ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளைய (18) கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், நாளை (18) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை (18) காலை 9.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன் இதில் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன்

தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது.அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியுடன் உண்டா ?

இவ்வாறாக கடந்த சுமார் இரு மாத கால தமிழ் அரசியலை தொகுத்துப் பார்த்தால் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் தமிழ்ப் பரப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் இரண்டு துலக்கமான வெளியுறவு நிலைப்பாடுகள் வெளித்தெரிய காணலாம்.

ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இயங்கும் எல்லா கட்சிகளும் ஒருமித்த வெளியுறவு தரிசனத்தை கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. ஒரு ஜனநாயக பரப்பில் பல்வகைமை இருக்கும். உதாரணமாக தென்னிலங்கை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அமெரிக்க சார்பு வெளியுறவு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அதிகம் தேசிய தன்மைமிக்க ஒரு வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கும். எனவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் மாறும் பொழுது வெளியுறவு அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் பரப்பில் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் துலக்கமான இரண்டு போக்குகள் மேலெழுந்திருக்கின்றன.

இதில் இந்தியாவை நோக்கி கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகள் பிராந்திய பேரரசான இந்தியாவை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைப்பதை இறுதி இலக்கை கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. இந்த இடத்தில் ஒரு அடிப்படை ராஜீய நடைமுறையை சுட்டிக்காட்ட வேண்டும். இந்தியா இனப்பிரச்சினையில் இனிமேல்தான் தலையிட வேண்டும் என்றில்லை. ஏற்கனவே தலையிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் தலையீடு இருக்கிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு சாதகமாக இந்தியா தலையிட வேண்டும் என்பதே மேற்படி கட்சிகளின் உள்நோக்கமாக காணப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும்சரி சீனாவும் சரி இலங்கைத் தீவை கையாள்வது என்று வரும்பொழுது கொழும்பிலிருக்கும் அரசைத்தான் கையாண்டு வருகின்றன. கொழும்பை கையாள முடியாத போது அமெரிக்காவும் இந்தியாவும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு கொழும்பை பணிய வைக்கின்றன. இவ்வாறு கொழும்பை கையாளும் ஒரு அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் பொழுதுதான் இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நின்று இனப்பிரச்சினையில் தலையிடும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்புடனான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் தமிழ் மக்களை நெருங்கிவர இந்தியா தயாரா? அவ்வாறு இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வைப்பதற்கு 13ஆவது திருத்தம் ஒரு பொருத்தமான கொழுக்கியா?

தமிழரசுக் கட்சி இம்முயற்சியில் உள்ளே நுழைந்ததும் கோரிக்கையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் நலன்களுக்கும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கும் இடையிலான பொதுப் புள்ளிகளைக் கண்டுபிடித்து அவற்றை வைத்து பேரம் பேசத்தக்க தலைமைகள் தங்கள் மத்தியில் உண்டு என்பதை மேற்படி கட்சிகள் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாட்டை பார்க்கலாம். கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் பூகோள அரசியலைப் பற்றியும் புவிசார் அரசியல் பற்றியும் அதிகமாகப் பேசிய கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அவ்வாறு பூகோள புவிசார் அரசியலை வெற்றிகரமாக கையாள்வதன் மூலமே கிடைக்கும் என்று கூறிவந்த கட்சியும் அதுதான். எனவே ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் கட்சிகளை விடவும் துலக்கமான புத்திஜீவித்தனமான ஒரு வெளியுறவுத் தரிசனத்தை கொண்டிருப்பதாக தோற்றமளித்த அக்கட்சியானது அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை மற்றும் பூகோள அரசியல் அணுகுமுறை தொடர்பான வழி வரைபடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன் முன்வைப்பதை அக்கட்சி எதிர்க்கின்றதா? அல்லது அக்கோரிக்கையாக 13வது திருத்தம் முன் வைக்கப்படுவதை அக்கட்சி எதிர்க்கிறதா? 13தான் பிரச்சினை என்றால் இந்தியாவை நோக்கி என்கேஜ் பண்ணுவதற்கான அக்கட்சியின் வழி வரைபடம் என்ன?

ஏனைய கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்பாக அக்கட்சி பகிரங்கமாக தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்து பார்த்தால் இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற ஒரு வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மேற்படி கூட்டு கோரிக்கையை ஒன்றுகூடி தயாரித்த கட்சிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வர்ணிக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை இந்தியாவின் ஆட்கள் என்று சொன்னால் அதன் பொருள் இந்தியாவும் எதிரி என்பதுதான். எனவே இந்தியாவோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் இருக்கிறதா என்ற கேள்வி மேலும் பலமடைகிறது. தவிர அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்து பார்த்தாலும் அக்கட்சி இந்தியாவை கையாள வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை.

ஆயின், வேறு எந்தத் தரப்புக்களோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று அக்கட்சி நம்புகிறது? அது தொடர்பான வெளியுறவு வழிவரைபடத்தை அக்கட்சி முன்வைக்குமா? இந்தியாவை தவிர்த்துவிட்டு பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் எப்படி கையாளப் போகிறது என்பதனை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.கடந்த 12 ஆண்டுகளில் அந்த வெளியுறவுத் தரிசனத்தை நோக்கி அக்கட்சி என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது என்பதனையும் வெளிப்படுத்த வேண்டும். பிராந்தியத்துக்கு வெளியில் உள்ள பேரரசுகளை கையாள்வதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் அக்கட்சி தமிழ் அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இப்பொழுது தொகுத்து பார்க்கலாம். இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கை ஒன்றை அனுப்பும் விடயத்தில் தமிழ் கட்சிகள் இரண்டு போக்குகளை வெளிக்காட்டியுள்ளன. ஒரு ஜனநாயக பரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகள் இருக்கும். வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ள காரணத்தால்தான் கட்சிகள் ஒன்றுபடாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே வெளியுறவுக் கொள்கை பொறுத்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பது யதார்த்தம்.ஆனால் அவை நிலைப்பாடுகளாக மட்டும் இருக்க முடியாது. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை; அதுவும் நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை;இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவதற்காக கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தமிழ் மக்களைப் பொருத்தவரை ; வெளியுறவு நிலைப்பாடு என்பது இலட்சிய வாசகங்கள் அல்ல. அல்லது குழந்தைப் பிள்ளைகளுக்கு நிலவை கண்ணாடியில் காட்டும் விவகாரமும் அல்ல. மாறாக அது தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இன்றியமையாத ஒரு பகுதி. எனவே அது கற்பனையல்ல. விருப்பங்களும் அல்ல. மாறாக நடைமுறைப்படுத்த வேண்டிய இலட்சியங்கள். எனவே இந்தியாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி தமது வெளியுறவு நிலைப்பாடுகளை நோக்கி உழைக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். செய்வார்களா?

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க சர்வதேச அழுத்தம் தேவை- கூட்டாக வலியுறுத்த தயாராகும் தமிழ்க் கட்சிகள் ரெலோ தலைவர் செல்வம்

‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என கூட்டாக வலியுறுத்த தமிழ்க் கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானசெல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள் ஊரில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்து 13ஆவது திருத்தத்தை உடன் நடைமுறைப்படுத்தி, சமஷ்டித் தீர்வை நோக்கி நகர இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தும் ஆவணத்தை தயாரித்துள்ளனர்.

இந்தியப்பிரதமருக்கு அனுப்பிவைப்பதற்காக இந்த ஆவணம் வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த ஆவணத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இலங்கைக்கான இந்திய துாதரர் இந்தியா சென்றிருந்தமையினால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கை திரும்பியுள்ளமையினால் இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் இருந்து இந்திரன்,ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான் என்பதெல்லாம் போராட்டம் அல்ல! மனோ

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும் அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின் படி இது மிக சரியான முடிவாகும்.

’13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால், நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாழதிருக்கவில்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள் கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.

2005 முதல் 2009 வரை இறுதிப் போர் காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வடக்கு – கிழக்கு உடன் பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய ‘மக்கள் கண்காணிப்பு குழு’ என்ற மனித உரிமை இயக்கமும் வீதி போராட்டங்களை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்திப் போராடினோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்த படி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை. இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப் போராட்ட வரலாறு.

ஆகவே, ’13 என்பது முதல் படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். ஊடகங்களைச் சந்தித்து, ‘அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகின்றான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்’ என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல.

ஆகவே, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் நிலையில் ஆளும் கட்சி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

குறிப்பாக ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்கி வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இதனை உறுதி செய்யும் முகமாக சுதந்திர கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சிரேஷ்ட உப தலைவருமான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாசவிடம் வினாவிய போது,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று முற்றுமுழுவதுமாக மீறப்பட்டுள்ளது. எனவே பொறுமையிழந்த நிலையில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

பல முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்றும் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஆளும் கூட்டணியிலிருந்து சுதந்திர கட்சி விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டால் சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் மாத்திரம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை. மாறாக சுமார் 16 பேர் வரை சுதந்திர கட்சியுடன் இணைந்து வெளியேர்வார்கள் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய பாராளுமன்ற அமர்வு ஆளும் கட்சிக்கு சவால்மிக்கதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்தியா தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும்

இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று (15) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையிலும், இந்தியாவிலும் மாடுகள் தெய்வங்களாக பார்க்கப்படுகின்றன. பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்துவதாகும். காரணம் சூரியனே எமது வாழ்க்கைக்கு உதவியளிக்கின்றது.

அதற்கும் மேலதிகமாக திருவள்ளுவர் நாளும் இன்றாகும். வள்ளுவர் பெருமான் உலகுக்கு நல்ல பல நெறிகளை தந்துள்ளார் என்பதை மறக்க கூடாது. இன்று மலையகத்தை வழி நடத்துபவர்களாக ஜீவனும் தொண்டமானும், செந்தில் தொண்டமானும் உள்ளனர்.

மலையகத்தில் இந்திய உதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்திய வீட்டுத்திட்டங்கள் சில நிறைவடயும் நிலையில் உள்ளன.

இலங்கை மக்களின் தேவையறிந்து இந்தியா செயற்படுகின்றது. இதன்மூலம் இந்திய – இலங்கை உறவு சக்திமிக்கதாய் மாறுகின்றது. எதிர்காலத்தில் மலையகத்தில் பல வீட்டுத் திட்டங்ளை முன்னெடுப்போம். மலையக நண்பர்களின் வீடுக்கான கனவு நனவாகும்.

அனைத்து தமிழ், மக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்´ என்றார்.

இனியும் தாமதிக்க வேண்டாம் ! அரசாங்கத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் !

பணவீக்க உயர்வு, அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறை, மின்விநியோகத்தடை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இனியும் தாமதிக்காமல் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதாரத்தின் தற்போதைய எதிர்மறையான போக்கு சட்டத்தின் ஆட்சியிலும் நாட்டின் நிர்வாகத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

தற்போது முகங்கொடுக்கும் நெருக்கடிக்கு நிலைபேறான தீர்வை வழங்கக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட நிதிவழங்கல் கட்டமைப்புக்களின் உதவியைநாடவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மிகமோசமடைந்துவரும் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தீவிரமடைந்துவரக்கூடிய நிதிநெருக்கடி காரணமாக பொதுமக்கள் மத்தியில் சமத்துவமின்மை ஏற்படுவதுடன் அவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதிலும் சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும்.

அதுமாத்திரமன்றி சமூகத்திலுள்ள வறிய அல்லது இயலுமை மிகவும் குறைவான தரப்பினரே தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கீகாரம்பெற்ற முக்கியமான அனைத்து தரப்படுத்தல் நிறுவனங்களாலும் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 85 சதவீதமாகக் கணிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கடனளவு இப்போது 104 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இருப்பினும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதில் தோல்விகண்டிருக்கின்றன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பாரத பிரதமருக்கான ஆவணம் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு பாரத பிரதமரை வலியுறுத்தும் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்த கடிதத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இந்தியா சென்றிருந்தமையால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் நாடு திரும்பியுள்ளமையால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் கையொப்பமிடுவது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இறுதி வரை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இதில் கையொப்பமிடவில்லை.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஆவணத்தை அடுத்த கட்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அந்த கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.

எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு

நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.’

இவ்வாறு கூறியிருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுளை நடத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவுக்குத் தூதுவர் சென்றதன் காரணமாகக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படும் என்று நாங் கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் ஊட கவியலாளர்களைச் சந்திக்கின்றபோது நாங்கள் இந்த ஆவணத்தை முற்று முழு தாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக் கட் சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவ ணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெளிவாகக் கூறி இருக்கின் றார். ஆனால், சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்போது 13ஜ நடைமுறைப்படுத்தும்படி கூறும் போது வ டிவே லு பா ணி யி ல் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆவது திருத் தத்தை நடைமுறைப் படுத்துவதுதான்.

ஆகவே, நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.

தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை கைவிட்டு செயற்பட வேண்டும்’ என்றார்.

தேர்தல் அட்டவணையை சட்டமாக்குங்கள் – பெப்ரல் அமைப்பு

தேர்தல் கால அட்டவணையை நாட்டின் சட்டப்புத்தகத்திற்குள் உள்ளவாங்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் அட்டவணையை சட்டப்புத்தகத்திற்கு மாற்றுவதன் மூலம் தேர்தல்கள் பிற்போடப்படுவதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தி முடிப்பது அரசாங்கத்தின் கடப்பாடு எனவும் அந்தக் கடப்பாடு அரசாங்க்திற்கு காணப்படுமாயின் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்தும் படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.