வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை! புதிய உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 156 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,620 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 344,499 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 302,455 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி எசலா பெரஹரா நாளை முதல் ஆகஸ்ட் 23 வரை

2021 கண்டி எசலா பெரஹெரா நாளை தொடங்கி ஆகஸ்ட் 23 வரை கண்டி, தலதா மாளிகையில் நடைபெறும்.

இவ் ஆண்டு கண்டி எசலா பெரஹரா இலங்கையில் கொவிட் பரவல் காரணமாக பார்வையாளர்களின் பங்கேற்பின்றி நடைபெறும்.

100 யானைகள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் 5,600 பாரம்பரிய கலைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளனர். கண்டி எசலா பெரஹெரா ஊர்வலம் உலகின் பழமையான மத விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கண்டி எசல விழாவின் முதல் ‘கும்பல் பெரஹரா’ ஆகஸ்ட் 13 ஆம் திகதி வீதிகளில் அணிவகுத்து, ஆகஸ்ட் 17 வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

ஆகஸ்ட் 18 முதல் ‘ரந்தோலி பெரஹரா’ கண்டி வீதிகளில் அணிவகுத்துச் செல்லும். ஆகஸ்ட் 22 அன்று பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹரா நடைபெறும்.

தண்ணீர் வெட்டும் விழா மற்றும் பகல் ஊர்வலம் ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.

கொவிட் காரணமாக அனைத்து ஊர்வலங்களும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும்.

Posted in Uncategorized

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அவரை எதிர்வரும் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜிந்ர ஜயசூரிய, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி மரணித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் 4ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் விளக்கமளித்திருந்தனர்.

இதன்போது, 2016ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றியிருந்த யுவதியொருவர், சந்தேகநபரினால் இருவேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அங்குள்ள விருந்தகத்தில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் பின்னர் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இரண்டாவது முறையாகவும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிய போதிலும் அது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட யுவதி வழங்கிய முறைப்பாட்டில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த யுவதியிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கருவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நல்லூர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம் – பூஜை வழிபாடுகளுடன் இன்று கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு சம்பிரதாய பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை மாட்டுவண்டிலில் பருத்தித்துறை வீதி வழியாக எடுத்து வரப்பட்டு காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்ப முயலும் அரசின் உபாயங்களுக்கு இடமளியோம். ரெலோ உறுதி.

ஆகக் குறைந்தது பதின்மூன்றை நிறைவேற்றி மாகாண சபை அதிகாரப் பகிர்வை நிரந்தரமாக்கி நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்.

சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. புரட்டாதி மாத அமர்வில் 46/1 பிரேரணை மறுபரிசீலனை செய்யப்பட்டு கடுமையான அழுத்தங்களை அரசாங்கம் எதிர்கொள்ள இருக்கின்றது. பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்க வில்லை. முற்றாக நிராகரித்திருந்தது. இதனாலே மனித உரிமை பேரவைக்கு வெளியிலே சர்வதேச நாடுகள் அரசாங்கத்துக்கு பல்வேறு விதமான அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மறுபரிசீலனை செய்ய முற்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரசில்
முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மறுபக்கம் நிறைவேற்றப்பட காத்திருக்கிறது. இது வெறும் ஆரம்பமே.

இந்த அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறுபட்ட தந்திரோபாயங்களை ஆலோசித்து வருகிறது. ஐநாவுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தாங்கள் தயார் என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். பயங்கரவாதத் தடைச்சட்டம் அரச துஷ்பிரயோகத்திற்கே உதவுகிறது என சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்கின்றன. அதை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அதை சமாளிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு குழு ஒன்று அமைத்து ஆராய்வதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே தமிழரின் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்று அவரால் கூற முடியவில்லை. அல்லது எதிர்காலத்தில் தமிழர் நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவிக்க முடியவில்லை. ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிரான சகலவிதமான திட்டங்களும் நடைபெறவே போகின்றன.

இப்படியான அரசியல் சூழலில்தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எதைப்பற்றி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த போகிறது என்ற தெளிவான கருத்துக்கள் வெளியிடப்படவில்லை. சர்வதேச மட்டத்தில் அரசுக்கு எதிராக உருவாகிவரும் பெரும் நெருக்கடிகளில் இருந்து தற்காலிகமாகவேனும் தன்னை விடுவித்துக் கொள்ள அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அதன் ஒரு வடிவமாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். ஒருபொழுதும் அரசாங்கத்தினுடைய இந்த முயற்சிக்கு நாம் துணை போக மாட்டோம். எம் மக்களை பலிக்கடா ஆக்கி சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அரச முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.

இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம்.

துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு புதிய சட்டமூலத்தை நிறைவேற்றி அதிகாரங்களை வழங்கிய சீனாவிற்கு கையளித்த அரசினால் ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் 13ம் திருத்தத்தின் மூலம் மாகாண அதிகாரங்களை நிரந்தரமாக்க முடியும். நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இல்லை. தயக்கம் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு மேலாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகங்களின் செயல்பாடு, காணி அபகரிப்பு, தமிழர் தாயக நிர்வாகங்களில் சிங்கள நிர்வாகிகளின் நியமனம் என பல விடயங்களை அரசு செயல்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்கிறோம் என்பதில் என்ன அரசியல் நியாயம் இருக்கின்றது?

பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழ்நிலை ஒன்றுக்கு அரசு தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கூட அரசியல் தீர்வு சம்பந்தமாக சர்வகட்சி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு 18 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை. அதேபோன்று 13ஆம் திருத்தத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தரப்பிலிருந்து என்னென்ன அரசியல் சாசன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதற்காக தற்போதைய வெளிநாட்டு அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவினாலும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படியான பல அனுபவங்களை நாம் கடந்து வந்த பின்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தவுடன் கூட்டமைப்பு ஓடி வந்து விடும் என்று அரசோ அல்லது வேறு தரப்புக்களோ கருதுவது வேடிக்கையானது.

பேச்சுவார்த்தை அவசியமானது. நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி சாதகமான சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமை.

பேச்சுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை விடுத்து சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற அரசாங்கத்தின் தந்திரோபாய நடவடிக்கைக்கு தமிழ் மக்களை பலியாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

இன்று பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்கள் கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழப்பு : 75 ஆண்களும் 49 பெண்களும் பலி !

நாட்டில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று மாத்திரம் 2,890 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 341,982 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,464 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

NGO வை மேற்பார்வையிட ஒரு புதிய சட்டமூலத்துக்கான திட்டம்!

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி தொடங்கினார்.

தன்னார்வ நிறுவனங்களின் பதிவுக்காக 1980 ஆம் ஆண்டு எண் 31 இன் தற்போதைய தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் விதிகள் தற்போதைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று அரசு கூறுகிறது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 1980 ஆம் ஆண்டு தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை ஒரு புதிய சட்டத்துடன் மாற்றுவதற்கான சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவைக்கு அவர் உத்தரவிட்டார். தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப ஆகஸ்ட் 09 திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை (12) ஆரம்பம்

நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை இராணுவம் வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது.

அதற்கமைய, முதியவர்கள், நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் COVID – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை நாளை (12) முதல் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்படுகின்றது.

அதன்படி, ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்புகொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுவதுடன், இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தை 1906 அல்லது 0112 860 002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு முற்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

ஆணையாளர்களை நியமிக்கும்போது தகவலறியும் உரிமைக்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியம்.

· ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகள் ஊடாக பொருத்தமான நபர்களை உள்ளடக்கிய பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டன.

இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு) பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதோடு, 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கேற்ப புதிய ஆணையாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நம்புகின்றது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்ட பிரிவு 11 இன் ஏற்பாட்டின் கீழ் நிறுவப்பட்டதாகும்.

இவ் ஆணைக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியால் எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமன முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு சட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை உள்வாங்கப்பட்டுள்ளது.

எனவே,தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பதவி/ நியமனங்களை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது பாராளுமன்ற பேரவையின் பொறுப்பாகும்.

இருப்பினும், அரசியலமைப்பு பேரவை போலல்லாமல், யாரை நியமிக்கவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கு வெளிப்படையான பரிந்துரைகளை வழங்குவதற்கு பதிலாக குறித்த நியமனங்கள் தொடர்பான அவதானிப்பை செலுத்துவது மாத்திரமே பாராளுமன்ற பேரவைக்கு செய்ய முடியுமான ஒன்றாகும்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும்போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி கருத்திற் கொள்வார் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா எதிர்பார்க்கின்றது.

அவ்வாறு கருத்திற் கொண்டு செயற்படுவதானது இலங்கையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு சட்டத்தின் ஜனநாயக தன்மையினை தொடர்ந்தும் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தும் அதேவேளை, குறித்த பிரிவினரிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் எனவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நம்புகின்றது.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையினை உறுதி செய்யும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது சுதந்திரமாக செயற்பட்டதன் காரணமாகவே அவர்களால் இவ் அடைவினை எட்ட முடிந்தது.

ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாட்டினை ஜனாதிபதி தொடர்ந்தும் பாதுகாப்பார்” என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகின்றார்.

ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் சிவில் சமூக பங்களிப்பினை நிறைவேற்றுவதற்காக நாட்டிலுள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்களையும் அணிதிரள ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நடவடிக்கைகளை மேற்கொண்டது.

jகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவி நியமனங்களுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் பரிந்துரைத்த பெயர்கள் நேற்று பாராளுமன்ற பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது ஆளும் நிர்வாகம் மற்றும் அரச துறைகளை பொது மக்களுடன் இணைக்கும் பாலமாக நாம் கருதலாம்.

சிறிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் தொடக்கம் பிரதமரின் சொத்து அறிவிப்புக்களை வெளியிடுவது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் வரையிலான தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு தற்போதைய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் காலப்பகுதியில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகின்றமைக்கான சிறந்த சான்றுகளாகும் மற்றும் ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தினையும் தெளிவுபடுத்துகின்றது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் குறிப்பிடுகையில் “ தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் பின்னணி மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கு என்பன பொதுமக்கள் மீது ஏற்படுத்துகின்றது.

நியமிக்கப்பட்ட ஆணையாளர்கள் அரசியல் சார்பற்ற அல்லது அரசியலுடன் நேரடி தொடர்புகள் இல்லாதவர்களாக இருந்தால், அவர்களால் மக்கள் சார்பாக பாரபட்சமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, தகவல் அறியும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவிகளில் நியமிக்கப்படும் தனிநபர்களின் இயல்பை கூர்ந்து கவனிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களூடாக பாராளுமன்ற பேரவைக்கு பின்வரும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

1. Dr. A.K.C.H பிரியங்கனி ஜயசுந்தர

பரிந்துரை: SAFE நிறுவனம்

2. திருமதி. J.H நில்மினி சுனேத்ரா குமாரி

பரிந்துரை: Child Vision Sri Lanka

3. திரு. P. சாய் பாலசுப்ரமணியம்

பரிந்துரை: Peoples’ Development Foundation

4. Rev. Dr நோயல் டயஸ்

பரிந்துரை: Centre for Social Justice and Equity

5. திரு. D.M சமந்த தசநாயக்க

பரிந்துரை: Centre for Human Rights and Community Development

6. Dr. பிரதிபா மஹாநாமஹேவா

பரிந்துரை: Caritas SED

7. திரு. சம்பத் புஷ்பகுமார

பரிந்துரை: Families of the Disappeared

8. திரு. நடராஜா சிவரஞ்சித்

பரிந்துரை: NGO கூட்டமைப்பு (Consortium), அம்பாறை

9. திரு. ஐங்கரன் குகதாசன்

பரிந்துரை: ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா