தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் நாளை கையளிப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Posted in Uncategorized

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது.

அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதை பிரிட்டன் தாமதிப்பது ஏன் ? – எலியற் கொல்பர் கேள்வி

ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என்று பிரிட்டனில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டனில் வாழும் பரந்தளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டுமெனில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகத் தடைவிதிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கவேண்டும் என்று அண்மையில் 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்தன.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு பிரித்தானியாவின் பேர்மிங்கில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகைதரும்பட்சத்தில், சர்வதேச சட்டவரம்பின்கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பில் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் வலியுறுத்தியுள்ளது.

3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது – அமைச்சர் காமினி லொகுகே

மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே தற்சமயம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் களனி திஸ்ஸமின் நிலையத்திற்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கியதை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம்.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மின் வழமைக்கு திரும்பியுள்ளதால் மின்விநியோகத்தை தற்போதைய நிலையில் துண்டிக்காமலிக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம்.

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி துறை அமைச்சரால் குறிப்பிட முடியாது.

நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றின் தனியுரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்திரிக்காவுடன் இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச்சில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர்.

இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம கொழும்பு பத்திரிகை ஒன்றிடம் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் தலைமைக்காரியாலயத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத்திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது.

அந்த வெற்றிடத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அத்துடன் அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம்.

இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும்.

அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும். அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன்.

அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங்கள் இல்லை. மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் ஏனைய எதிரணிகளையும் இணைத்துப் பயணிப்பதற்கும் தயாரகவே உள்ளோம் என குறி்ப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பொலிஸ் மா அதிபர் பதவியை, பேராயருக்கு வழங்க வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை சமூக நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஞானசார தேரர் கலந்து கொண்டு பேசும்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடாத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளைய (18) கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், நாளை (18) காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளை (18) காலை 9.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன் இதில் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன்

தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது.அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியுடன் உண்டா ?

இவ்வாறாக கடந்த சுமார் இரு மாத கால தமிழ் அரசியலை தொகுத்துப் பார்த்தால் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் தமிழ்ப் பரப்பில் உள்ள கட்சிகள் மத்தியில் இரண்டு துலக்கமான வெளியுறவு நிலைப்பாடுகள் வெளித்தெரிய காணலாம்.

ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இயங்கும் எல்லா கட்சிகளும் ஒருமித்த வெளியுறவு தரிசனத்தை கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. ஒரு ஜனநாயக பரப்பில் பல்வகைமை இருக்கும். உதாரணமாக தென்னிலங்கை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அமெரிக்க சார்பு வெளியுறவு நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வரும் பொழுது அதிகம் தேசிய தன்மைமிக்க ஒரு வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கும். எனவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் மாறும் பொழுது வெளியுறவு அணுகுமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் பரப்பில் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் விடயத்தில் துலக்கமான இரண்டு போக்குகள் மேலெழுந்திருக்கின்றன.

இதில் இந்தியாவை நோக்கி கூட்டு கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகள் பிராந்திய பேரரசான இந்தியாவை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைப்பதை இறுதி இலக்கை கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. இந்த இடத்தில் ஒரு அடிப்படை ராஜீய நடைமுறையை சுட்டிக்காட்ட வேண்டும். இந்தியா இனப்பிரச்சினையில் இனிமேல்தான் தலையிட வேண்டும் என்றில்லை. ஏற்கனவே தலையிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் தலையீடு இருக்கிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு சாதகமாக இந்தியா தலையிட வேண்டும் என்பதே மேற்படி கட்சிகளின் உள்நோக்கமாக காணப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும்சரி சீனாவும் சரி இலங்கைத் தீவை கையாள்வது என்று வரும்பொழுது கொழும்பிலிருக்கும் அரசைத்தான் கையாண்டு வருகின்றன. கொழும்பை கையாள முடியாத போது அமெரிக்காவும் இந்தியாவும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு கொழும்பை பணிய வைக்கின்றன. இவ்வாறு கொழும்பை கையாளும் ஒரு அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் பொழுதுதான் இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நின்று இனப்பிரச்சினையில் தலையிடும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் கொழும்புடனான உறவுகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் தமிழ் மக்களை நெருங்கிவர இந்தியா தயாரா? அவ்வாறு இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வைப்பதற்கு 13ஆவது திருத்தம் ஒரு பொருத்தமான கொழுக்கியா?

தமிழரசுக் கட்சி இம்முயற்சியில் உள்ளே நுழைந்ததும் கோரிக்கையின் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் நலன்களுக்கும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கும் இடையிலான பொதுப் புள்ளிகளைக் கண்டுபிடித்து அவற்றை வைத்து பேரம் பேசத்தக்க தலைமைகள் தங்கள் மத்தியில் உண்டு என்பதை மேற்படி கட்சிகள் இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாட்டை பார்க்கலாம். கடந்த 12 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் பூகோள அரசியலைப் பற்றியும் புவிசார் அரசியல் பற்றியும் அதிகமாகப் பேசிய கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அவ்வாறு பூகோள புவிசார் அரசியலை வெற்றிகரமாக கையாள்வதன் மூலமே கிடைக்கும் என்று கூறிவந்த கட்சியும் அதுதான். எனவே ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் கட்சிகளை விடவும் துலக்கமான புத்திஜீவித்தனமான ஒரு வெளியுறவுத் தரிசனத்தை கொண்டிருப்பதாக தோற்றமளித்த அக்கட்சியானது அதன் புவிசார் அரசியல் அணுகுமுறை மற்றும் பூகோள அரசியல் அணுகுமுறை தொடர்பான வழி வரைபடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன் முன்வைப்பதை அக்கட்சி எதிர்க்கின்றதா? அல்லது அக்கோரிக்கையாக 13வது திருத்தம் முன் வைக்கப்படுவதை அக்கட்சி எதிர்க்கிறதா? 13தான் பிரச்சினை என்றால் இந்தியாவை நோக்கி என்கேஜ் பண்ணுவதற்கான அக்கட்சியின் வழி வரைபடம் என்ன?

ஏனைய கட்சிகளின் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்பாக அக்கட்சி பகிரங்கமாக தெரிவித்து வரும் கருத்துக்களை தொகுத்து பார்த்தால் இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற ஒரு வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் உண்டா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மேற்படி கூட்டு கோரிக்கையை ஒன்றுகூடி தயாரித்த கட்சிகளை இந்தியாவின் கைக்கூலிகள் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வர்ணிக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை இந்தியாவின் ஆட்கள் என்று சொன்னால் அதன் பொருள் இந்தியாவும் எதிரி என்பதுதான். எனவே இந்தியாவோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாடு அக்கட்சியிடம் இருக்கிறதா என்ற கேள்வி மேலும் பலமடைகிறது. தவிர அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்து பார்த்தாலும் அக்கட்சி இந்தியாவை கையாள வேண்டும் என்ற வெளியுறவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தெரியவில்லை.

ஆயின், வேறு எந்தத் தரப்புக்களோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்று அக்கட்சி நம்புகிறது? அது தொடர்பான வெளியுறவு வழிவரைபடத்தை அக்கட்சி முன்வைக்குமா? இந்தியாவை தவிர்த்துவிட்டு பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் எப்படி கையாளப் போகிறது என்பதனை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.கடந்த 12 ஆண்டுகளில் அந்த வெளியுறவுத் தரிசனத்தை நோக்கி அக்கட்சி என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது என்பதனையும் வெளிப்படுத்த வேண்டும். பிராந்தியத்துக்கு வெளியில் உள்ள பேரரசுகளை கையாள்வதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் அக்கட்சி தமிழ் அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இப்பொழுது தொகுத்து பார்க்கலாம். இந்தியாவுக்கு கூட்டுக் கோரிக்கை ஒன்றை அனுப்பும் விடயத்தில் தமிழ் கட்சிகள் இரண்டு போக்குகளை வெளிக்காட்டியுள்ளன. ஒரு ஜனநாயக பரப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகள் இருக்கும். வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ள காரணத்தால்தான் கட்சிகள் ஒன்றுபடாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே வெளியுறவுக் கொள்கை பொறுத்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பது யதார்த்தம்.ஆனால் அவை நிலைப்பாடுகளாக மட்டும் இருக்க முடியாது. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை; அதுவும் நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை;இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறுவதற்காக கிடைக்கக்கூடிய எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தமிழ் மக்களைப் பொருத்தவரை ; வெளியுறவு நிலைப்பாடு என்பது இலட்சிய வாசகங்கள் அல்ல. அல்லது குழந்தைப் பிள்ளைகளுக்கு நிலவை கண்ணாடியில் காட்டும் விவகாரமும் அல்ல. மாறாக அது தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் இன்றியமையாத ஒரு பகுதி. எனவே அது கற்பனையல்ல. விருப்பங்களும் அல்ல. மாறாக நடைமுறைப்படுத்த வேண்டிய இலட்சியங்கள். எனவே இந்தியாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சரி தமது வெளியுறவு நிலைப்பாடுகளை நோக்கி உழைக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். செய்வார்களா?

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க சர்வதேச அழுத்தம் தேவை- கூட்டாக வலியுறுத்த தயாராகும் தமிழ்க் கட்சிகள் ரெலோ தலைவர் செல்வம்

‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என கூட்டாக வலியுறுத்த தமிழ்க் கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானசெல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள் ஊரில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்து 13ஆவது திருத்தத்தை உடன் நடைமுறைப்படுத்தி, சமஷ்டித் தீர்வை நோக்கி நகர இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தும் ஆவணத்தை தயாரித்துள்ளனர்.

இந்தியப்பிரதமருக்கு அனுப்பிவைப்பதற்காக இந்த ஆவணம் வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த ஆவணத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இலங்கைக்கான இந்திய துாதரர் இந்தியா சென்றிருந்தமையினால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கை திரும்பியுள்ளமையினால் இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

அமெரிக்காவில் இருந்து இந்திரன்,ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான் என்பதெல்லாம் போராட்டம் அல்ல! மனோ

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன் எனவும் அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல் தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

“நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்மாத இறுதியில் அரசியல் போராட்டத்தை அறிவித்துள்ளார். உண்மையில் அவரது கட்சி நிலைப்பாட்டின் படி இது மிக சரியான முடிவாகும்.

’13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்’ என்றால் மாற்றுப் பயணம் இருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால், நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள் வாழதிருக்கவில்லை. புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள் கூட, மாற்றுப் பயணத் திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல் நேர்மையை மதித்தார்கள்.

2005 முதல் 2009 வரை இறுதிப் போர் காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வடக்கு – கிழக்கு உடன் பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாகிய ‘மக்கள் கண்காணிப்பு குழு’ என்ற மனித உரிமை இயக்கமும் வீதி போராட்டங்களை உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்திப் போராடினோம்.

மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்த படி நான் அறிக்கை அரசியல் செய்யவில்லை. இது இங்கே சிங்கத்தின் குகையில் இருந்தபடி நான் நடத்திய என் நேர்மையான அறப் போராட்ட வரலாறு.

ஆகவே, ’13 என்பது முதல் படி கூட கிடையாது. அதை தீண்டவும் மாட்டோம். அதற்கு அப்பால் போயே தீருவோம்’ என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

13 இற்கு அப்பால் செல்லும் அந்த மாற்றுப் பயணம் ஊடக சந்திப்புகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். ஊடகங்களைச் சந்தித்து, ‘அமெரிக்காவில் இருந்து இந்திரன் கொண்டு வருகின்றான். ஆபிரிக்காவில் இருந்து சந்திரன் கொண்டு வருகிறான்’ என்று அறிக்கை இடுவதெல்லாம் போராட்டம் அல்ல.

ஆகவே, நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் போராட்ட அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கின்றேன். அது ஒருநாள் போராட்டமாக இல்லாமல், தொடர் போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்” எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.