற்படும் நபர்களே இவ்வாறு செய்கிறார்கள். ஆனால், காவி உடை அணிந்தவர்கள் இருக்கும் வரை எமது இனத்தை அழிக்க முடியாது. துஷ்டர்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.
வெளிநாடுகளிலுள்ள பிக்குகளும் பெளத்தத்துக்காக பெரும் பங்காற்றி வருகிறார்கள். தாய்வானிலிருக்கும் போதகம சந்திம தேரர், பிரான்ஸிலுள்ள சந்த ரத்ன தேரர், அமெரிக்காவிலுள்ள வல்பொல பியனந்த தேரர், மலேசியாவிலுள்ள சன்னங்கரதேரர் போன்றோர் பெளத்தத்தை பாதுகாக்க பெரும் பங்காற்றி வருகிறார்கள். எமது சாசனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நாட்டின் தேசிய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். தற்போதையளவில் வடக்கு கிழக்கில் இருக்கும் பெளத்த வழிபாட்டுத் தலங்கள், பெளத்த தொல்பொருள் ஆதாரங்கள் பாரியளவில் அழிக்கப்படுகின்றன. குருந்தி விகாரை பிரச்சினையை நான் எனது கண்கூடாக பார்த்துள்ளேன். நெடுங்கேணியிலுள்ள விகாரையை தரைமட்டமாக்கி, அதன் மீது வேறு சமய வழிபாடுகளை முன்னெடுக்கிறார்கள். தற்போதே இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றால் அந்த மாகாணத்தை தனியாக்கினால் அல்லது தனியான அரசொன்று உருவாகினால் எந்தளவு அழிவு ஏற்படும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே நாட்டின் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதாக தெரிவித்து பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிளவடைய செய்யவே பயங்கரவாதிகள் முயற்சித்தார்கள். நாட்டை பிரிப்பதற்கு எதிரான பயங்கரவாத போரில் எமது மக்களை பறிக்கொடுத்துள்ளோம். அநேகமானவர்கள் அங்கவீனமுற்றார்கள். அவ்வாறானவொரு நிலைமைக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. தமிழ் மக்களே இதனால் பெரும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். தமிழ் பிரதிநிதிகள் தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகிறோம். சிறுவர்களுக்கு விடுதலை புலிகளின் சீருடைகளை அணிந்தது மாத்திரமல்லாமல், அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிவித்திருந்தார்கள். தற்போதிருந்தே சிறுவர்களின் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக வைராக்கியத்தை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்த ஒற்றுமையை பாதுகாப்போம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழத்தை உருவாக்க இடமளிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு மக்களும் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்பட்டால் இந்த தமிழ் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு செல்ல இடமளியோம். அவர்களின் குடும்பங்களுடன் யுத்தம் இடம்பெறும் இடங்களுக்கு அனுப்ப யோசனை முன்வைப்போம் என்றார்.