திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல்

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் – ரெலோ தலைவர் செல்வம்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று (11.01) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்தபோதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இக்கடிதம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.

கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.

தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் – இராதாகிருஷ்ணன்

இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று ( ஞாயிற்றுக்கிழ்மை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,” இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி. – என்றார்.

Posted in Uncategorized

‘சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும்’ சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கு மீண்டும் பயணம் செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைக் கடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனா எமது உயிர் தோழன் – பிரதமர் மஹிந்த

‘சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட ‘இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி’க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீக்கு பரிசளித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம். வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.

உங்கள் நாட்டிலிருந்து புனித யாத்திரைக்கு வந்த ஃபாஹியன் துறவி பதித்த பதிவுகள் இன்றும் நம் வரலாற்றின் வண்ணமயமான பகுதியாகும். அன்று பாஹியன் துறவி மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் எமது நாட்டுக்கு வந்ததைப் போன்று இன்றும் சீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகின்றனர்.

சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல்வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன.

அன்று ஏற்படுத்தப்பட்ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ‘எமது இரப்பர் உங்களிடமிருந்து அரிசி’. அதேபோன்று இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.

‘உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்துக் கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.’

நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

கொரோனா தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகிற்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம்.

சௌசன்லாய் ஆரம்பித்த அணிசேரா கொள்கையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அந்தக் கொள்கை நம்மைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் பலமாக இருந்தது.

அதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் நாடு கெரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்நேரத்தில் ஒரு சீன பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என நம் நாட்டு மக்கள் நட்புடன் பிரார்த்தித்தனர். உங்கள் நாடு கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.

எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் பெருமையுடன் வாழ்த்துகிறோம். “Belt and road” என்ற எண்ணக்கரு நமது நட்பை மேலும் மேம்படுத்தும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களே, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாம் அண்மையில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

அத்துடன், இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.

இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சீ தொலவத்த, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன வர்த்தக பிரதி அமைச்சர் க்வான் கெமின், உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் வு ஜின்ஹொங், இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட சீன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சுசிலுக்குக் கிடைத்த அதிர்ஷ்ட சீட்டு எனக்கும் விரைவில் – சிறிசேன

தெல்கந்த சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில் அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை உற்று நோக்கினால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல் தான் காணப்படுகின்றது என்றும் அன்றைய நாட்களில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமை மற்றும் வீட்டு பெண்கள் அடுப்பை மூட்டும் போது தகாத வார்தைகளால் பேசினர். அவற்றை செவிமடுக்க அன்று சிறிமாவோ பண்டார நாயக்க தயாராக இருக்கவில்லை.

நேற்று நான் பேசியதைக் கேட்ட, சமூக ஊடகங்களில் சிலர், நீங்களும் அரசாங்கத்தை கொண்டு வழிநடத்தி னீர்கள் தானே என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

என்னுடைய அரசாங்கம் வேறுபட்டது என்றும் இன்று அரசாங்கத்தை நடத்துபவர்கள் அன்று தமது அரசாங்கத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்பது நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்று தம்மை இழிவுபடுத்தியவர்கள் இன்று மக்களின் அவமானத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாளாகியுள்ளனர் தானே என அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை.

இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொண்டு அஞ்சலியைச் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின்போது வன்முறைக் கும்பலொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளோம் – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இது தெளிவானதொரு நாட்டுக்கானதும் மக்களுக்கானதுமான புதிய பயணத்திற்கான ஆரம்பமாகும் என்று சு.க. தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தின அனுஷ்டான நிகழ்வு கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கேள்வி : சு.க.வின் தற்போதைய நிலை குறித்து உங்கள் நிலைப்பாடு ?

பதில் : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி : புதிதாக தனி வழியில் பயணிப்பதற்கு தயாராகிறீர்களா?

பதில் : ஆம். தெளிவாக புதிய பயணத்தையே ஆரம்பித்துள்ளோம். நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி : நீங்கள் தற்போது காரசாரமாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளீர்களல்லவா?

பதில் : நான் எப்போதும் காரசாரமாகவே பேசுவேன்.

கேள்வி : நடைமுறை அரசியல் குறித்து ஏமாற்றமடைந்துள்ளீர்களா?

பதில் : நான் என்றுமே ஏமாற்றமடைபவன் அல்ல. இந்நாட்டு அரசியல் நானே மகழ்ச்சியுடன் இருக்கின்றேன். காரணம் சாதாரண கிராம இளைஞனாக இருந்து ஜனாதிபதியாகியிருக்கின்றேன்.

கேள்வி : நல்லாட்சி அரசாங்கத்தினால் விற்கப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்பதாகக் கூறினார்களே?

பதில் : நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய சொத்துக்களை விற்பதற்கு நான் எதிர்ப்பினை வெளியிட்டேன். எனது எவ்வித தலையீடும் இன்றியே துறைமுகத்தையும் விற்றனர். நான் அறிந்த வகையில் நல்லாட்சியில் வேறெந்த விற்பனையும் இடம்பெறவில்லை என்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பம்; தற்காலிக நிர்வாகம் தெரிவு!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(8)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே வீ.ஆனந்தசங்கரி வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.

தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம் என்றார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்ட பொழுது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.