ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களை பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி விசனம்

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணையொன்று அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று(21.09.2023) இடம்பெற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில்,

”ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்திய உளவு அறிக்கை

சிலரின் செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் எவ்வாறு துரோகிகளாக பார்க்கப்பட்டார்களோ அதேபோல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மக்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா தமது உளவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள போதும், அதற்கு முக்கியத்துவம் வழங்காது தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்க முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதை விட இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவைப் பிரிப்பதற்காகவா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியம்.

அத்துடன், தாக்குதல் விடயத்தில் சர்வதேச விசாரணையைக் கோரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்குத் தாம் வலுவாக ஆதரவை வழங்குவேன்.

இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அசாம்பாவிதங்கள் தொடர்பிலும் குரல் எழுப்புமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதார மண்டலத்தை அண்மித்துள்ள சீன ஆய்வுக் கப்பல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த தரவுகளுக்கு அமைய நேற்று முதல் குறித்த சீன கப்பல் இந்தியாவிற்கு சொந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், மிகக் குறைந்த வேகத்தில் பயணிக்கிறது.

மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நேற்று காலை நுழைந்த Shi Yan 6 கப்பலை நிக்கோபார் தீவுகள் அருகே அவதானிக்க முடிந்தது.

இலங்கை நோக்கி நேற்று பகல் வந்த கப்பல், நேற்று மாலை வங்காள விரிகுடாவை நோக்கி திரும்பி, நிக்கோபார் தீவுகளுக்கு உரிமம் கோருகின்ற இந்தியாவிற்கு சொந்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் கடல் எல்லையை அண்மித்து தமது பயணத்தை மெதுவாக முன்னெடுத்தது.

இவர்களின் புதிய பாதையை அவதானிக்கும்போது, ​​Ninety East Ridge எனப்படும் கடலின் அடிவாரத்திலுள்ள மலைத்தொடரின் மேற்பரப்பில் பயணிக்கின்றமை தெரிகிறது.

இதற்கு முன்னர் வந்த,YUAN WANG 5 கப்பல் ஊடாகவும் சீனா கடந்த மூன்று ஆண்டுகளில், Yen Hong எனும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலையும் பயன்படுத்தி குறித்த பகுதிகளில் ஆய்வுகளை நடத்தியது.

இதனிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவும் அமெரிக்காவும் கடலுக்குள் உள்ள மலைகளைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள் – வினோ எம்.பி.

சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைமைகுளு உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சர்வதேச சமாதான தினம் இந்த தினத்தில் இன்று போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும்

போர்க்குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நாட்டில் சமாதானம் அமைதி என்பது எட்டாத கிட்டதா ஒன்றாக இருக்கின்றது இங்கே ஆட்சி செய்கின்றவர்களுக்கு சமாதானம் என்பது தேவையில்லாத விடயமாக இருக்கின்றது. ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி பௌத்த மேலதிக்க சிந்தனையுடன் பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறதுடித்து கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு தமிழ்மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வினை இனப்பிரச்சினைக்கான தீர்ப்பதற்கான எந்த வழிமுறையினையும், பொறிமுறையினையும் தேடாமல் குறிப்பாக தொடர்ச்சியாக அரசியல் செய்வதற்காக நாட்டை ஆழுவதற்காகத்தான் சமாதான முயற்சிகளில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்கள்.

இறுதி போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் உங்களுக்கு நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம் நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள் என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களைத்தான் நாங்கள் இந்த கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி என்பதை விட அது ஒரு போராளிகளின் புதைகுழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு சர்வதேச நிபுணர்குழுவினை கொண்டுவந்து அவர்களுக்கு முன்னால்தான் இந்த புதைகுழியினை தோண்ட வேண்டும் இங்குள்ளவர்களை கொண்டு பரிசோதிக்கின்ற பட்சத்தில் முடிவினை காணமுடியாது இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை கடந்த காலங்களில் இருந்து வருகின்றது

இனிவரும் காலங்களிலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் எல்லா விடயங்களிலும் சர்வதேச விசாரணையினை ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் கண் திறக்கப்பட வேண்டும் வீதிகளில் புலம்புகின்ற மக்களின் குரல் அவர்களின் காதுகளுக்கு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : சர்வதேச விசாரணைகளுக்கு தயார் – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தினால் அதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

52 நாள் அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் தோற்கடித்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான ‘பிளேன் பி’ சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பெரேரா எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன். எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுவீர்கள். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்க்கட்சிகளின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிரோஷன் பெரேரா சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இந்த குண்டுத்தாக்குல் சிறுப்பிள்ளைத்தனமானதாக இருக்கலாம். ஆனால் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இச்சம்பவம் சிறுப்பிள்ளைத்தனமானதல்ல, இவரின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் .பிள்ளையானுக்கு எதிராக வெகுவிரைவில் முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.

இதன்போது உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதலை நடத்தியவர், ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்தவர்,திரிபோலி குழுவுக்கு தலைமை தாங்குவர் எமக்கு இடையூறு விளைவிக்கிறார்.இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பது அரசாங்கத்தின் தவறு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தார். அக்காலப்பகுதியில் சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினருக்கும், பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. 52 நாள் அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டவுடன், பிளேன் பி சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆகவே பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என்றார்.

Posted in Uncategorized

தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் ஏகமனதான இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இன்று (21) நடைபெற்ற அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுவில் குறித்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கஜேந்திரன் எம்.பி. மீதான தாக்குதல்: முறையான விசாரணை அவசியம்! – சபையில் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.

திருகோணமலையில் பொலிஸார் முன்னிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை அவசியம் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். அதேவேளை, திருகோணமலையில் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” – என்று ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறினார்.

Posted in Uncategorized

தமிழர் பகுதியில் இனவாதத்தினை கக்கும் பௌத்த மதத்தினர்:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

பௌத்த மதத்தினர் இன வாதத்தினை கக்குகின்ற வகையில் இன்றும் செயற்பட்டு வருகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(20.09.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கருப்பத்தான்குளம் பகுதியில் கூடுதலாக மக்கள் இன்றைக்கும் தங்கள் காணிகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள்.

அச்சமடைந்துள்ள மக்கள்

ஆனால் அருகில் இருக்கின்ற பெரும்பான்மையின கிராம மக்கள் அதை ஒரு மயான காணியாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மயான காணியை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.

மேலும், அனைத்து இனத்தவர்களும் சரிசமமாக வாழக்கூடிய உரித்துடையவர்கள் என்ற முறையிலே வாழ வேண்டும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நொச்சிக்குளம் , புளியங்குளம் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் முதலில் இரண்டு படுகொலைகளும் அதன் பின் மூன்று கொலைகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.” தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரின் பெயரை மாற்றி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்

சீன முதலீட்டு திட்டமான கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிதி நகரமாக பெயர் மாற்றம் செய்து துபாய் மற்றும் அபுதாபி முதலீட்டாளர்களுக்காக மீள உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) கொழும்பு நிதி நகரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்து கடலை நிரப்பி உருவாக்கப்பட்ட 269.3 ஹெக்டேர் பரப்பு, கொழும்பு துறைமுக நகரம் என பெயரிடப்பட்டது.

இந்த பகுதியை பராமரிப்பதற்காக 2021 மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைவாக, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு எனும் பெயரில் தனியான நிர்வாகக் கட்டமைப்பானது உருவாக்கப்பட்டது.

Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு – புனானையில் Batticaloa Campus என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக M.L.A.M.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் Batticaloa Campus உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நி​லையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்தது.

பின்னர் குறித்த கட்டடத்தை அரசு பொறுப்பேற்றது.

இதன் பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் படையினரால் இன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

Google, Facebook, YouTube, TikTok நிறுவனங்கள் நாட்டை விட்டுச் செல்லும் அபாயம்

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும்

கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான சாத்தியமான தாக்கம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலீட்டாளர்களை ஒருபோதும் ஈர்க்க முடியாது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.