அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் – திஸ்ஸ விதாரண

நாட்டின் பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மக்களின் உதவியுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் தொற்றுடன் அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களுமே காரணமாகும்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் என்றவகையில் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது எம்முடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்வதில்லை என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சோசலிச மக்கள் முன்னணியின் புதிய செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்துவருகின்றது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு பிரச்சினைக்கும் முகம்கொடுக்க நேரிடும் அபாயம் இருக்கின்றது.

இந்த நிலை ஏற்படுவதற்கு கொவிட் தொற்று பிரதான காரணமாக இருந்தாலும் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் தீர்மானங்களும் இதற்கு பாரியளவில் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. குறிப்பாக எமது ஏற்றுமதி 30வீதம் குறைவடைந்துள்ளது.

அதேபோன்று கடந்த மூன்று மாதங்களில் இறக்குமதி செலவு பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. ஏற்றுமதி குறைவதென்பது எமது வருமானம் குறைவடைவதாகும்.

அத்துடன் நாட்டில் இருக்கும் மொத்த வெளிநாட்டு செலாவனி 1.3பில்லியனாகும். இந்த தொகை எமக்கு ஒரு மாதகாலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவே போதுமானது.

அதேபோன்று சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச் ரேடிங் நிறுவனம் எமது பொருளாதாரத்தை மூன்று சீ தரத்தில் இருந்து 2 சீ தரத்துக்கு தரமிறக்கி இருக்கின்றது. இன்னும் ஒரு தரம் குறைந்தால் எமது நாடு பங்குராேத்து நிலைக்கு செல்லும்.

அதன் காரணமாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்ய வங்கிகளில் நாணய கடிதம் திறக்கும் வசதிகளும் இல்லாமல் போயிருக்கின்றது. அதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையே ஏற்படும்.

அத்துடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்களும் பாரிய அர்ப்பணிப்பை செய்தோம். ஆனால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்த பின்னர் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும்போது எம்முடன் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதில்லை.

அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றுவரைக்கும் எம்முடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தியதில்லை. நாட்டின் அரசியல் நிலை தொடர்பாக அரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாங்கள் நேரம் கேட்டிருந்தோம்.

அதற்கு, அரசியல் தொடர்பில் கைப்பதாக இருந்தால் பிரமத் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடுமாறும் நிதி தொடர்பாக கதைப்பதாக இருந்தால் நிதி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுன் கலந்துரையாடுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோதும் நாங்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை வகித்திருந்தோம். அப்போது அரசியல் நிலைமை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருடன் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம். அந்த நிலைமை தற்போது இல்லை.

அதனாலே நாங்கள் நாடு எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண எமது கருத்துக்கள் மற்றும் ஆலாேசைகளை நாங்கள் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அறிவிக்கின்றோம்.

எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையின் உண்மை தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் மக்கள் நிலைமையை உணர்ந்து தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறான நடவடிக்கையை அரசாங்கத்திடம் காணமுடியாமல் இருக்கின்றது என்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(13.01.2022) குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.முற்றவெளியில் விடுதலைப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இன்று முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.நகரில் அமைந்துள்ள நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்திற்கு அருகில் சிறைக்கூண்டு மாதிரி அமைத்து அதனுள் இடம்பெற்ற நிகழ்வில் பொங்கல் பொங்கிச் சூரியனுக்குப் படைக்கப்பட்டு இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டதுடன் அவர்களின் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்திடமும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் உள்ளிட்ட சிலர் அரசியல் கைதிகளின் ஆடைகள் அணிந்து கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வுகளில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ்.மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்திரு. ஜெபரட்ணம் அடிகளார், தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமான து.ஈசன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்மக்கள் கூட்டணியின் இளைஞரணி இணைப்பாளர் கே.கிருஷ்ணமீனன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளர் சி. இளங்கோவன்யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், வலி.வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கனகசபை விஷ்ணுகாந், சிறையிலிருந்து முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ஆகியோரால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தி நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான சபேசன் உள்ளிட்ட சிலருக்கும், இலங்கை நிழல உலகதாதா அங்கொட லொக்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.

அவரது உடல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டமை தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து தமிழ்நாட்டு சிபிசிஐடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கொடலொக்காவின் நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தபோது கைதாகியுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பொழுது அங்கொட லொக்காவிற்கும், சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

முன்னாள் விடுதலை புலி நிர்வாகி சபேசன் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிபிசிஐடி பொலிசார் சிறையில் இருந்த சபேசன் உட்பட 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து வெளியேறிய அங்கொட லொக்கா மற்றும் சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன், சின்னசுரேஷ்,இ ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை இரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்ததாகவும், அவர்கள் ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக்கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

மாட்டு வண்டிகளில் மண்ணெண்ணெய் விற்பனை நாடு எங்கே செல்கிறது!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்களுக்கு மண்ணெண்ணைய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரிசையில் கால் வலிக்க காத்திருந்து வாக்குவதை விட வீட்டிற்கு அருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியில் இருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

5 தமிழ் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல்

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் – ரெலோ தலைவர் செல்வம்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று (11.01) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்தபோதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இக்கடிதம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.

கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.

தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் – இராதாகிருஷ்ணன்

இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று ( ஞாயிற்றுக்கிழ்மை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,” இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி. – என்றார்.

Posted in Uncategorized