சம்பூரில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம்: இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு திட்டம்

சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக இந்தியாவின் அரச நிறுவனமான NTPC எனப்படும் National Thermal Power Corporation Limited நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

NTPC நிறுவனம் இந்தியாவில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்டை விட அதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கம்பி கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது பாரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

பகிர்தல்:

Posted in Uncategorized

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்தார்.

மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்.. இந்த உத்தரவாதம் மிக அவசியம்! செல்வப்பெருந்தகை செக்!

சென்னை: இலங்கைக்கு இந்தியா கடன் கொடுப்பதற்கு முன்பு, 13 -வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை அந்நாட்டு அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுவதாவது;

ராஜீவ்காந்தி

முன்னாள் பாரத பிரதமர் தலைவர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் திரு. ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் ஏற்பட்டது. தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருகிறது.

அதிகாரப் பகிர்வு

முழு அளவிலான உள்நாட்டுப் போர் உருவாகியிருந்த நேரத்தில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்திற்கும், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது. கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் இன்றளவும் தரப்படவில்லை.

இலங்கைக்கு கடன்

தற்போது, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கடன் தரப் போகும் இந்தியா, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும்.

13-வது சட்டத்திருத்தம்

மேலும், இலங்கைத் தமிழருக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.

பெப்ரவரியில் வருகிறார் புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தினை இராஜாங்கத்தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதேநேரம், அமெரிக்க தூதரகம் புதிய தூதுவரை வரவேற்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங்கை நியமிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜுன் 15ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.

அதன் பின்னர் அவர் தனது சமர்ப்பணங்களை செனட் சபையில் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் 20 இல் அமெரிக்க செனட் சபையினால் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் எதிர்வரும் பெப்பரவரியில் இலங்கைக்கு வருகை தந்து பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

ஜூலி ஜியூன் சுங், இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சுங்ரூபவ் கலிபோர்னியா சான் டியாகோ மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை பயின்றுள்ளார்.

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்ரூபவ் அமெரிக்க வெளியுறவு ஆலோசகராகவும், இராஜாங்க திணைக்களத்தின் பதில் செயலாளராக கடமையாற்றியுள்ளர்.

இதற்கு முன்னர் கம்போடியா, தாய்லாந்து, இரான், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்கவில்லை! ஏற்றுவிட்டதாக அரசியல்கட்சியொன்று மக்களை குழப்புவதாக ரெலோ குற்ச்சாட்டு

தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றறு விட்டோம் என தமிழ் கட்சி ஒன்று மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து 13ஐ ஏற்றுவிட்டார்கள் ஒற்றையாடசிக்குள் தமிழர்களை அடகு வைத்து விட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்ப முற்படுகிறது.

தமிழர்களுடைய இனப்பிரச்சனை அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார்கள்.

நாம் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு அனுப்பிய அறிக்கையில் 13 அரசியல் தீர்வாக ஏற்கவில்லை இதை மக்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன்.

சமஸ்டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குத் தீர்வாக நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம் இப்போதும் அதையே கூறுகிறோம்.

இலங்கையில் அரசியல் யாப்பில் புறப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நடைமுறை அற்றுக் காணப்படும் நிலையில் அதனை செயற்படுத்து மாறு இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கவே நாம் கூடி முடிவெடுத்தோம்.

13வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாணசபை அதன் கீழ் வருகின்ற அதிகாரங்களாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் 13க்கு அப்பால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என உறுதி அளித்திருந்தார்.

இந்தியாவுக்கு 13 தொடர்பில் நாம் அழுத்தங்களை வழங்காது இருப்பது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகி விடும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்தை அனுப்பி யுள்ளோம்.

இதை சரியாக விளங்கிக் கொண்ட தமிழ் கட்சி ஒன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13ஐ ஏற்று விட்டோம் என கூறி எதிராக மக்களை போராடு வருமாறு ஊடக சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியம் சார்ந்த தலைவர்கள் ஓரணியில் நிற்கும்போது அழைத்த ஒரு கட்சி மட்டும் வெளியில் நின்று கொண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறுகிறோம் 13வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக அமையாத நிலையில் இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் வரலாற்றுத் தவறுகளை விட்டவர்கள் மீண்டும் ஒரு தவறை விடாது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஒரு வளத்தினைக் கொண்டுவந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம் -ரெலோ செயலாளர் ஜனா

‘தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒரு வளத்தினைக் கொண்டு வந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஏறாவூர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், “மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட வுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார். தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது” என்றார்.

Posted in Uncategorized

போர் முடிந்துவிட்டது உண்மைதான் ஆனால் சமாதானம் பிறக்கவில்லை! சித்தார்த்தன்

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். எமது கொள்கையென்பது எங்கள் மக்களின் அபிலாஷைகளையே பிரதிபலிக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.

எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

போர் முடிவடைந்திருந்தாலும் சமாதானம் வந்துவிட்டதாக கூறமுடியாது. போர் ஏற்படுவதற்கு வழிசமைத்த காரணிகள் இன்னும் அவ்வாறே உள்ளன. இதற்கு சரியான பரிகாரம் தேட வேண்டும். புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி சொல்கின்றார். அதன் ஊடாகவேனும் நிலையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்றார்.

சுற்றுலாப் பயணிகளிடம் டொலர்களை அறவிடுமாறு உத்தரவு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு விசேட உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.

இதன் ஊடாக நாட்டுக்குள் வரும் டொலர்களை அதிகரிப்பது மத்திய வங்கியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வணிக வங்கிகள் இறக்குமதி பத்திரங்களை வழங்கும் போது, வங்கிக்கு கிடைக்கும் அந்நிய செலாவணிகளின் விகிதங்களுக்கு நிகராக பணத்தை வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையானது நிரந்தர வைப்பு வசதிகளின் வீதத்தையும் நிரந்தர கடன் வசதி வீதத்தையும் தலா இலக்கம் 50 என்ற வகையில் 5.50 வீதமாகவும் 6.50 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொட்டுக் கட்சியுடன் இணைந்து மைத்திரி கட்சியை அழித்து விட்டார்! சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அவர், நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டாம் என நான் கூறினேன். அதனை கவனத்தில் கொள்ளாது அந்த கட்சியுடன் இணைந்தனர். எனது ஆட்சிக்காலத்தில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றினேன்.

தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமையை அழித்து விட்டது. மிகவும் கவலைக்குரியது. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. யுத்தம் பயங்கரமாக நடைபெற்ற காலத்தில் நான் பொருளாதாரத்தை கட்டியெழுப்பினேன்.

ஒருவர் கூறுவது மற்றுமொருவருக்கு தெரியவில்லை. காலையில் கூறுவதை மாலையில் மாற்றி விடுகின்றனர். பெரிய சிக்கல். மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து விட்டனர்.

மொட்டு கட்சியுடன் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக கூறி வந்தேன். நாம் அழிந்து விடுவோம் என்று சுட்டிக்காட்டினேன். இதனை கூறியமைக்காக என்னை கட்சியின் அரசியல் சபையில் இருந்து விலக்கினர்.

என்னை அமைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கினர். நாங்கள் பல வருடங்களாக கூறியமை மைத்திரிபால சிறிசேன தற்போது கூறுகிறார். இந்த மனுஷனை விரட்ட வேண்டாமா? என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் இயங்கிய ஊழல் எதிர்ப்பு குழு மேற்கொண்ட விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சந்திரிக்கா நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் ஆணைக்குழுவிற்கு செல்லவில்லை. விசாரணை அதிகாரிகள் பண்டாரநாயக்க நினைவு மண்டப சூழலில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன

Posted in Uncategorized

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்கவில்லை – வினோ எம்பி!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அவருக்கு அரசு எந்தவித உதவிகளையும் வழங்காமை தொடர்பில் கவலையும் வெளியிட்டது.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் பேசுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம் பெற்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கணேஷ் இந்துகாதேவி மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.அரசு அவருக்கு பயண அனுமதியை வழங்கியதே தவிர வேறு எந்த உதவிகளையும் வழங்கவில்லை .அவரின் பாகிஸ்தான் பயணத்துக்கு எமது பொது அமைப்புக்களே நிதி உதவி செய்தன.இவ்வாறான நிலையில் தான் அவர் தங்கம் வென்று நாட்டுக்கும் வன்னி மண்ணுக்கும் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரைப்போன்ற எத்தனையோ திறமையான, நாட்டுக்கு பெருமை தேடித்தரக்கூடிய வீர,வீராங்கனைகள் வடக்கு,கிழக்கில் உள்ளனர். அவர்களுக்கு அரசு வாய்ப்புக்களையும் வசதிகளையும் வழங்க வேண்டும் என்றார்.