தென்னிந்தியாவில் ஈழத்துச் சிறுமி சாதனை

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் ஈழத்து சிறுமி உதயசீலன் கில்மிசா வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியானது நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து கில்மிசா மற்றும் கண்டி, புஸ்ஸல்லாவை நயப்பனவிலிருந்து அசானி ஆகிய இருவரும் இந்நிகழ்சசியில் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச்சுற்றுக்கு கில்மிசா தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரமாண்டமான இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் வெற்றிப் பெற்ற கில்மிஷாவிற்கு இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் வந்து வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்துள்ளார். பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாகியுள்ளார்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றார்.

இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றார். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்தார்கள். அவர்கள் தான் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். கில்மிசாவுக்கு வைத்தியராக வேண்டும் என்பது தான் கனவு. அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு வைத்தியராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இவருக்கு நடனம் நடிப்பு எல்லாக் கலையும் தெரியுமாம். கலையுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இவருடைய குடும்பமும் இவருக்கு முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.