பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க எதிர்க்கட்சி தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இன்று (04) ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்ற சபை அமர்வின் போது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல இன்று இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்றைய விவாதத்தின் போது மேலதிக நேரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் , ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்று தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இந்த விடயத்தையும் பொருட்படுத்தாது இன்றைய தினம் சபைக்கு வருகை தந்த போது, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.

இதனால், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று அறிவித்தார்.

கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஆலோசிக்கப்பட்ட போதும் நேற்றைய பிரச்சினைக்கு காரணமான இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சபை நடவடிக்கையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர்.

சம்பிக்க அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் பல்வேறு பட்டஅபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம் யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன் ராஜபக்சாக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள் மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை.

நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுங்கள் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில், அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீது தமிழ் பாராளுமன்ற தரப்பு வாக்கெடுப்பு கோரியும் அதனை சபாநாயகர் மற்றும் ஆளும் கட்சியினர் நிராகரித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும் தமிழர் பாராளுமன்ற தரப்புக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை எடுத்து தாம் வெளிநடப்பு செய்வதாகக்கூறி தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சபையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியிருந்தனர்.

இனப்படுகொலை விவகாரங்கள், வடக்கு கிழக்கின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்களை சபையில் முன்வைத்த வேளையில் அதற்கு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை உறுப்பினர்களினால் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் அமைச்சின் சகல விவாதங்களும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருந்த வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் மீது வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தார்.

எனினும் இதற்கு ஆளும்கட்சியும், சபாநாயகரும் இணக்கம் தெரிவிக்கவில்லை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சின் மீதான வாக்கெடுப்பை கேட்க 24 மணிநேரத்திற்கு முன்னர் அதனை சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அறிவிக்கவில்லை, எனவே இதனை கருத்தில் கொள்ள முடியாது. ஆனால் உங்களின் எதிர்ப்பை பதிவுசெய்துகொள்கின்றோம் என சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் இதற்கு இணக்கம் தெரிவிக்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தான் இது குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சி பிரதம கொறடாவிற்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் அறிவிக்காதது எனது தவறு அல்ல என்பதை சுட்டிக்காட்டியதுடன், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பறிக்கும் செயலாக இது அமைந்துள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ,

கட்சி தலைவர்கள் கூட்டத்தின் எவ்வாறான இணக்கத்திற்கு வந்தாலும் கூட, பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனது சிறப்புரிமையை பயன்படுத்தி வாக்கெடுப்பை கேட்கும் வேளையில் அதனை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க முடியாது. வாக்கெடுப்பு கேட்கும் வேளையில் அதற்கு அனுமதிக்க வேண்டும். அதனை நிராகரிப்பது தவறானது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,

கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்திலும் இவர்கள் உள்ளனர். இதன்போது நாம் வாக்கெடுப்பை கேட்பதில்லை என நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் இணங்கியுள்ளோம். ஆகவே அதனை இப்போது மீறமுடியாது என்றார். அதே நிலைப்பாட்டில் இருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் தாம் வாக்கெடுப்பை வழங்க முடியாது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானமே நடைமுறைப்படுத்தப்படும். எனவே இதுவே எனது இறுதி முடிவும் என கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை நிராகரித்தார்.

இதன்போது ஆவேசமடைந்த தமிழர் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமக்கான சிறப்புரிமை இவ்வாறு ஆளுந்தரப்பின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக நிராகரிக்கப்படுகின்ற காரணத்தினால் தாம் சபையை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபைக்கு அறிவித்தார்.

அதற்கமைய சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கஜேந்திரகுமார் எம்.பியும் கஜேந்திரன் எம்.பியும் சபையை விட்டு வெளியேறினர்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு சவாலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம்!

சீனா முன்னெடுத்து வரும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக, 300 பில்லியன் யூரோ மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அத்திட்டத்துக்கு ‘குளோபல் கேட்வே’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குளோபல் கேட்வே திட்டம் நம்பகமான திட்டமாக உருவெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ரயில், சாலை, துறைமுகத் திட்டங்களுக்கு சீனா நிதியுதவி வழங்கியது. அது அவர்களை கடனில் மூழ்கடிக்கச் செய்யும் திட்டமென குறை கூறப்பட்டு வருகிறது.

நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை வடிவமைக்க உலக நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளிகள் தேவை என உர்சுலா வோன் டெர் லெயன் தெரிவித்தார்.

உறுப்பு நாடுகள், நிதி நிறுவனங்கள், தனியார் துறையினரிடமிருந்து திரட்டும் நிதியை எப்படி எங்கு பயன்படுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. இத்தொகையில் பெரும்பகுதி மானியங்களாக வழங்கப்படுவதற்கு பதிலாக, உத்தரவாதங்களாகவோ கடன்களாகவோ வழங்கப்பட உள்ளது.

மாறுபட்ட, ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை வளரும் நாடுகளின் காலநிலை மாற்றம், உலகப் பொதுசுகாதார பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மேம்பாட்டு இலக்கை அடைய உதவும் என்பதை நிரூபித்துக் காட்ட விரும்புகிறது என உர்சுலா வோன் டெர் லெயன் கூரினார்.

நல்ல உயர்தரமான திட்டங்கள், அதிக வெளிப்படைத்தன்மையோடும், நல்ல நிர்வாகத்தோடும், திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு நல்ல முன்னேற்றத்தைக் காட்டக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விளக்கினார். இத்திட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகள் குவிமையமாக இருக்கும் என ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆட்கள்

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் தந்திரம் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோ பசிபிக், ஐரோப்பிய ஒன்றியம் வரை பரவிவிட்டது. சீனாவின் காஸ்கோ நிறுவனம், மிகப்பெரிய கிரேக்க கன்டெயினர் துறைமுகமான பிராஸின் (Piraeus) மூன்றில் இரு பங்கை தன் வசம் வைத்துள்ளது. அதே போல க்ரோஷியா நாட்டில் சீனா ரோட் அண்ட் பிரிட்ஜ் கார்ப்பரேஷன் ஒரு முக்கிய பாலத்தைக் கட்டியுள்ளது.

நிதி சார் பிரச்னைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர நடவடிக்கையைக் குறிக்கிறது இது, எனவே சீனாவிடமிருந்து கடன் வாங்கும் நாடுகளுக்கு வேறொரு வாய்ப்பும் உள்ளது என ஜெர்மன் மார்ஷல் ஃபண்டில் சீனியர் டிரான்ஸ் அட்லான்டிக் ஃபெல்லோவாக இருக்கும் ஆண்ட்ரூவ் ஸ்மால் பிபிசியிடம் தெரிவித்தார்.

வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றால் குளோபல் கேட்வே திட்டத்தை சீனா வரவேற்கிறது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சீன தூதர் ஷாங் மிங் கடந்த மாதம் ஒரு சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உட்கட்டமைப்புத் திட்டங்களை பூகோள அரசியல் பிரச்னைகளாக மாற்றினால், அது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை தோல்வியடையச் செய்வதாக இருக்கும் மற்றும் தங்கள் சொந்த நலனையே பாதிப்பதாக இருக்கும் என கூறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

சீனாவில் வெளியுறவுக் கொள்கையில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

சீனாவின் இந்த கடன் கொடுக்கும் திட்டம் மிகவும் சிக்கலானது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இத்தனை பெரிய தொகையை கடனாகப் பெறுவது என்பது கிட்டத்தட்ட எந்தவித ஆபத்தும் இல்லாதது என்கிறார்கள் அவர்கள்.

எப்படிப் பார்த்தாலும் சீனா பொருளாதார மற்றும் பூகோள அரசியல் மூலம் கால்தடம் பதித்து வளர்வது, மேற்குலகில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இப்போது நம் முன்னிருக்கும் கேள்வி என்னவெனில், ஐரோப்பிய ஒன்றியத்தால் பூகோள அரசியல் தளத்தில் செயல்பட முடியுமா என்பது தான் என்கிறார் ஆண்ட்ரூவ் ஸ்மால்.

“அல்லது வளைந்து கொடுக்கும் தன்மையற்று, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளுமா? ஒருவேளை இதில் அவர்கள் தோற்றால், அது மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டதாகப் பொருள்” என்கிறார் ஸ்மால்.

“ஐரோப்பா இந்த தளத்தில் தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வது ஒரு நல்ல சமிக்ஞை” என ஒரு ராஜரீக ரீதியிலான பணியில் உள்ள அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

“அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள டிரான்ஸ் அட்லான்டிக் நண்பர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பொதுவான விஷயம் இது” என்றார் அவர்.

பொதுவான விஷயங்கள் நாடுகளுக்கு மத்தியில் பெரும் போட்டியை உருவாக்கலாம் என்கிறார் சென்டர் ஃபார் குளோபல் டெவலெப்மென்ட்டில் மூத்த உறுப்பினராக இருக்கும் ஸ்காட் மோரிஸ்.

இதெல்லாம் போக கடந்த ஜூன் மாதம் ஜி7 மாநாட்டில், அமெரிக்கா ‘பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ என்கிற திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. “இந்த விஷயத்தில் ஏகப்பட்ட திட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்கின்றன” என்கிறார் மோரிஸ்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குளோபல் கேட்வே திட்டம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மோரிஸ். இத்திட்டம் சீனாவின் முன்னெடுப்புகளுக்கு எதிராக ஒரு போட்டியாக இருப்பதை விட, வளரும் நாடுகளில் சில நல்ல விஷயங்களைச் செய்யத் தேவையான பணத்தைக ஐரோப்பிய ஒன்றியம் கொடுத்து உதவியதாக இருக்கும்.

மதிப்பு அடிப்படையிலான மற்றும் வெளிப்படைத்தன்மை மிகுந்த திட்டங்கள் மற்றும் அணுகுமுறையை வலியுறுத்துவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம், சார்பு நிலையின்றி, தொடர்புகளை மேம்படுத்த விரும்புவதை வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் இதுவும் ஒரு விதமான ஆதிக்கம் தான். பூகோள அரசியல் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தவே முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது.

அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது ஆணையை பெரும்பான்மையாக வழங்கியிருந்தார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சிச் சகபாடிகள் வழங்கிய வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான விடயம் விவசாயத்துறை சார்ந்தது.

நாட்டின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் நிறுத்தப்பட்டு இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டும் என்பதாகும். இந்தக் கொள்கையை அமுலாக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி கையிலெடுத்தார்.

எனினும், கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கை பொருளாதாரத்தினை வைத்து அக்கொள்கையை அமுலாக்குவதில் அவருக்கு பெரும் தடைகள் ஏற்பட்டன.

விவசாயிகள் போராட்டங்களை நடத்தினார்கள். ஒரே இரவில் இவ்விதமான கொள்கைகளை அமுலாக்க முடியாது என்று எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இவ்விதமான நிலைமையை சமாளிப்பதற்காக ராஜபக்ஷ தரப்பினர் உடனடியாக சீனாவிடம் ஓடிச் சென்றனர். ஏற்கனவே பல்வேறு கடன்களையும், இலங்கையின் கேந்திர நிலையங்களையும் தன்னகப்படுத்தியுள்ள சீனா இந்த விடயத்தினையும் கையிலெடுத்தது.

இலங்கைக்கு தேவையான உரத்தினை வழங்குவதற்கு சம்மதித்து ‘சூட்சுமமாக’ உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டுக்கொண்டது. உடன்படிக்கையின் பிரகாரம், முதற்கட்டமாக உரங்களை இலங்கைக்கு அனுப்பியது.

முதலில் 20 ஆயிரம் மெட்றிக் தொன் சேதன உரத்துடன் சீன நிறுவனம் அனுப்பி வைத்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பலை களுத்துறைக் கடலில் பல வாரங்களாக தரித்து நிற்கச் செய்துள்ளது.

எனினும், குறித்த கப்பலில் உள்ள குயிங்டாவோ சீனாவின் பயோரெக் என்ற சீன நிறுவனத்தின் சேதன உரத்தைக் கொள்முதல் செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துவிட்டது.

அதில் பங்கமளிக்கும் பற்றீரியாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் மாதிரிகளைப் பரிசோதித்து விட்டு வெளிப்படையாகவே அறிவித்தும் விட்டது.

ஆனால் குறித்த நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அந் நிறுவனத்தின் சார்பில் களமிறங்கியிருக்கும் இலங்கைக்கான சீன தூதரகம் இலங்கை அரசாங்கத்தின் காரணத்தினைக் கேட்டு விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.

உரத்துடன் வந்த கப்பல் தரித்து நிற்கச் செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை அரசாங்கம் அதனை கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்க தயாரில்லை. இதனால் சினமடைந்த சீனா, மக்கள் வங்கியை ‘கறுப்பு பட்டியலில்’ சேர்ப்பதாக பகிரங்கமாக அறிவித்தது.

மக்கள் வங்கியினால் வெளியிடப்பட்ட கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவு செலுத்தப்படாமையினால் இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் மக்கள் வங்கியை கறுப்புப்பட்டியலில் சேர்த்திருப்பதாக அறிகின்றோம்.

இவ்விவகாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கல் குறித்து கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைவாகவே மேற்படி கடன் தவணைக் கடிதத்திற்குரிய கொடுப்பனவைச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மக்கள் வங்கி நியாயமான காரணத்தினை வெளிப்படுத்தியபோதும் சீனா இசையவே இல்லை.

அதுமன்றி, இலங்கை தேசிய தாவரவியல் பரிசோதனை மையத்தின் பரிசோதனைக்கு அமைவாக, குறித்த உரத்தில் ‘எர்வீனியா’ என்ற தீங்கேற்படுத்தும் பற்றீரியா அடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்த பரிசோதனை அறிக்கையை சீனா ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை.

மாறாக, மூன்றாவது தரப்பு ஆய்வு கூடத்தில் குறித்த உரத்தில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சீனா வலியுறுத்தியுள்ளது. அனை இலங்கை ஏற்றுக்கொள்வதற்று மறுதலிக்கவும், தேசிய தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் ஆய்வுகூடப் பரிசோதனை தவறு என்றும், அதனால் சீன நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்காக 8 பில்லியன் டொலர்களை அளிக்குமாறும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதம் சட்டமா அதிபரின் பரிசோதனைக்காக இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக, உலக உணவுத்திட்டத்திடத்தில் முறையிடப்போவதாக இலங்கை அரசாங்கத்தினை அச்சமூட்டியிருக்கின்றது சீனா.

இதனைவிடவும், இலங்கையில் உள்ள சீன தூதுவர் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து உரத்தினை இலங்கைக்குள் இறக்கிவிட வேண்டும் என்ற விடயத்தில் மிகத்தீவிரமாக இருக்கின்றார்.

அவர் ஏற்கனவே உரத்தின் தன்மையை நியாயப்படுத்தும் டுவிட்டர் பதிவுகளை செய்தவர் பின்னர் பகிரங்க அறிக்கைகளையும் வெளியிட்டார்.

அதன்பின்னர், கடந்தவாரம் கண்டியில் மகாநாயக்கர்களை சென்று சந்தித்தார். பிரதமர் மஹிந்தரவைச் சந்தித்தார். அதுமட்டுமன்றி உர விடயத்தினை இராஜதந்திர மற்றும் அரசியல் பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் மூன்றாவது தரப்பு பரிசோதனை அவசியம் என்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் கூறினார்.

ஆனால், விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, அவ்விதமான எந்தவொரு இணக்கப்பாட்டையும் சீனாவுக்கு தாங்கள் வழங்கவே இல்லை என்று அடித்துக் கூறினார்.

அதேநேரம், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, மூன்றாவது தரப்பு சோதனைக்கு இடமில்லை என பிரதமர் திட்டவட்டமாக சீனத் தூதுவரிடம் தெரிவித்து விட்டார் எனக்கூறினார்.

அதற்கு பிரதமர் மஹிந்தவின் தரப்பினால், அமைச்சர் மகிந்தானந்த தெரிவித்த கருத்துக்களுக்கு நேர் எதிரான பதிலும் கடுமையாக கண்டக் கருத்துக்களும் வெளியாகியிருந்தன.

மறுபக்கத்தில் தேசிய தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட மாதிரிகளை மீள்பரிசோதனை செய்ய முடியாது என்கிறார் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அஜந்த டி சில்வா.

இலங்கைக்கென தாவரவியல் தனிமைப்படுத்தல் ஆய்வு கட்டமைப்புகள் உள்ள நிலையில், அதனை மீறி மூன்றாவது தரப்பிடம் சோதனைக்குச் செல்வது பொருத்தமற்றதொரு விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தமது உரத்தில் பற்றீரியாக்களே இருக்காது, என்று கூறிய சீன நிறுவனத்தின் பொது முகாமையாளரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான அனா சோங், தமது உரத்தில் பற்றீரியாக்கள் உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. ‘எர்வீனியா’ என்ற ஆபத்தான பக்டீரியாக்கள் தான் இல்லை என்றும், மண்ணுக்கு நன்மை தரக் கூடிய பற்றீரியாக்கள் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்து மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. ஆகவே தான் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இவ்விடயங்களை கையாண்டு வரும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் பற்றீரியாக்கள் உள்ள உரத்தினை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பதில் கிடுக்குப்பிடியாக இருக்கின்றனர்.

ஆனால், சீன உர நிறுவத்தினால் நட்ட ஈடு கோரப்பட்ட விடயத்திற்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னமும் வெளியாகவில்லை. இவ்வாறான நிலையில், களுத்துறையில் உரக்கப்பலும், சீனத்தூதரகமும் அப்படியே அமைதியாகிவிட்டன.

நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்கத் தேவையில்லை என அறிவித்தால் சீனா பிறிதொரு வழியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி உரத்தினை இறக்குமதி செய்வதற்கே முயற்சிக்கும்.

ஆனால், தற்போது உரத்தினால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் தனியார் உரத்தினை இறக்குமதி செய்ய முடியும் என அனுமதி அளித்துள்ளது. தற்போது தனது இயற்கை உர பாவனை என்ற கொள்கையையும் கைவிட்டுள்ளது.

ஆனால் நாட்டின் தன்னிறைவைப் பூர்த்தி செய்யும் வகையில் உர இறக்குமதி இன்னமும் இடம்பெற்றிருக்கவில்லை. இது உள்நாட்டில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும் அபாயத்தினை தோற்றுவித்துள்ளது.

-பெனிற்லஸ்-

Posted in Uncategorized

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது பொருத்தமானது

மட்டுப்படுத்தப்படும் வகையில் பழைய தேர்தல் முறையிலாவது மாகாணசபைத் தேர்தல்களை இம்முறை மாத்திரம் நடத்துவது பொருத்தமானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று(02) பரிந்துரைத்தது.

சுதந்திரக் கட்சி சார்பில் பாராளுமன்ற விசேட குழுவில் சாட்சியமளித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு” என்றார். அத்துடன் அடுத்த வருட முதலாவது காலாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 5,500 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிப்பது பொருத்தமற்றது” எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் நிலைப்பாடு என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்வரை குறித்த நிறுவனங்களின் அதிகாரம் ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என சட்டமா அதிபர் கருதுவதாகவும், அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே குழுவின் பொதுவான கருத்து என்றார்.

தேர்தல் முறை திருத்தப்படும் போது தொகுதி வாரியில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாகவும் விகிதாசார முறையின் கீழ் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாகவும் காணப்பட வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

Posted in Uncategorized

‘நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்’-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2022 இற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில்,

“இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொல்வது மட்டும் அல்ல. அந்த மக்களை மக்களின் அடையாளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படுபவையும் இனப்படுகொலையே.

இறுதி யுத்ததின் போது வன்னியில் ஏறத்தாழ நான்கு லட்சத்யுக்கு அதிகமான மக்கள் இருப்பதாக பதிவுகள் இருந்தபோதும் அரசு, ஆக 70,000 பேருக்கே உணவும் மருந்தும் அனுப்பி மக்களை பட்டினி போட்டு சாகடிக்க முனைந்தது , இதுவும் இனப்படுகொலையே.

2009 மே 16 ஆம் திகதி மாலை போர்வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தம்து ஆயுதங்களை மெளனிக்கிறோம் என விடுதலை புலிகள் பகிரங்கமாக அறிவித்த பிறகும், கண்மூடித்தனமாக காட்டுமிராண்டித்தனமாக மக்கள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது . இதை கடந்த தடவை சரத் பொன்சேகாவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

யுத்தம் புரிகின்ற் மறுதரப்பு யுத்தத்தை நிறுத்தி ஆயுதங்களை மெளனித்த பிறகு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் அந்த 150,000 மக்களையும் கொல்லும் நோக்குடனேயே ( intention ) நடந்தது. இது இனப்படுகொலையே.

இப்படி மக்கள் மீது தாக்குதல் நடப்பது குறித்து விடுதலைப்புலிகள் என்னிடம் அறிவித்தார்கள். அதை நான் அப்போது பேச்சில் ஈடுபட்டிருந்த பஸில் ராஜபக்சவுக்கு அறிவித்து அத்தாக்குதலை நிறுத்துமாறு கேட்டிருந்தேன். அவர் பாதுகாப்பு அமைச்சோடு கதைத்துவிட்டு , அப்படி செய்ய முடியாது என பாதுகாப்பு அமைச்சு சொன்னதாக கூறினார். இதற்கு நான் சாட்சி.

நீங்கள் குற்றம் செய்யவில்லை எனில் ஏன் நீதியான விசாரணைக்கு அஞ்சி ஒழிகிறீர்கள். நீங்கள் பிழை அற்றவர்கள் எனில் அதை பயமின்றி உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு வாருங்கள் என்றே கேட்கிறோம். யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளின் பின்னரும் தம்ழிஅர் வாழ்விடங்களில் பெருந்தொகை இராணுவம் குவிக்கப்பட்டு இருக்கிறது . வன்னியில் 5:1 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கிறது. உண்மை வெளிவந்துவிடும் என இராணுவத்தை குவித்து வைத்திருகிறீர்கள்?

தமிழர்கள் யாருக்க்கும் எதிரிகள் அல்ல, அவர்கள் யாருடனும் போர் புரிய விரும்பவும் இல்லை.அவர்கள் கேட்பதெல்லாம் தமக்கு உரித்தான உரிமைகளை மட்டும் தான். இந்த நாடு பல் தேசமுள்ள நாடு என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.அப்போதுதான் நீடித்த சமாதான்ம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாகிஸ்தானில் இலங்கையர் சித்திரவதைக்குட்படுத்தி கொலை

பாகிஸ்தான் Sialkot பகுதியில் இலங்கை பணியாளர் ஒருவர் கலகக்காரர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி கடமையை நிறைவேற்ற, அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – சியல்கோட் வைராபாத் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை எரியூட்டியுள்ளதாக பாகிஸ்தானின் DON இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

சியல்கோட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பொது முகாமையாளராக கடமையாற்றிய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் பிரியந்த குமார என அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவோர் அவலமான சம்பவம் என பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் ஹுஸ்மான் புஸ்டார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் சட்டத்தை கையில் எடுத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த இலங்கை பிரஜை கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அறிவதற்காக, பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், உயர்ஸ்தானிகர் கூட்டமொன்றில் இருப்பதாக அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன – சர்வதேச மன்னிப்புச்சபை

வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்ற மற்றும் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, இத்தகைய சம்பவங்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டிருந்த பிராந்திய ஊடகவியலாளரொருவர்மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதுமாத்திரமன்றி குறித்த ஊடகவியலாளர் தனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயங்களைக் காண்பித்து, இராணுவ சிப்பாய் ஒருவர் முட்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையினால் தாக்கியமையினாலேயே அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறுகின்ற காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டதுடன் அதற்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த தமிழ் ஊடகவியலாளர் விஷ்வசந்திரன் நான்கு இராணுவ சிப்பாய்களால் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் மிகுந்த கவலையடைந்திருக்கின்றோம்.

இலங்கை இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இச்சம்பவம் தொடர்பில் இராணுவப்பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

குறித்தவொரு சம்பவம் தொடர்பான விசாரணை பயனுள்ளதாக அமையவேண்டுமெனின், அவை துரிதமானவையாகவும் பக்கச்சார்பற்றவையாகவும் இருக்கவேண்டும். இருப்பினும் இச்சம்பவம் குறித்த விசாரணைகளில் அத்தகைய காரணிகள் போதியளவில் பூர்த்திசெய்யப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதிலும் தண்டனை பெறுவதிலும் இருந்து இலங்கை இராணுவம் பல தசாப்தகாலமாக விலகிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது வடமாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இராணுவ சிப்பாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இவை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யக்கூடிய வகையில் செயற்திறனுடன் பணியாற்றுவதற்கான சூழலை உறுதிசெய்யும் அதேவேளை, இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அதனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையில் செயற்படவேண்டும்.

அடக்குமுறைகள் தொடர்பான அச்சமின்றி செயற்படுவதற்கு அவசியமான கடப்பாடுகள் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றப்படவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது! மின்சூள் சின்னம்! – மனோ கணேசன்

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில், இடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன்.

எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம்.

“ஒற்றுமை நிலைக்க வேண்டும்” என எதிர்பார்த்த பெருந்திரள் மக்கள் மத்தியில், இது “தேர்தல் வரையிலான உறவு”, ஆகவே தேர்தல்கள் முடிந்த பின் உடைந்து விடும், உடைய வேண்டும் என்று எதிர்பார்த்த வினோதமானவர்களும் நம் மத்தியில் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்று ஏமாற்றி இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஆகவே, கட்சிகள் “ஒன்றுசேர வேண்டும், ஒன்றுசேர வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்படும், அதேவேளை இன்று ஒன்றுபட்டு நின்று, பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளை கடந்து, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு துயருடன் விடை கொடுத்து விட்டு, புதியவர்களை உள்வாங்கி, எமது தேசிய பயணத்தை மாத்திரம் நிறுத்தி விடாமல் பயணித்து, இன்று அதிகாரபூர்வ பதிவையும், தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னால் எங்கள் ஒவ்வொருவரினதும் கடும் உழைப்பு, நேர்மை, துணிச்சல், தூரப்பார்வை, நிதானம், இன உணர்வு ஆகியவை இருக்கின்றன.

எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி, ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற, அனைத்து உடன்பிறப்புகளினதும், இரத்தத்தின் இரத்தங்களினதும் வாழ்த்துகளையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Posted in Uncategorized