திருடன் கையில் பொலிஸ் வேலை கொடுக்கும் அரசாங்கம் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லின மக்களுக்கான சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைந்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகம் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் காலங்காலமாக செயற்படும் கொள்கையே இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த வகையில் சிங்கள இனவாதத்தின் ஒருமித்த செயற்பாடே ஒரேநாடு ஒரே சட்டம். இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரதூரமான விளைவுகளையே சந்திக்கும்.

நான் ஒரு சிங்கள இனவாதி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொடர்ச்சியாகச் செயறபட்டுவருகிறார். கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடி, விவசாயிகளது பிரச்சினைகளென மக்களது விடயங்களெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே கிழக்கு மாகாணத்துக்கென ஜனாதிபதி செயலணியொன்றினை தொல்பொருள் பாதுகாப்புக்கென தாபித்திருந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. மாகாண சபைகளினுடைய அதிகாரங்களைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மாகாண சபையை இல்லாமற் செய்கின்ற முனைப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் சிறுபான்மை மக்களினுடைய இருப்பிலும், அவர்களுடைய நம்பிக்கையிலும் மண்ணைப்போடும் ஒரு செயற்திட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியினுடைய சிந்தனைப் போக்கும், ஆதிக்கமும் இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கிறது. இதன் உட்பொருளை நாம் எல்லோரும் விளங்கிக் கொண்டு விமர்சிக்காமலும் அதற்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலும் இருக்க முடியாது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சிப்பவர்கள் ஏதோ அதற்கு ஞானசார தேரர் தலைமையாக நியமிக்கப்பட்டமைதான் பிரச்சினை என்பதுபோல் காண்பிக்க முயல்கின்றனர்.

கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காது, சட்டத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதியவிடயமல்ல.

இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் என பல்லின மக்களைக் கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் என பல மதங்களைப் பின்பற்றுகின்ற, தமிழ் சிங்களம் என பல மொழிகளைப் பேசுகின்ற பல கலாசார பின்பற்றலைக் கொண்டுள்ள நாடாகும்.

இங்கு ஒவ்வொரு இனத்திற்கென்று பாரம்பரியமான தேசவழமை, முற்குக, கண்டிய, ஷரியா சட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றினைக் கவனத்திலெடுக்காத வகையில் சட்டங்கள் அமைக்கப்படுவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மேலைத்தேயத்தவர்களது வருகையின் காரணமாக உருவான சட்ட ஒழுங்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னர் பல சிக்கல்களை எதிர் கொண்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைத்து சிறுபான்மை மக்களின் பாதுக்காப்புக்கான ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட சட்டம் இப்போதில்லை. அதனை பெரும்பான்மைத் தேசியம் இல்லாமல் செய்து விட்டது. அதன் பிரதிபலிப்பாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவ்வாறானாலும் சிறுபான்மை மக்களை பொருட்படுத்தாத அவர்களை அனுசரிக்காத நாட்டின் தலைவருடைய செயற்பாடு வீண் விளைவுகளைக் கொண்டுவரும்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்டத்தினை உருவாக்குவதற்கு என்ன தேவை ஏற்பட்டது என்பதனை இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் இன முறுகல் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஜனாதிபதி அதனை வலுப்புடுத்தும் வகையிலான செயற்திட்டங்களை உருவாக்குகிறார்.

வெளிப்பூச்சில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும், நாட்டுக்குள் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு பேரினவாத முகத்தையும் காண்பிக்கும் ஜனாதிபதி பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லினம் பல் சமய, பல மொழி பேசுகின்ற மக்களிற்கு சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது ஏதோ திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும்.

நாட்டில் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், ஆதிக்க ரீதியான செயற்பாடு என பல குற்றச்சாட்டுக்கள் இருந்து கொண்டிருக்கையில் மேலும் ஒரேநாடு ஒரே சட்டம் இன்னுமொரு படி மேலே நகர்த்தப்படுவது இலங்கை மக்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் சாபக்கேடாகும்.

ஜனாதிபதி ஸ்கொட்லாந்து நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) ஸ்கொட்லாந்து நாட்டிற்கு பயணமானார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொண்டு செயற்படுவதற்காக உலக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் இந்த மாநாடு, நாளை (31) தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 02 ஆம் திகதி, உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

‘காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ் விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

13-ஐ முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் -02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டி இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பால் கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துமென்றும், இலங்கை அரசாங்கமும் , பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Posted in Uncategorized

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி – மறவன்புலவு சச்சிதானந்தன்

வடகடல் என்கின்ற பாக்குநீரிணை. தென்கடல் என்கின்ற மன்னார் வளைகுடா. 

இரண்டையும் சரிசமமாகக் கிழித்துக்கொண்டு நடுவே ஓடுவதே கற்பனையான இலங்கை இந்திய அனைத்துலக எல்லைக்கோடு. 1976உக்கு முன்னர் இத்தைகைய எல்லைக் கோடு இருந்ததே இல்லை.

தமிழக மீனவர்கள் வடகடலில் எல்லைக் கோட்டைத் தாண்டி வருகிறார்கள். உலகில் இல்லாத வியப்பு நிகழ்வா? 

உலகெங்கும் பல்வேறு இடங்களில் இத்தகைய உள்ளகக் கடல்கள் உள்ளன. அவற்றை ஊடறுத்துச் செல்லும் அனைத்துலக எல்லைக் கோடுகளும் உள்ளன.

இத்தகைய உள்ளகக் கடல் எல்லைகள் அனைத்துலக உடன்பாடுகளுள் அடங்கா. சிறப்பாகச் சில ஆண்டுகளுக்கு முந்தைய கராக்காசு (Caracas Law of the Sea Conference) அனைத்துலக கடல்வள உடன்பாட்டுள் வடகடல் அடங்காது. தென் கடலின் தெற்குப்பகுதி வரக்கூடும்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பது வழமை.

இந்திய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள குமரிப் பரப்பில் (Wadge bank) இலங்கை மீனவர்கள் வளங்களை அள்ளுவதைப் பார்த்துக் கொண்டு தமிழகக் குமரி மாவட்ட மீனவர்கள் கண்டும் காணாது விடுகிறார்கள்.

திருகோணமலையில் நங்கூரமிட்டு பல நாள்,மீன் பிடி வள்ள (multi day fishing vessels) மீனவர் கிழக்கே அந்தமான் தீவுகள் தொடக்கம் மேற்கே விசாகப்பட்டினம் வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். என்றாலும் இந்தியக் கடலோர காவல்படை கண்டு கொள்வதே இல்லை.

தென் கடலில் தூத்துக்குடி வரை கற்பிட்டி மீனவர்கள் சென்றுவருவது வழமை. எப்போதோ ஒருமுறை இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தளையிட்டு மதுரையில் நீதிமன்றம் முன்பு நிறுத்தம். 

தனுக்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 22 கிலோ மீட்டர் தொலைவு. எந்திர வள்ளம் ஒன்றை முடுக்கிய அரை மணி நேரத்தில் தலைமன்னார் மீனவர் தனுஷ்கோடிக் கடலுள் சென்று விடுவார். தனுக்கோடி மீனவர் தலைமன்னார்க் கடலுள் சென்று விடுவார்.  மாதகல் – கோடிக்கரைக் கடல் தொலைவும் அத்தகையதே.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்ததாலேயே, உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் வந்ததாலேயே, போராட்டமே தொடர்ந்தது. போராட்ட காலத்தில் வடக்கின் மீது திணித்த பொருளாதாரத் தடைகளை முறியடிக்க உதவியவர் தமிழக மீனவரே. 

நல்லாட்சிக் காலத்தில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கடுமையாக தண்டிக்கும் சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமந்திரன்  21 ஏப்பிரல் 2015இல் முன்மொழிந்திருந்தார். Indian trawlers have continued to enter Sri Lankan waters and exploit our resources. …………..Foreign fishermen fishing in our water has caused great distress to our fishermen especially those living in the north”, M.A. Sumanthiran stated regarding the issue…………….. The offender will be sentenced to a two-year prison term and will have to pay a fine of Rs. 50,000.” இரண்டாவது வாசிப்பு வரை அச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்தது.

அந்த சட்ட மூல வரிகளைப் படித்ததும் நான் அதிர்ந்தேன. தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் தொப்புள்கொடி உறவுகளைக்கு அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமூலத்தைக் கொண்டு வருகிறாரே என நான் வருந்தினேன்.

என் அருமைத் தம்பி சித்தார்த்தனிடம் சொன்னேன். சுமந்திரனைக் கட்டுப்படுத்த முடியாதே எனச் சித்தார்த்தன் என்னிடம் சொன்னார்.

என் அருமைத் தம்பி மாவை சேனாதிராசாவிடம் சொன்னேன்  அவ்வாறான ஒரு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் வந்ததா என மாவை சேனாதிராசா என்னிடம் கேட்டார். நான் சட்ட மூலத்தின் வரிகளைக் காட்டினேன். தமிழரின் அரசியல் எதிர்காலத்துக்குத் தீங்காக அமையுமே என்றேன். 

மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுத்தார் போலும்! நாடாளுமன்றத்தில் பின்னர் அச்சட்டமூலத்தைச் சுமந்திரன் முன்னெடுக்கவில்லை

அதே சட்டமூலத்தைப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டமாக்கினார். 

எல்லை தாண்டும் இந்திய மீனவரைச் சுட்டுக் கொல்வோம் என்றார், தமிழரசின் ஆதரவுடன் நல்லாட்சியாளர் பிரதமர் இரணில். 

அச்சட்டத்தையே அமைச்சர் இடக்ளசு தேவானந்தா கைவிட்டுள்ளார் எனச் சுமந்திரன் முறையிடுகிறார்.

எந்த மீனவர் எம்மைக் காத்தார்களோ, எந்த நாடு எம்மவர் மூன்று இலட்சம் பேருக்குப் புகலிடம் கொடுத்துள்ளதோ, அந்த மீனவருக்கு அந்த நாட்டுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் தமிழரசுக் கட்சி! 

எந்த முகத்தோடு பாரதம் இலங்கைத் தமிழருக்கு உதவவேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள்? இந்தியாவைச் சீண்டியவாறே, இந்தியாவிடம் அரசியல் ஆதரவு கேட்கிறதே தமிழரசுக் கட்சி.

சுமந்திரனை அறிவோம். இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை அறிவோம். தில்லியில் என்னிடமும் மட்டக்களப்பு யோகேசுவரனிடமும் கூறியவர் தமிழரல்லாத பாரதீய சனதாக் கட்சி மேலிடத்தார்.

சுமந்திரனை ஏன் இன்னமும் வைத்திருக்கிரீற்கள்? தமிழரசுக் கட்சி சார்பில் சென்னையில் தமிழக பாரதீய சனதாக் கட்சியைச் சந்தித்த சத்தியலிங்கத்திடமும் குகதாசனிடமும் கேட்டோர், தமிழக பாரதீய சனதாக் கட்சித் தலைவர்கள்.

மாவை சேனாதிராசாவையும் சிறீதரனையும் சாணக்கியனையும் அந்தப் பட்டியலில் இந்திய அரசியல்வாதிகளும் ஆட்சியாளரும் இன்று முதலாகச் சேர்த்துக் கொள்வர். முதுகில் குத்துவதும் அதே நேரத்தில் ஆதரவு கேட்பதும் ஈழத் தமிழரின் இயல்பு என இந்திய அரசியலாரும் ஆட்சியாளரும் என்னிடம் பலமுறை கூறுவர். 

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள்: மைத்ரி

மாகாண சபை தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாது உடனடியாக நடாத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர், மக்கள் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்து வருவதாகவும் இதற்கான உடனடி தீர்வு இருப்பதாக தாம் நம்பவில்லையெனவும் தெரிவிக்கிறார்.

ஆட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியினர் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றமையும் தாம் தனித்தே போட்டியிடப் போவதாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி – என்ன நடந்தது?

இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பிலான பிரச்னை முடிவின்றி, இன்றும் தொடர்ந்து வருகிறது.

அண்மைக் காலமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அத்துடன், இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அவ்வப்போது பதிவாகியிருந்தன.

சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் பெயர் பலகை ஆகியவற்றில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தன.

தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்தே, தமிழ் மொழி மீண்டும் உள்வாங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்னை பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணியில் கிரிக்கெட் மைதானமொன்று திறந்து வைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தின் திறப்பு பலகையை, ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு பலகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காணப்படுகின்றமை, தமிழ் சமூகம் மத்தியில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களம், தமிழ் – ஆட்சி மொழி

நாட்டின் முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அரசியலமைப்பை ஒவ்வொரு பிரஜையும் மதிக்க வேண்டும் என்பதே, ஜனநாயக நாடொன்றின் அடிப்படையான விடயம் என அவர் கூறுகின்றார்.

நாட்டின் அரச கரும மொழிகள் சட்டத்தையும், அரசியலமைப்பையும் ஜனாதிபதி மீறியுள்ளதாகவும், இது முதல் தடவை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சிங்கள் மற்றும் தமிழ் ஆகிய ஆட்சி மொழிகளையும், இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கில மொழியையும் கொண்ட நாட்டின் மும்மொழி கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதலில் கடைபிடிக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் மொழி அமைச்சரான மனோ கணேசன் பதிலளித்தார்.

தனது அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம், தேசிய மொழி கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவை செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தனது அமைச்சின் கீழ் செயற்பட்ட நிறுவனங்கள் தற்போது வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் பிளவுப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்படாத வகையில் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.

மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமையானது, இந்த அரசாங்கத்தின் உதாசீனத்தை எடுத்து காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசின் பதிலென்ன?

இந்த மைதானம் அமைந்துள்ள வளாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையினால், அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு வசமானது என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.ராணுவத்தினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த மைதானத்தை திறந்தது மாத்திரமே ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தின் பதிலை அறிய பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால் அலுவல்பூர்வமான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை ராணுவம் பிபிசி தமிழிடம் இதற்கு பதில் அளித்தால், அது இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும்.

Posted in Uncategorized

குட்டி ஜனாதிபதிகளாக மாகாணங்களை ஆட்சி செய்யும் ஆளுநர்கள் -ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக இன்று(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்குத் தான் மாகாணசபை முறைமை வந்தது. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்காக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின், கையை முறுக்கித்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது.

அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குப்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 2015 இற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளூர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்குக் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம். எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13, மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையில் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுநர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இன விகிதாச்சார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது.

அந்த வகையில் நாங்கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன் பேசி தமிழ் மக்கன் ஒருவரைக் கிழக்கில் முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு.

அதன்பிரகாரம் நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்.

இந்நிலையில் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாம் தொடரந்தும்முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா – ரெலோ ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்

13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும்இ ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு.

13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுதாக நிறைவேற்றுவதை ஆகக் குறைந்த நல்லிணக்க கோரிக்கையாக இலங்கை அரசிடம் தமிழர் தரப்பு முன்வைப்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழியாகும் என நாம் கூறியபோது பல விமர்சனங்களை சில ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இன்று இந்தியா அதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் தமிழருக்கான எதிர்கால எலக்குகளை எட்டும் அரசியல் பாதை இது தான் என்பதை உணர்த்தியுள்ளது.
கடந்தகால கோரிக்கைகளின் மீள்பதிவு நினைவு படுத்தலுக்காக இணைக்கப் பட்டுள்ளன.

” மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல்இ அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.
எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது. வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில்இ அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் இ ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும்இ தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்இ
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.”

“ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.

இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம். “

இதனடிப்படையில் தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்றும் அவசியம் எனத்தின் நலனுக்கான வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை உணர வேண்டும்

தமிழ் மக்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் நாம் :எமது இயக்கத்திற்கும் வரலாறு உள்ளது-ரெலோ தலைவர் செல்வம்

தமிழ் மக்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் நாம் எங்களுக்கும் வரலாறு இருக்கின்றது. அதனை நாம் கூற முடியும். ஆனால் எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கு அனுப்பிய கடித விவகாரத்தால் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்து வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பொறுப்பு எங்களையும் சார்ந்திருக்கிறது. ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிப்பட்ட கட்சிகள் பங்கு எடுக்க முடியாது. இது விடுதலை சம்பந்தமாக உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பை சிதைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.

எமது மக்கள் பாரிய பிரச்சனையை தாங்கிக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் மாறி மாறி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களைப் பற்றி பல கருத்துக்களை சொல்லியிருந்தாலும் கூட அதற்கான விளக்கத்தை எங்களாலும் சொல்ல முடியும் என்பது உண்மையான விடயம். எங்களுடைய இயக்கத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றையும் நாங்கள் சொல்ல முடியும். அதற்கான காரணங்களையும் சொல்ல முடியும். எங்களுடைய மக்களுக்காக அவர்களது விடுதலைக்காக நாங்கள் துப்பாக்கி தூக்கியவர்கள்.

எப்பொழுதும் எங்களது சிந்தனை மக்களது விடுதலைக்காக இருக்க வேண்டும் என்பதே. ஆகவே, மாறி மாறி தனிப்பட்ட எதிர் கருத்துக்களை சொல்வதன் மூலம் மக்கள் வெறுப்படையும் தன்மை உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒன்றுமை இல்லாத காரணத்தினால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றோம். வடக்கு – கிழக்ககில் தேசியத்தோடு நிற்பவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் கூட, தென்னிலங்கை கட்சிகளை சார்ந்து இருக்கும் தமிழர்களுக்கும் கூடுதலான ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன . இதிலிருந்து மக்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறார்கள். ஆகவே பதிலுக்கு பதில் சொல்லாமல் விடுவதால் நாங்கள் அவர்கள் சொல்லும் விடயங்களுக்கு ஒத்துபோவதாக யாரும் கருதி விட முடியாது.

எங்களுக்கும் வரலாறு இருக்கிறது. பதில் சொல்ல முடியும். மக்கள் காணியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வரை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அது சம்மந்தமாக செயற்படுவதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் மாற்று கருத்துக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. எவரவர் எப்படி செயற்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். அதனை மக்கள் முடிவு எடுக்கட்டும். எதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டோமோ அதேசிந்தனையுடன் எங்கள் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை செய்வோம். எங்கள் மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருகிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என காட்டினால் மக்கள் மனமுடைந்து மிகவும் மோசமான நிலைக்கு செல்வார்கள். எங்கள் மீது உள்ள நம்பிக்கை சிதைக்கப்படும் போது சிங்கள கட்சிகளுடன் போகும் நிலையையும் உருவாகும். அதனால் நாம் மௌனம் காப்பது எங்கள் மீதான கருத்துக்களை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized