உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதியில்லை : நாடகமே அரங்கேற்றப்படுகிறது என்கிறார் பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் செயற்படுத்தப்படவில்லை. மாறாக நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாகக் கூறியவர்கள் நத்தார் தினத்தன்று மதுபான விற்பனைக்கு அனுமதி கோருகின்றனர்.

இதன்மூலம் நத்தார் தினத்தையும் இழிவுபடுத்துகின்றனர். இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? என்றும் பேராயர் கேள்வியெழுப்பினார்.

கனேமுல்ல தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிறு ஆராதனையின்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்று வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வாழ முடியாத சூழல் இந்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதாக சிலர் கூறியிருக்கின்றனர். எனினும் அதனை செய்யக் கூடியவர் யார் இருக்கிறார் என்பது எமக்கு தெரியாது.

மதத் தலைவர்கள் என்ற ரீதியில் கீழ் மட்டத்தில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் பங்கேற்றால் நாம் செய்வது எமது மதத்தைக் காட்டிக் கொடுப்பதேயாகும்.

அது மதத் கொள்கைகளை முழுமையாக நாயொன்றுக்கு வீசும் வகையிலான செயற்பாடாகும். நீண்ட காலமாகப் பயின்ற மதக் கொள்கைகளை அரசியல்வாதிகளின் கைக்குட்டையாக்குகின்றோம்.

மதத் தலைமைத்துவம் எப்போதும் சுயாதீனமானதாகக் காணப்பட வேண்டும். தவறுகள் இடம்பெறும்போது அதனை சுட்டிக்காட்டக் கூடிய வகையில் மதத் தலைவர்கள் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் அவர்கள் அந்த மதத்தை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும். தற்போது நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் மேடைகளில் மதத் தலைவர்கள் அமர்ந்திருப்பது பொறுத்தமான செயல் அல்ல.

மதத் தலைவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களாக முடியாது. அவர்கள் அரசியலிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். மதத்தலைவர்களது ஒரே கட்சி அவர்கள் கற்ற ஆகமம் மாத்திரமேயாகும்.

அந்த மத தர்மத்திற்காக முன்னிற்க வேண்டும். கிடைக்கக் கூடிய சிறு இலாபங்களுக்காகவும், சுக போகத்திற்க்காகவும் அரசியல் தலைவர்களிடம் மதத் தலைவர்கள் தலைவணங்கக் கூடாது.

சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகள் அல்லது ஹோட்டல்களில் நத்தார் பண்டிகையன்று மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? இது பாரிய குற்றமாகும். நத்தார் தினத்தையும் இழிவுபடுத்துகின்றனர். சுற்றுலாத்துறை அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வெசாக் தினத்தன்று அதனை தடை செய்தால் , நத்தார் தினத்தன்றும் அதை தடை செய்ய வேண்டும். மதம் என்பது குடி போதைக்கு அடிமையாகி இறப்பதல்ல. கொள்கை ஒன்று காணப்படுமாயின் அந்த கொள்கையைப் பாதுகாக்க வேண்டும்.

ஒரு மதத்திலுள்ள கொள்கைகள் ஏனைய மதங்களுக்கும் பொதுவானதாகும். ஆனால் மதுபானம் குறித்த கோரிக்கையின் பின்னணி இலாப நோக்கு மாத்திரமேயாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முறையான செயற்பாடுகள் இதுவரையிலும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருந்தவர்கள் தற்போதும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களது பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் கூட விசாரணைக்கு உட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் நாடகமொன்று மாத்திரமே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆணைக்குழுவொன்றை நியமித்து, அதற்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கி, ஆயிரக்கணக்கானோர் சாட்சியமளித்துள்ளனர் என்றால், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துங்கள்.

ஒருசிலர் மாத்திரம் கைது செய்யப்பட்டு, பலர் வெளியில் சுதந்திரமாகவுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து முற்றாக விலகுமாறு மதத் தலைவர்களிடம் மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.

மதத்தின் புனிதம், சுயாதீனத்தன்மை என்பவற்றை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் கைகுட்டையாக வேண்டிய அவசியம் மதத்தலைவர்களுக்கு இல்லை என்றார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா நேசக்கரம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நாணய மாற்று வசதி தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

உணவு, மருந்து வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

முன்னாள் படை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை

இலங்கையின் பாதுகாப்புத்துறை உறுப்பினர்கள் 2 பேர் உள்ளிட்ட 12 வௌிநாட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிய அளவில் மனித உரிமைகளை மீறியமை மற்றும் ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை குறித்து, நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளமையால் இவர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்ததன் பின்னர், அவர்கள் அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கான தகுதியை இழப்பார்கள் என அந்நாட்டு இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் புலனாய்வுத்துறை அதிகாரியான சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் படை உறுப்பினரான சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உகண்டா, சீனா, பெலாரூஸ், பங்களாதேஷ், மெக்சிகோ ஆகிய நாடுகளின் பாதுகாப்பு துறையை சேர்ந்த சிலருக்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பட வேண்டும் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

நீதியான முறையிலே விசாரணை நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றியதான உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் தம் உறவுகளைத் தேடிப் போராடி வருகிறார்கள்.

நாங்கள் இதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளதோடு, அந்த உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இதில் அரசாங்கம் மேம்போக்காக மரணச் சான்றிதழ் வழங்குகிறோம், இறந்தவர்களுக்கான, நிவாரணம் வழங்குகிறோம், நிதி உதவி வழங்குகிறோம், என்பதன் மூலம் இதற்கான தீர்வினை அடைந்து விட முடியாது.

அவற்றுக்கும் அப்பால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

தங்கள் கண்களின் முன்னால் பாதுகாப்புப் படையிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு, அவர்களுக்கு நடந்தவை குறித்து தெரியப்படுத்தப்படுவதோடு, அதற்கான நீதியான முறையிலே ஒரு விசாரணை நடத்தப்பட்டு உரியவர்களுக்கு, தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்” என்றார்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இந்தியாவிடம் ஒருமித்துக் கோருவதற்காக ஒன்றுகூடிய தமிழ் பேசும் கட்சிகள்

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக இன்று கூடின.

அதன் பிரகாரம் இன்றைய தினம் கொழும்பு குளோபல் டவர்ஸ் தனியார் விடுதில் முற்பகல் 10.30 மணிக்கு முக்கிய சந்திப்பில் தமிழ் பேசும் கட்சிகள் ஈடுபட்டதோடு, இந்தியாவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கும் எழுத்துமூலமான கடித வரைவு தயார் செய்யப்படவுள்ளது.

இந்தக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியனவும் பங்கேற்றிருந்தன.

மேலும், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் கலந்துகொண்டன.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஏழு தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் திண்ணை தனியார் விடுதியில் சந்திப்பில் ஈடுபட்டன.

இதில் பங்கேற்குமாறு தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அக்கட்சி இறுதி நேரத்தில் குறித்த சந்திப்பை பிற்போடுமாறு கோரியிருந்தது.

அதேநேரம், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் யாழ்ப்பாணம் செல்வதற்கு ஏதுவான நிலையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த கூட்டத்தில் பங்கேற்ற மனோகணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சியும் இவ்விதமான கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு பின்னர் கொழும்பு திரும்பி சம்பந்தனையும் சந்தித்திருந்தனர்.

அச்சந்திப்பில் சம்பந்தன் கொழும்பில் கூட்டத்தினை கூட்டுமாறும் அதில் பங்கேற்பதற்கு தான் தயார் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் ஆகியோர் கூட்டாக கூட்டமைப்பின் தலைவருக்கு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அதில், “எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு என்பதை வலியுறுத்தும் அதேவேளை, அரசிலமைப்பில் ஏற்கவே உள்ள 13 ஆவது முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதி செய்து மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த இலங்கை அரசாங்கத்தினை வலியுத்துவதற்கு இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் கட்சிகள் கோருதல்’ என்ற செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு தமிழினம் முகங்கொடுத்துள்ள இக்கட்டான அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு கூட்டத்தினை தலைமைதாங்கி செவ்வனே வழிநடத்துவீர்கள் என்று நம்பிக்கை உரித்துடன் கோரி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தினை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றதோடு, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான, .பி.ஆர்.எல்.எப். மற்றும் ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை என்பதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட சி.வி விக்கினேஸ்வரன்,

“ தமிழர்களின் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் சட்ட புத்தகத்தில் இருக்கும் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம்,

“ ஜனாதிபதி செயலணி என்ற பெயரில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கபளீகரம் செய்யும் செயற்பாட்டை முற்றாக முடிவுக்கு கொண்டுவர 13ஐ அமுல்படுத்த வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

“13 ஐ நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய பிரதான கடமைப்பாடு இந்தியாவிற்கு உண்டு” எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முடிந்தால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் – அரசாங்கத்திற்கு மனோ சவால்!

முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று(ஞாயிற்றுக்கிழம) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ரொலோவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்த குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி முக்கிய ஆவணம் ஒன்றினை வெளியிடவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

ராஜபக்சர்களின் கபளீகரத்தை முறியடிக்க இதுவே வழி!! தமிழ் தலைமைகளின் கூட்டத்தில் வலியுறுத்து

ராஜபக்ச அரசாங்கத்தின் கபளீகர நடவடிக்கைகள் முற்றுப்பெற வேண்டுமாயின் அரசியல் அமைப்பிலுள்ள அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் மாகாண சபைகளின் முடக்கத்தை தமக்கு சாதகமாக, கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறினார்.

13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியாவுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்படுவது குறித்தும் இக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை: ITJP அறிக்கை

இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளமையை வரவேற்றுள்ள ITJP-யின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, அமெரிக்காவின் இத் தடையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை விதை என்று குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில், 2008மற்றும் 2009களில் 11 தமிழர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைக் கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் (2008) 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் தடை விதிப்பானது குறித்த குற்றவாளிகளின் அதிகாரிகளுக்கும் இன்றும் பதவிகளிலிருக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுமாறு ஜனாதிபதி பரிந்துரைப்பதும் அதற்கு சாதகமாக ஆணைக்குழுக்களை அமைப்பதும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதும் இன்னும் இலங்கையில் தொடர்கிறது” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கெளரவ சம்பந்தன் தலைமையில் கொழும்பில் ரெலோவின் ஒருங்கமைப்பில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கெளரவ சம்பந்தன் தலைமையில் இன்று 12-12-2021 ஞாயிறு காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் ஒருங்கமைப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.

02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.

ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13A முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த அதன் காரணகர்த்தாவான இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்தோடு இக்கூட்டம் நடைபெறுகிறது.

Posted in Uncategorized

சுவிஸ் நாட்டு தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

சுவிஸிலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மன்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 10 டிசம்பர் 2021 வெள்ளி காலை 9.00 மணிக்கு கொழும்பில் தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோ. கருணாகரம், வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள் அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்து தொடர்ந்து உறுதியான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நாடான சுவிஸிலாந்துடன் தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு
ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு