நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் – பேராசிரியர் நீலிகா மலவிகே

நாட்டில் டெல்டா பிறழ்வின் 04 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இன்று (22) காலை ஔிபரப்பப்பட்ட விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் இந்த அனைத்து பிறழ்வுகளுக்கும் திறம்பட பதிலளிப்பதாகக் கூறினார்.

கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை தெரிவுசெய்யாமல் அருகிலுள்ள மத்திய நிலையங்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசு மகிழ்ச்சி

தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தாலிபன்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்து ஓரிரு தினங்களில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
தாலிபன்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

அதே வேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு தாலிபன்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தாலிபன்கள் அளித்த உறுதிமொழி தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதாகவும் இலங்கை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே தமது முதன்மையான கவலை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மொத்தமாக 86 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன், தற்போதைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கிடையில், 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது

தாலிபன்

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தாலிபன்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது என இலங்கை தெரிவிக்கின்றது.

தற்போது தாலிபன் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, ஆப்கானிஸ்தானின் அன்றாட நிலைமைகளை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் உறுப்பினர் என்ற வகையில், இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு இலங்கை தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது என இலங்கை உறுதியளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு உண்மையை மூடி மறைக்க மாபெரும் அரசியல் சூழ்ச்சி!

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்கு நீதி கோரி நாடு முழுவதும் இன்று கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசு அதன் பொறுப்புக்கூறலையும் கடமைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.

அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு நீதியை வலியுறுத்தும் விதமாக வீடுகள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றில் இன்று கறுப்புக் கொடி ஏற்றுமாறு கத்தோலிக்க திருச்சபை கேட்டுக்கொண்டிருந்தது.

அதற்கமைய பொதுமக்கள் இன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், வணக்கஸ்தலங்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றினர்.

இதேவேளை, “உண்மையை மூடி மறைப்பது மாபெரும் அரசியல் சூழ்ச்சி!உண்மையைக் கண்டறிய ஒன்றிணைவோம்” என்று வாசகங்கள் எழுதபட்ட பதாதைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வாசற்பகுதியில் இன்று வைக்கப்பட்டிருந்தது.

தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது. இன்று நடைபெற்ற இந்தக் கறுப்புக் கொடி போராட்டம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

புதிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது, கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும்,எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிப்பதற்கும் அமெரிக்கா அளித்த உதவிக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் தனியார் துறை முதலீடுகளை மேற்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க-இலங்கை கூட்டாண்மை பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பின் கூட்டு ஆணையம் மற்றும் யுஎஸ்-இலங்கை துறைசார் உரையாடல்கள் போன்ற பிற இருதரப்பு விடயங்களும் இதன்போது பேசப்பட்டுள்ளன.

இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முற்றாக முடங்கியது திருகோணமலை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முமுவதும் எதிர்வரும் 30 ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் இன்று மூடப்பட்டு முமு நகரமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருகோணமலை மத்திய பஸ் நிலையம், பொது சந்தை கட்டிடத் தொகுதி, மொத்த சில்லறை விற்பனை நிலையங்கள், கட்டட பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் திருகோணமலை, மூதூர், கிண்ணியா, குச்சவெளி, வெருகல், தம்பலகாமம் உட்பட முமு பிரதேசங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Posted in Uncategorized

7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

5000 ரூபாய் கொடுப்பனவு 2000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை அவசரமாக தாயரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அந்த பட்டியலின் படி அடுத்த வாரத்திலிருந்து குறித்த நபர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஊரடங்குச் சட்டம் காரணமாக வருமானமிழந்த மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இம்முறை அது 2000 ரூபாயாக குறைக்கப்ட்டிருப்பது தெரிகிறது.

Posted in Uncategorized

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு பூராகவும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தனித்தனியாக பசிலை சந்தித்த பங்காளிகள்

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சில, தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஷ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவை இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

நேற்றைய தினம் இந்த சந்திப்புகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, வரவு – செலவுத் திட்ட யோசனை குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா நகருக்கு கூட்டம் கூட்டமாக நகருக்கு படையெடுக்கும் மக்கள்!

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்று இரவு முதல் நாடாளவிய ரீதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசியப் பொருட் கொள்வனவுக்காக வவுனியா நகருக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இன்று பிற்பகல் அரசாங்கத்தின் அறிவித்தல் வெளியாகிய நிலையில், அத்தியாவசிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வவுனியா நகர வர்த்தக நிலையங்களில் அதிகளவிலான மக்கள் வருகை தந்து முண்டியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ததை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது.

அரசி, மா, சீனி, பால் மா, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும் நீண்ட வாசையில் மக்கள் நின்று எரிபொருட்களைப் பெற்றுச் சென்றனர். இதனால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.