இல்லாத புலிகள் அமைப்புக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சி – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ‘

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.