கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என ரெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆராய்கிறது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி.

இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியல் எம்மோடு இணைந்து மேலும் பல தகவல்களை வழங்குகிறார் சுரேன் குருசாமி அவர்கள்.

அவருடனான முழு நேர்காணல் இதோ,

வெள்ளத்தில் மூழ்கிய கரையோர மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்! ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி மேயர் கோரிக்கை

யாழ்ப்பாணம் கடற்கரையோரமாக உள்ள பகுதிகள் தொடர்ந்தும் பள்ளத்தில் காணப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க முன்வருமாறு,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி முதல்வரும் ஆன ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் பெய்த அடைமழை காரணமாக கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் பலர் தமது வீடுகளில் கட்டில்கள் வாங்குதல் என அதற்கு மேல் இருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே வெள்ளம் அற்ற பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நீதியமைச்சு, நிதியமைச்சு, பிரதமர் அலுவலகம் முன்பாக காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் பிரதமர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6,000 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ‘காணவில்லை’ என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றிதழ் கிடைக்கப்பெற்ற குடும்பங்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க மரணப்பதிவுச்சட்டத்தின் 2 ஆவது சரத்திற்கு அமைவாக மரணத்திற்கான காரணமாக ‘நீண்டகாலமாகக் காணவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட சான்றிதழைத் தம்வசம் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனைக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 மில்லியன் ரூபாவில் இடைக்காலக்கொடுப்பனவாக 153 குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் 11 மில்லியன் ரூபா செலுத்தப்பட்ட நிலையில், மேலும் 489 மில்லியன் ரூபா எஞ்சியுள்ளது.

எனவே நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக எஞ்சியுள்ள 489 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தேவையானளவு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

சீன கப்பல் மீண்டும் பயணிக்க நிபந்தனைகள் முன்வைப்பு

சீனாவின் உரம் ஏற்றிய கப்பல் தற்போது இலங்கையின் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட 12 கடல் மைல் தொலைவில் களுத்துறை கடற்பரப்பிற்கு அருகில் இலங்கை கடலில் நங்கூரமிட்டுள்ளது.

கப்பல் திரும்பி செல்ல வேண்டுமாக இருந்தால், Qingdao Seawin Biotech Company அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாக குறித்த உரத்தின் இறக்குமதியாளரான அரச உர நிறுவனம் தெரிவித்தது.

தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் அனுமதி இன்றி வருகை தந்தமை மாத்திரமே கப்பல் மீண்டும் திரும்பி செல்வதற்கு காரணம் என ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அதன் பிரதான விடயமாகும்.

கப்பல் மீண்டும் வருவதற்கு தேவைப்படும் நாட்களுக்கான நட்டத்தை செலுத்த வேண்டும் எனவும் சீனாவின் நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கப்பலுக்கு எவ்வித கொடுப்பனவும் செலுத்தப்படாது என விவசாய அமைச்சு தெரிவித்தது.

அறிவிக்கப்படாத பொருளுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு சட்டத்தின் பிரகாரம் அவசியம் இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்தார்.

31 அரசியல் கட்சிகளுடன் மைத்திரி கலந்துரையாடல்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Posted in Uncategorized

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. –ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது
தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் இந்த வாரம் முக்கியமான சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. ஏழு பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து முக்கியமானதொரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை நடை பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருப்பது இதுதான் முதல் முறை என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே அது நோக்கப்படுகின்றது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்வதில் முக்கிய பங்காற்றியது ரெலோ – அதாவது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தான். இந்தச் சந்திப்பின் நோக்கம். அது குறித்த முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் ‘ரெலோ’ அமைப்பின் தேசிய அமைப்பாளரும் அதன் பேச்சாளருமான சுரேந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியை இங்கே தருகின்றோம்.

கேள்வி – யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் நோக்கம் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் கூறுவீர்களா?

பதில் – நல்ல விடயம். இவை தொடர்பாக தவறான புரிதலோடு பல விமர்சனங்கள் வந்திருக்கின்ற வேளையிலே இந்தக் கேள்வி மக்களைத் தெளிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகின்றேன்.

முதலில் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு இணைந்த எங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற ஒரு அரசியல் தீர்வே எங்களுடைய நிலைப்பாடு. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஏற்கனவே அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டிருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற இந்தியாவைக் கோருவதற்கு, அதன் பொறுப்பு இந்தியாவிடம் இருக்கின்றது. இலங்கையை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதற்கான கோரிக்கையை பொதுத் தரப்பிலிருக்கின்ற தமிழர் தரப்பினால் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது அரசியல் தீர்வாக அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கின்ற விடயங்களை நிறைவேற்ற வேண்டும்என்பது தான் எங்கள் கோரிக்கை. இந்தக்கோரிக்கயைின் ஊடாக சில விடயங்களை நாங்கள் எட்ட விரும்புகின்றோம்.

ஒன்று இந்தியா தொடர்ந்தும் 13ஐ வலியுறுத்தி வருகின்றது. அதன் ஊடாகத்தான் எங்கள் அரசியல் தீர்வை நோக்கிய கோரிக்கைகளுக்கு இந்தியாவின் உதவி கிடைக்கும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார்கள். ஆகவே இந்தியா தமிழர்களின் கோரிக்கையில் எவ்வளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றது என்பதை, இந்தக் கோரிக்கையை அவர்களிடம் ஒருமித்த நிலையிலே முன்வைப்பதன் மூலம் நாங்கள் கண்டு கொள்ள முடியும்.

இரண்டாவது இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற 13ஐ முற்றுமுழுதாக நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கின்றதா? என்பதன் மூலம் எங்களுடைய சமஸ்டிக் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா? என்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள முடியும். அரசியல் யாப்பிலே உள்ள விடயத்தையே அவர்கள் சரியாக நகர்த்த முடியாதவர்கள் அல்லது ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த முடியாதவர்கள், அதையும் தாண்டி ஒருதீர்வை இதய சுத்தியோடு தருவதற்கு பேச்சுவார்த்தை நடத்துவார்களா? அல்லது நடத்துகின்ற பேச்சு வார்த்தையில் அர்த்தம் இருக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இருக்கும்.

மூன்றாவதாக அதேபோன்று தமிழர் தரப்பிலே இருக்கின்ற, அரசியல் யாப்பிலே இருக்கின்றவற்றைத் தாண்டி ஒரு புதிய அரசியல் தீர்வை. சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி போன்ற பல ஆட்சி முறைகளைப் பெற்றுத் தருவதாக வலியுறுத்தியிருந்தாலும், ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை, மிகக்குறைந்த அதிகாரங்களோடு கூடியதாக இருந்தாலும்கூட, அதையே நிறைவேற்ற முடியாத அல்லது இந்தியாவின் தரப்புக்களோ அல்லது சர்வதேச அழுத்தத்தோடு நிறைவேற்ற முடியாத தமிழர் தரப்புகளாகிய அரசியல் தரப்புகள் அதையும் தாண்டிய ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை பெறமுடியும்.

நான்காவதாக ஒருமித்த நிலைப்பாட்டிலே பன்முகப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தையும் ஒன்றிணைத்து இதற்கான கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் எம்முன்னே எடுத்து வருகின்ற பல விடயங்களுக்கு எங்கள் தமிழினம் முகம் கொடுக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வருகின்ற போது எங்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற பல நடவடிக்கைகளை தடுத்து நிறுது்த முடியும். குறிப்பாக காணி அபகரிப்பு, எங்களுடைய குடிப்பரம்பலைச் சிதைப்பதற்காகவும், எங்களுடைய இருப்பினை சீர்குலைப்பதற்காகவும், எங்களுடைய சனத்தொகையைக் குறைப்பதற்காகவுமாக எடுக்கப்பட்டு வருகின்ற திட்டமிட்ட காணி அபகரிப்புகளை நிறுத்துவதற்கு இந்த 13இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம் முற்றுமுழுதாக எங்களுக்கு வழங்கப்படுகின்ற போது, அதிலிருந்து எங்கள் தாயக பூபுமியைக் காத்துக் கொள்வதற்கு இந்தப் 13இன் கீழாக முதலாவது கட்டமாக முடியும். வழங்கப்படுமாக இருந்தால்.

அதேநேரத்திலே புதிய தேர்தல் விதிமுறைகள் என்று புதிய விடயங்களைக் கொண்டு வந்து எங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு, குறிப்பாக வழக்கு கிழக்கிற்கு வெளியிலும், திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களிலும் ஏற்கனவே சனப்பரம்பல் கேள்விக்குடியாக இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை அழித்து விடுவதற்கு ஏற்ற தேர்தல் சட்டவிதி முறைகளைக் கொண்டு வருகிறார்கள். அதேபோன்ற அரசியல் யாப்பிலே கூட பல சட்டங்களைக் கொண்டு வந்து எங்களுடைய அரசியல் உரிமைகளை மறுக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. காணி அபகரிப்பு, தேர்தல் திருத்தச் சட்டங்கள், அரசியல் சாசனம் போன்ற பல விடயங்களில் அரசாங்கம் முன்வைக்கின்ற நிலையில் அவற்றை தடுத்து நிறுவத்துவதற்கு இங்கிலாந்தின் உதவியைக் கோருவதன் மூலம் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்படுகின்ற, திட்டமிட்டு எடுக்கப்படுகின்ற அரசியல் நடவடிக்கைகளை, இனத்தை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முட்டுக்கட்டை போடுகின்ற நடவடிக்கையாக இதை ஒரு இராஜதந்திர நடவடிக்கையாக மேற்கொள்ள முடியும் என்ற எதிர்பாரப்போடு தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கேள்வி – இது 13 க்குள் தமிழர் பிரச்சினையை முடக்கிவிடும் ஒரு உபாயம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

பதில் – அது ஒரு அர்த்தமற்ற பேச்சு. ஏனென்றால், 13 என்பது ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கின்ற ஒரு விடயம். பயங்கரவாதத் தடைச்சட்டம் யாப்பிலே இருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துகின்ற இந்த அரசாங்கம், 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும். நாங்கள் கேட்பது சமஸ்டி அரசியல் உரிமை. அதாவது ஒற்றை ஆட்சியை ஏற்காத ஒரு அரசியல் தீர்வை நாங்கள் கோரிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு காணி அபகரிப்பின் மூலம் எங்கள் இனக்குடிப் பரம்பலைச் சிதைத்து அந்தக் கேள்விக்கான பலத்தினைக் குறைத்துக் கொண்டு வருவதை நாங்கள் காண்கிறோம். ஆகவே இந்தப் 13ஐக் கோருவது என்பது, எங்களுடைய தீர்வாக நாங்கள் கோரவில்லை. ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருப்பதை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோருகிறோம். அரசியல் தீர்விற்கான எங்கள் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு விடயமாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.

கேள்வி – இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு உங்கள் பதில் என்ன?

பதில் – தவறான கருத்து. ஒரு அரசியல் ஞானமற்ற, ஒரு அரசியல் தீர்க்கதரிசனமற்ற, சரியான யதார்த்தமான அரசியல் நிலைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு வரட்டு அரசியலைப் பேசிக்கொண்டிருக்கக்கூடிய தேர்தல் நோக்கத்தைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்தி சுயநலங்களைத் தீர்த்துக் கொள்ள முற்படுபவர் களுடைய கருத்தாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கிறோம். இந்தியாவைத் திருப்திப்படுத்துவதால், இந்தியா பெரிய நலன்களை அடைந்து விடும் என்பதில் எந்த நியாயப்பாடும் இல்லை. மாறாக இந்த முயற்சிக்கு அரசாங்கம் எங்கள் இனக்குடிப் பரம்பலைச் சிதைப்பதற்கும், எங்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கும், எங்களின் அரசியல் உரிமைகளைப் பறித்தெடுப்பதற்குமான அரசின் நடவடிக்கைக்கு இப்படியான குற்றஞ் சாட்டுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகின்றார்கள் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஏனென்றால், இந்த விடயத்திலே இந்தியாவின் நலன்களைப் பேணவேண்டிய தேவை எங்களுக்கு எதுவும் இல்லை. இந்தியா தன்னுடைய நலன்களை நன்றாகப் பேணிக் கொள்ளக்கூடிய பக்குவத்திலும், அரசியல் பலத்துடனும், தங்களுடைய செயல் வடிவங்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற இராஜதந்திர நகர்வுகளுடனும் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் நலன்களை முன்னிறுத்துவதல்ல எங்களின் நோக்கம். முதலாவதாக நாங்கள் எங்களுடைய நலன்களைப் பேண வேண்டும் என்ற வகையிலே, எங்கள் இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையிலே 13ஆவது திருத்தச் சட்டத்திற்குரிய முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இந்தியாவினுடைய கடமை. அதை ஒருமித்த நிலைப்பாட்டில் கோர வேண்டும் என்று எங்களை வலியுறுத்தி வருவதனாலே தான் இந்த முயற்சியை நாங்கள் முன்னெடுக்கிறோமே தவிர, இந்தியாவின் நலன்களைப் பேணுவதற்காக அல்ல. எமது மக்களின் நலன்களைப் பேணுவதற்கான நடவடிக்கை. இதற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்போர் அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் தங்கள ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைத்தான் எங்களால் வைக்க முடியும்.

கேள்வி – 13 ஆவது திருத்தம் கடந்த 3 தசாப்த காலமாக அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும், இதுவரையில் இல்லாத அக்கறை இப்போது எதற்காக என்ற கேள்வி ஒன்றும் எழுப்பப்படுகின்றது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் – நிச்சயமாக. 2009 ஆம் ஆண்டு வரையிலும் விடுதலைப் புலிகள் தமிழீழம் என்ற ஒரு கனவை நோக்கிப் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே 13ஐப் பற்றிப் பேச வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. காணி அபகரிப்போ, நில அபகரிப்போ அல்லது திட்டமிட்ட குடியேற்றங்களையோ அரசாங்கம் செய்ய முடியாத ஒரு சூழ்நியைலில் இருந்தபடியினாலே 13ஐப் பற்றிய கவலை எங்களுக்கு இருக்கவில்லை. அதேபோன்று ஆயுத பலத்தோடு இருந்த படியினாலே, இந்தக் குடியேற்றங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாத அளவிலே அரசாங்கம் மௌனித்துப் போயிருந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.

இன்று அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னராக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனநாயக வழியிலே கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சி செய்து வந்த வேளையிலே இன்று இந்த அரசாங்கம் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வை முன்னெடுக்கின்றோம் என்ற போர்வையிலே திட்டமிட்டு எங்களின் இனப்பரம்பலைச் சிதைக்கின்ற காணி அபகரிப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக பாதுகாப்பு, சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி, தொல்லியல் போன்ற திட்டங்களில் காணிகளை அபகரித்து, அதன் ஊடாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இப்போது மாதவனை, மயிலத்தமடு என்ற இடங்களில் பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. தொல்லியல் ஊடாக பலநூறு ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு என்ற ரீதியில் மன்னார் நானாட்டான் என்ற இடத்திலே நாலாயிரம் ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்துக் கொண்டிருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நாளுமே எங்களுடைய மக்கள் காணி அபகரிப்பிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பதனால், நாங்கள் வெற்றியடையப் போவதில்லை. இப்படியான இன அழிப்பு நடவடிக்கைகள் கூர்ப்படைந்துள்ள வேளையிலே நாங்கள் இந்த 13ஐ வலியுறுத்துவதன் மூலம் தான் கடந்த காலத்தில் நாங்கள் சொல்லி வந்த அரசியல் தீர்வு என்பதை நல்லாட்சி அரசாங்கத்தில்கூட நிறைவேறாத பட்சத்திலே தொடர்ந்தும் நாங்கள் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இருக்கின்ற இருப்பை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அழித்து வருவதற்கு இந்த 13ஐ முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் ஆகக் குறைந்த எங்கள் தாயக பூமியை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். எங்கள் இனப்பரம்பல் குடிகளைப் பேணிக் கொள்ள முடியும் என்ற வகையிலே ஒரு தந்திரோபாயமாகத்தான் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

Source:இலக்கு மின்னிதழ் Weekly Epaper

Posted in Uncategorized

விசேட குற்றப்பிரிவு காரியாலயத்திற்கு வருகை தருமாறு- ரெலோ உப தலைவர் பிரசன்னாவிற்கு அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னாவை விசாரணைக்கு உட்படுத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இ.பிரசன்னா தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது வீட்டுக்கு வருகை தந்த இரண்டு புலனாய்வுத்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக நாளை அவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் அமைந்துள்ள குற்றப்புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முகநூல் போராளிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், அச்சுறுத்தும் நிலைமையும் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மன்னாரில் கடும் மழை விடத்தல் தீவில் கிராமங்களுக்குள் புகுந்த கடல்நீர்-ரெலோ தலைவர் செல்வம் நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்

விடத்தல் தீவு மற்றும் தலைமன்னார் கிராமத்தினுள் சென்ற கடல் நீர் – மக்கள் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை பெய்த கடும் மழையை தொடர்ந்து கடல் நீர் கிராமத்தினுள் சென்றுள்ளது.

இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (7) காலை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு,பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.

மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு,உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்.மேலும் தலைமன்னார் கிராம பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக நேரடியாக சென்று நிலமையை அவதானித்தார்.

Posted in Uncategorized

திண்ணைச் சந்திப்பு -By Nillanthan

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின.13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை.மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும்,எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கால அவகாசம் கேட்ட படியால் அக்கட்சியையும் இணைத்துக் கொண்டு இறுதிமுடிவை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதே சரி.

இச்சந்திப்பை ஒழுங்குபடுத்தியது டெலோ இயக்கம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வியக்கத்துக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. இதுகாரணமாக அந்த இயக்கத்தின் பேரம்பேசும் சக்தி அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது.அந்த இயக்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தனது கட்சியின் உயர்ந்திருக்கும் பேரம்பேசும் சக்தியை சாத்தியமான வழிகளில் பிரயோகித்து தமிழ் அரசியலில் தமது கட்சியின் ஸ்தானத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உழைக்கும் ஒருவராகக் காணப்படுகிறார்.டெலோவின் முயற்சியால் கடந்த ஏப்ரல் மாதத்திருந்து ஐந்து கட்சிகள் ஏதோ ஒரு ஒருங்கிணைப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவா கூட்டத்தொடரின்போது அவை ஒரு கூட்டுக் கடிதத்தையும் அனுப்பியிருந்தன.அதன் அடுத்தகட்டமாக இந்தியாவை நோக்கி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்று மேற்படி கட்சிகள் தீர்மானித்தன.

மேற்படி சந்திப்புக்களில் சிலவற்றில் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருக்கிறார். அவர் பொதுவாக சந்திப்புகளுக்கு எதிரானவராக காணப்படவில்லை.ஆனால் முடிவெடுக்கும் தருணங்களில் அவர் சம்பந்தரையும் சுமந்திரனையும் மீறிச்சிந்திக்க முடியாதவராக காணப்படுகிறார். அதனால் கடந்த ஜெனிவா கூட்டத்தொடரின் போது கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக்கட்சி கூட்டுக்குள் இருந்து பின்வாங்கியது. இப்போதும் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்திலும் தமிழரசுக்கட்சி பங்குபற்றவில்லை. ஏனெனில் கூட்டமைப்புக்குள் உள்ள ஒப்பீட்டளவில் பெரிய கட்சி அது. மூத்த கட்சியும் அது. ஏனைய சிறிய கட்சிகளின் முயற்சிகளின் பின் செல்ல அது தயாரில்லை என்று தோன்றுகிறது. அதேசமயம் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்புக்கு வெளியே இருக்கும் கட்சிகளோடு ஏன் ஒருவித ஒருங்கிணைப்பை நாடுகின்றன என்பதை குறித்து தமிழரசுக் கட்சி தன்னை சுய விசாரணை செய்து கொள்வதாகவும் தெரியவில்லை.

கூட்டமைப்பு இப்பொழுது இதயத்தால் ஒன்றிணைந்த ஒரு கூட்டாக இல்லை.அது தேவை கருதிய ஒரு கூட்டாகத்தான் இருக்கிறது.அதன் தலைவரான சம்பந்தர் பௌதிக ரீதியாக நடமாட முடியாத ஒருவராக மாறிவிட்டார்.நடைமுறையில் சுமந்திரன்தான் செயற்படும் தலைவராக இருக்கிறார்.கூட்டமைப்பின் செயற்படு தலைவராக மட்டுமல்ல தமிழரசுக் கட்சியின் முடிவுகளின் மீதும் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.எனவே மேற்படி கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்ற விடயத்தில் சுமந்திரனை தவிர்த்தமை தந்திரோபாய ரீதியாகப் பொருத்தமானதா? சுமந்திரனை விலக்கிக்கொண்டு சம்பந்தரை அணுகியபொழுது சுமந்திரன் நிலைமைகளைக் குழப்பிவிட்டார் என்று மேற்படி கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

கடந்த சனிக்கிழமை கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் சம்பந்தரை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தார்.தீபாவளி பண்டிகையை ஒட்டிய ஒரு சந்திப்பு என்று கூறப்பட்ட போதிலும்கூட மேற்படி ஐந்து கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சியை நோக்கி சம்பந்தரைத் தூண்டும் உள்நோக்கம் அந்த சந்திப்பில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.எனினும் சந்திப்புக்கு பின்னரும் தமிழரசுக்கட்சி திண்ணையில் நடந்த சந்திப்பில் பங்குபற்றவில்லை.அக்கட்சி தனக்கு கால அவகாசம் தேவை என்று கேட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் கருத்தையும் பெற்றுக்கொண்டு ஒன்றிணைந்த ஒரு கோரிக்கையை முன் வைக்கலாம் என்று கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.இதனிடையே, இந்திய தூதுவர் மறுபடியும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார்.மேலும், அமெரிக்காவின் அழைப்பை ஏற்று கூட்டமைப்பு அமெரிக்கா செல்லவிருப்பதாக ஒரு தகவல் உண்டு.

மேற்படி சந்திப்புகளின் தொகுக்கப்பட்ட ஒரு சித்திரத்தை ஆராய்ந்தால் மிகத் தெளிவான சில விடைகள் கிடைக்கின்றன.முதலாவது கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளே செய்யுமாக இருந்தால் அதற்கு ஒரு வரையறை உண்டு. தேர்தல் நோக்கங்களைக் கொண்ட கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பலமான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியுமென்றால் அது எப்பொழுதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான ஓர் ஐக்கியம் ஏற்படாத ஒரு பின்னணியில்தான் தமிழ்தேசிய பரப்பில் மூன்று தரப்புகளை காணமுடிகிறது. இந்நிலையில் கட்சிகளாக விரும்பி ஒரு கூட்டை உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் பெருமளவுக்கு குறைவு என்பதே கடந்த 12 ஆண்டுகால அனுபவம் ஆகும்.மாறாக தேர்தல் உள்நோக்கம் இல்லாத பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முயன்றால் அவ்வாறான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்யலாம் என்பது கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இது முதலாவது.

இரண்டாவது விடயம், இந்தியாவை நோக்கி ஒரு பொதுக் கோரிக்கையை எந்த அடிப்படையில் முன்வைப்பது என்பது.13வது திருத்தத்தை இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைப்பதா?அல்லது இந்தியாவை இனப்பிரச்சினைக்குள் மீண்டும் தலையிட வைக்கும் ஓர் ஊக்கியாக பயன்படுத்துவதா?

மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை 13வது திருத்தத்தை ஒரு இறுதித்தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை.கடந்த பன்னிரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் மிக குறிப்பாக 2015க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஈழத்தமிழர்கள் ஒப்பீட்டளவில் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்திருக்கிறார்கள். மேற்சொன்ன கட்சிகள் யாவும் தாங்கள் சார்ந்த கூட்டுக்களுக்கூடாக அல்லது தமிழ் மக்கள் பேரவைக்கு ஊடாக அல்லது வட மாகாண சபைக்கூடாக அவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்திருக்கின்றன. அந்த முன்மொழிவுகள் யாவும் 13ஐக் கடந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒற்றையாட்சி கட்டமைப்புக்கு வெளியே வரும் கூட்டாட்சி முன்மொழிவுகள் ஆகும். எனவே மேற்கண்ட கட்சிகள் 13ஐ ஒரு இறுதி ஏற்பாடாக ஏற்றுக் கொள்ளவில்லை.ஆயின் இந்தியாவை மீண்டும் இனப்பிரச்சினைக்கு தலையிடக் கோரும் ஒரு ஊக்கியாகத்தான் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா?

அப்படியென்றால் அது மிக ஆழமான ஒரு விடயம்.இனப்பிரச்சினையில் இந்தியாவை மீண்டும் தலையிட வைப்பது அல்லது இந்தியாவை அரவணைப்பது மூலம் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்துவது போன்ற அனைத்துமே நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் ஆகும். இதுதொடர்பில் கட்சி நிலைப்பாடுகளுக்கு அப்பால் முழுத் தமிழ்த்தரப்பும் ஒருமித்த ஒரு பொது கொள்கைக்கு;பொது அணுகுமுறைக்கு போகவேண்டும்.

ஆனால் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒத்தகருத்து கிடையாது.அதேசமயம், இந்தியாவின் பிராந்திய நலன்களை குறிப்பாக புவிசார் நலன்களை பாதுகாக்கவேண்டும் என்ற விடயத்தில் எல்லாத் தமிழ் கட்சிகளும் ஏறக்குறைய ஒரே நிலைப்பாட்டில் உள்ளன என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

பொதுவாக கடும்போக்காளர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இந்த விடயத்தை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் விடயத்தில் அக்கட்சியானது இந்தியாவோடு ஒத்துழைக்கும் என்பதனை அக்கட்சியின் தலைவர் அழுத்தமாகக் கூறி வருக்கிறார். ஆனால் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனையும் அக்கட்சி தெளிவாக தெரிவித்துவிட்டது.

தமிழரசுக்கட்சி 13ஆவது திருத்தத்தைக் கடந்து சென்று 13 பிளஸ் குறித்து பேசிய ஒரு கட்சி.அக்கட்சியானது தனது வெளியுறவுக் கொள்கை இதுதான் என்பதனை தெளிவாக வரையறுத்து கூறாவிட்டாலும் கூட அதன் பல தசாப்தகால நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதகமாக சிந்திக்கும் ஒரு கட்சி அல்ல.

மற்றது விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி. இக்கூட்டணி திண்ணை சந்திப்பில் பங்குபற்றியது.இக்கூட்டணிக்குள் காணப்படும் பங்காளிக் கட்சிகள் இந்தியாவின் பிராந்திய நலன்ளைப் பாதுகாப்பவை அதோடு இந்திய தலையீட்டை வரவேற்பவை.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்ப் பரப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளில் பெரும்பாலானவை இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஆதரவாகவே காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக 13வது திருத்தத்தை ஒரு உச்சமான தீர்வாக ஏற்றுக் கொள்வதில்தான் கட்சிகளுக்கிடையே கருத்து பேதங்கள் உண்டு.இந்த அடிப்படையில் சிந்தித்தால் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் கொழும்பின்மீது இந்தியா அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதில் மேற்படி கட்சிகள் மத்தியில் பெரியளவிற்கு முரண்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவ்வாறு இந்தியாவை அழுத்தம் பிரயோகிக்க வைக்கத்தக்க ஒரு கோரிக்கையானது 13ஐ அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதில்தான் கட்சிகளுக்கிடையே வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.

இலங்கை இனப்பிரச்சனை என்பது சாராம்சத்தில் ஒரு புவிசார் அரசியல் பிரச்சினைதான். தமிழ் மக்கள் அனுபவிக்கும் எல்லா துயரங்களுக்கும் காரணம் அவர்களுடைய புவிசார் அமைவிடம்தான். ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் எனப்படுவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவியியல் அருகாமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது -Geographical proximity. இதில் சிங்கள மக்களுக்கும் இந்தியாவோடு அருகாமை உண்டு.தமிழ் மக்களுக்கும் உண்டு.ஆனால் சிங்கள மக்களை விடவும் தமிழ் மக்களுக்கு அதிகமாக இருப்பது தமிழ்நாடு.மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் இன்னபிறவால் இருநிலத்து தமிழ் மக்களுக்கும் இடையே அருகாமை அதிகம்.அந்த அருகாமையை பயன்படுத்தித்தான் இந்திய அரசு இந்திய-இலங்கை உடன்படிக்கையை நோக்கி கொழும்பை நிர்ப்பந்தித்தது. அதே அருகாமையை தமிழ் மக்களும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.ஏனென்றால் சிறிய தேசிய இனங்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது அருகில் இருக்கும் பேரரசுகளால்தான் அதிகம் தீர்மானிக்கப்படுகிறது என்பது ஒரு வரலாற்று அனுபவம் ஆகும். பின்லாந்தில், திபெத்தில்,கிரீமியாவில்,சைபீரியாவில்,கிழக்குத் திமோரில் அதுதான் புவிசார் அரசியல் யதார்த்தம்.

எனவே ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஒரு தேசமாக சிந்திக்கின்ற வெளியுறவுக் கொள்கைதான். அதை அமல்படுத்தத் தேவையான ஒரு வெளியுறவு பொதுக்கட்டமைப்புத்தான்.அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளடங்களாக தாயகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் அக்கறையுள்ள எல்லோரும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்மக்கள் அரசியலை அரூபமாக சிந்திக்காமல் தூலமாக பிரயோக வடிவத்தில் சிந்திக்க வேண்டும்.அதாவது கட்டமைப்புக்குள்ளால் சிந்திக்க வேண்டும்.ஒரு பொதுவான வெளியுறவுக் கொள்கை; ஒரு பொதுவான வெளியுறவு கட்டமைப்பு போன்றன இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் இந்தியாவை நோக்கி எப்படிப்பட்ட ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைப்பது என்பது தொடர்பில் தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.

பொருத்தமான கட்டமைப்புகள் இருந்தால் எந்த ஒரு நெருக்கடிக்குள்ளிருந்தும் விடுபடலாம் என்பதற்கு ஸ்ரீலங்காவில் அண்மைக்கால உதாரணம் உண்டு. டெல்டா திரிபு வைரஸ் நாட்டின் கழுத்தை நெரித்தது.ஒருபுறம் பொருளாதார நெருக்கடி.இன்னொரு புறம் வைரஸ் நெருக்கடி.மூன்றாவதாக ராஜதந்திர நெருக்கடி.இம் மூன்று நெருக்கடிகளையும் சமாளிப்பதற்கு அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் சுதாகரித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அதற்குரிய கட்டமைப்புகளையும் நிபுணத்துவ அறிவையும் அவர்கள் பயன்படுத்தினார்கள்.அந்த மாற்றங்களை முன்னெடுக்ககூடிய நபர்களை உரிய பதவிகளில் நியமித்தார்கள். அதன் விளைவாக அண்மை மாதங்களில் அரசாங்கம் அதன் வெளியுறவு அணுகுமுறைகளில் ஒப்பீட்டளவில் மாற்றங்களை காட்டியிருக்கிறது.

அவர்கள் ஒரு அரசுடைய தரப்பு.அவர்களிடம் எல்லாவற்றுக்கும் கட்டமைப்புக்கள் உண்டு. ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களிடம் உரிய பொருத்தமான வெளியுறவுக் கொள்கையும் கிடையாது ; ஒரு பொதுவான வெளியுறவுக் கட்டமைப்பும் கிடையாது. இவ்வாறான ஒரு வெற்றிடத்தின் பின்னணியில்தான் மேற்படி கட்சிகள் இதுவரை சந்தித்தன ; இனியும் சந்திக்கவிருக்கின்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி பொகவந்தலாவையில் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

” அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.