அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான நிதியுதவியில் இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர்களை உலகவங்கி விடுவித்துள்ளது.
இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய ‘மீளெழுச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான அபிவிருத்தி கொள்கை செயற்திட்டத்துக்கு’ கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது.
நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையிலான தொடர் உதவித்திட்டங்களில் முதலாவது திட்டம் இதுவாகும்.
இத்திட்டமானது வழங்குவதாக இணக்கப்பாடு எட்டப்பட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பதாக நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகள் மற்றும் அடையப்படவேண்டிய இலக்குகளைக் கொண்டிருக்கின்றது.
அதன்படி இத்திட்டத்தின் கீழான முதற்கட்ட நிதியாக 250 மில்லியன் டொலர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட மறுசீரமைப்புக்கள் பற்றிய மதிப்பீட்டை அடுத்து இரண்டாம் கட்டமாக 500 மில்லியன் டொலர் நிதியை உலகவங்கி விடுவித்திருக்கின்றது.
‘பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு மாத்திரமன்றி, தனியார்துறை வளர்ச்சி மற்றும் நிலைமாற்றம் ஆகியவற்றுக்கும் பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியான தொடர் மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும்.
அதன்படி உலகவங்கியின் இந்த உதவி செயற்திட்டமானது பொருளாதாரத்தின் முழுமையான மீட்சியை உறுதிப்படுத்தல், பொருளாதார வளர்ச்சி இயலுமையை மேம்படுத்தல், தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் அரசாங்கத்துக்கு உதவுகின்றது’ என உலகவங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் எச்.ஹடாட்-ஸேர்வோஸ் தெரிவித்துள்ளார்.