இந்திய பிரதமருக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது 29ஆம் திகதி கைச்சாத்திடப் படலாம் சுரேந்திரன்

இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் தயாரித்த கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்செய்யும் நோக்கத்திற்காக கூடினர்.
அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வரைபும் பரிசீலிக்கப்பட்டது. இரண்டு வரைபுகளுக்கு இடையிலும் பெரிய வித்தியாசங்கள் காணப்படாமையினால் தமிழரசுக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபில் உள்ள விடயங்களையும் சேர்த்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.

அன்று மாலைவரை நடந்த கலந்துரையாடலில் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்திற்கான வரைபை இறுதி செய்தனர். இணக்கம் காணப்பட்ட விடயங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட வரைபு மறுநாள் தலைவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சீர் செய்வதற்காக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து தலைவர்களுடைய வழிகாட்டுதலோடும் வரைவு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 29-12-2021, அனைத்து தலைவர்களின் வசதிக்கேற்ப கொழும்பில் இக்கடிதத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இவ்விடயத்தை செவ்வனே நிறைவேற்றி தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தம் மக்களை மீட்க விட்டுக்கொடுப்போடும், அர்ப்பணிப்போடும் ஒருமித்து செயலாற்ற அனைத்து தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? – ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன.

இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்வாக அமையுமென பொருளாதார நிபுணர்கள், பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான தீர்மானமொன்றை எடுக்காது தடுமாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

மாகாண சபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை என்பது இந்தியாவுக்கு தெரியும். அதை கையாள வேண்டியது இந்திய தரப்பு. எங்களை பொறுத்தவரை இந்த விடயத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் நாங்கள் இல்லை.சீனாவின் செயற்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். அதற்கு மேலாக இது இரு நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

Posted in Uncategorized

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்கும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ” தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கினறோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.

எமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி என்றார்.

Posted in Uncategorized

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நா.வின் தலையீட்டை முற்றாக எதிர்க்கின்றோம் – ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை தாம் எதிர்ப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை சந்தித்த போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , புதிதாக நியமனம் பெற்ற அனைத்து தூதுவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல நாடுகளுடனும் இலங்கை அரசாங்கம் வலுவான மற்றும் கணிசமான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழான வெளியுறவுத் திட்டத்தின் போது, ஆபிரிக்க கண்டத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என இலங்கை உணர்ந்தது.

ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, ஆபிரிக்க ஒன்றியத்துடன் உறவுகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்பார்க்கிறது.

தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்ட நாட்டின் கட்டமைப்புத் திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் கட்டமைப்புக்கள் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டிருப்பினும் கூட, நாடு கணிசமான வெற்றியை அடைந்துள்ளன. 30 வயதிற்குட்பட்ட 90 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளும் வழங்கப்படுகிறது என்றார்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது, மக்கள் தொடர்ந்தும் தொழில் புரிவதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் ஆடைத்தொழில் போன்ற பொருட்களின் தன்மையை மாற்றிய தனியார் துறையின் பின்னடைவு குறித்து அமைச்சர் தூதுவர்களுக்கு சுருக்கமாக விளக்கினார்.

பணம் அனுப்புதல் குறித்து குறிப்பிட்ட அமைச்சர் , வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். பல நாடுகளுடனான அரசாங்கங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை 30 வருடகால மோதலினால் அழிக்கப்பட்டதாக விளக்கிய வெளிநாட்டு அமைச்சர், அத்தகைய அளவிலான மோதல்கள் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏனைய நாடுகள் மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும், எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல்களினால் எஞ்சிய பிரச்சினைகளை சமாளிப்பதில் பணியாற்றும் காணாமல் போனோர் அலுவலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து குறிப்பிட்டார்.

அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் , மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பெண் நீதியரசரால் தலைமை தாங்கப்படுவதாகவும், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கி இலங்கை பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை எதிர்த்ததாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தரவுகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஐ.நா. வின் ஒரே நோக்கமாதலால், அதனால் ‘விசேட வழிமுறை’ அமைக்கப்படுவதை அமைச்சர் எதிர்த்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் ஆதாரமாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் புரிந்துணர்வு மற்றும் சர்வதேச மேடைகளில் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஒரு தனிப்பட்ட நாட்டின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு இடமும் நேரமும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஈரானுக்கு ‘தேயிலை’ கொடுத்து கடனடைக்க முஸ்தீபு

ஈரானிடம் எண்ணை பெற்ற கடன் 250 மில்லியன் டொலரை இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்து அடைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.

மாதாந்தம் 55 மில்லியன் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்து குறித்த கடனை முடிக்கவுள்ளதாக அமைச்சது ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.

2022ம் வருடம் அரசாங்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார்.

பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளது.

13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தில் தமிழ் பேசும் தரப்பு இணக்க நிலை ஏற்பட்டுள்ளது

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டல் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்ததுடன், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க தீர்மானத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அழைக்கப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை சிறப்பம்சம்.

புளாட் சார்பில் சித்தார்த்தன் தமக்குப் பதிலாக ஆர்.ராகவனை அனுப்பியிருந்தார். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமது சார்பில் அமீர் அலியை அனுப்பியிருந்தார்,சி.வி விக்னேஸ்வரன்,பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

கூட்டத்துக்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார்.

தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் நேற்று மாலை முழுவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.

மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, குருசாமி சுரேந்திரன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மாவை,ஜனா,சுமந்திரன், ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணி அளவில் நகல் வடிவதற்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது. தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் ஆவண வடிவம் தயாரிக்கப்பட்டது.

ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அவையும் அவற்றை ஆராய்ந்து சம்மதித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப் படுவதோடு, இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை இறுதிப்படுத்தி அதில் சகல தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக இந்த செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செம்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Posted in Uncategorized