சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.

அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.

வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.

ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா)

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஒரே ஒரு பேசுபொருளாக இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குமாக தமிழ்ப் பொது வேட்பாளராக மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் பெயர் குறிப்பிட்டிருக்கின்றது.

தற்போது உண்மையிலேயே தமிழ் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது கடந்த காலங்களிலே இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினாலும், 1978ம் ஆண்டு நிறைவேற்று ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டதில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களது பிரச்சனைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதைக் கூட கணக்கெடுக்காத நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியிலே தோற்றம் பெற்றது. இந்நிலைப்பாடு தமிழ் மக்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை, தற்போதும் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இங்கு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், 2009க்கு முன்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் ஒன்றாக இருந்ததைப் போன்று தற்போதும் ஒன்றாக நின்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற அடிப்படை உணரப்பட்டே தோற்றம் பெற்றது.

இதனூடாக தென்னிலங்கையிலே ஜனாதிபதியாக வர ஆசைப்படும் வேட்பாளர் எங்களுடன் பேரம்பேசுகின்ற ஒரு நிலைப்பாடு உருவாகலாம் என்ற நோக்கமும் இதனுள் உண்டு. பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலே நான்கு பேருக்கிடையில் ஒரு போட்டி நிலவக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதில் வெல்லக கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலமும் தற்போது இருக்கின்றது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கின்ற நிலையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு, பரிசீலிப்பதற்கான நியாயமான தீர்வான்றை இவர்கள் முன்வைப்பார்களாயின் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது உகந்ததாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

ஏனெனில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில் எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்களில் எவராவது பரிசீலிப்பார்களாக இருந்தால், அதற்கான உத்தரவாதங்களைத ருவார்களாக இருநதால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்திய தரப்பினரை பேசுவதற்கு அழைத்தால் அவர்களுடன் பேச வேண்டிய தேவைப்பாடும் எங்கள் மத்தியில் இருக்கின்றது.

அவ்வாறு எங்கள் கோரிக்கைகள் நியாயமாகப் பரிசீலிக்கப்படாதவிடத்து, தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருந்து இன்னும் சிங்களத் தரப்பிலே ஜனாதிபதியாக வருபவர்கள் எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தயாராக இல்லை என்ற விடயத்தை உறுதியாக வெளி உலகத்திற்குச் சொல்வதற்கும், எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இந்த நிலையில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத் விடயம் சரியானது என்பதை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையும் இங்கு உருவாகும் என்று தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி

காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksha) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். சபா குகதாஸ் (Saba Kugadas) கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்றையதினம் (01.08.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும்,

பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு மாகாண இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என கைவிட்டுள்ளனர் என கூறியதுடன் பெரமுன ஒரு போதும் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை ஏமாற்றியதன் விளைவு

நாமலின் தந்தை மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவிற்கு பதின்மூன்று பிளஸ் வழங்குவேன் என உத்தரவாதம் கொடுத்ததை யுத்த முடிவின் பின்னர் பதின்மூன்று பிளஸ் பிளஸ் என பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தியதையும் அவர் மறந்திருக்கமாட்டார்.

மகிந்த ராஜபக்ச தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கற்றுக் கொண்டதை மறந்து விடமாட்டார்.

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் உச்சம் 2013ஆம் ஆண்டு புள்ளடி மூலம் காட்டப்பட்டது.

வாக்கெடுப்பு

அதன் வெளிப்பாடு தமக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பது தான் என நாமல் ராஜபக்ச நினைவில் கொள்ள வேண்டும்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி | Saba Kugadas Question To Namal

2019ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பை உலகமே அறியும்.

தமிழ் மக்களை பிரித்தாளும் எண்ணங்களை கை விட்டு முடிந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு வாக்கெடுப்பை நாமல் நடாத்த வேண்டும்” – என்றுள்ளது.

Posted in Uncategorized

அடக்குமுறைகளை பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர் – கறுப்பு யூலை நினைவேந்தலில் நிரோஸ்

கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமை பொறிமுறையை உறுதிப்படுத்தாமையினால்  தமிழ் மக்கள் ஆகிய நாம் உள்நாட்டில் மனக்கசப்புடனும் அதிர்ப்தியுடனும் அடக்குமுறையை சகித்தே வாழ்கின்றோம். இவ்வாறு ரொலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
 
தந்தை செல்வா கேட்போhர் கூடத்தில் ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தலில்  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
இலங்கையில் பல இனக் கலவரங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும்  கறுப்பு யூலை இனக்கலவரம் சர்வதேச கவனத்தினை ஈர்த்ததாகக் காணப்பட்டது. அது முமையாக அரச திட்டமிடலிலேயே இடம்பெற்றது. அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காணப்பட்ட வெலிக்கடைச் சிறைக்குள் எமது இயக்கத்தின் தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தலைவர்களை நாம் ஆகுதியாக்கியுள்ளோம்.  அவர்கள் போன்ற செயல்வீரமும் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க தலைவர்களை எமது கட்சி மாத்திரம் இழக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியமே இழப்பினைச் சந்தித்தது. தமது மரணத்தில் தம் கண்களை கொடையளித்து தமது கண்கள் மலரும் விடுதலை பெற்ற தாயகத்தை காணும் என கனவு கண்ட தலைவர்கள் கண்கள் பிடுங்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக தலைவர்கள் உள்ளிட்ட 53 பேரை அரச அனுசரனையில் கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கி படுகொலை செய்தனர்.

 வன்முறைகள் வாயிலாக டயர்கள் பேட்டு எரித்து மூவாயிரம் தமிழர்களை அழித்தனர். 25 ஆயிரம் பேரை காயப்படுத்தினர். 50 ஆயிரம் பேரை உள்ளாட்டில் சொத்துக்களை சூறையாடியும் கொன்றும் இடம்பெயர்ந்தோராக்கினர்.
 
இந்தச் சம்பவங்கள் அரசின் உயர்மட்ட திட்டமிடலிலேயே நடந்தன. அதற்கு உதாரணமாக, வன்முறைக்கு இரு வாரங்களுக்கு முன் (193 யூலை 11) லண்டனைத் தளமாகக் கொண்ட டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டியளித்த அரசுத்தலைவர் ஜெயவர்த்தனா, தமிழ் மக்கள் விடயத்தில் தமக்குக் கவனம் கிடையாது. அவர்களுக்கு எது நடந்தாலும் சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்று அரச பொறுப்புணர்வுத் துறப்பினை வெளிப்படுத்தினார்.  நடந்த சம்பவங்களை கண்காணிப்புக்கு உட்படுத்திய பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம்  (International Commission of Jurists, ICJ)  நடைபெற்றவற்றை இனப்படுகொலை என சுட்டிக்காட்டியது.  

இவ்வாறாக உள்நாட்டிலேயே எண்ணற்ற அநியாயங்களை எதர்கொண்டவர்களாக அவற்றுக்கான நீதிக்கு பல தசாப்தங்கள் கடந்தும் கிடைக்கப்பெறாது போராடும் ஓர் இனமாக நாம் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்தம் என தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள்

இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்துள்ளதோடு 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் அங்கம் பெற்றுள்ளன.

குறித்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் சார்பில் சி.வேந்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் யதீந்திரா மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பம் இட்டனர்.

Posted in Uncategorized

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் : சஜித் பகிரங்கம்

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கான (Mannar) விஜயத்தை இன்று (15) மேற்கொண்ட சஜித், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை

மேலும் தெரிவிக்கையில், “மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.

வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது.

முக்கியமாக நாட்டின் நீதிப்புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

மாகாணசபை முறைமை

இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்நிலையில், மாகாணசபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சியால் உடைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மீண்டும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளாா்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்றவகையில் சிலர் பேசி வருவதாகவும், ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லையென்ற காரணத்தினால் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களால் முன்மொழியப்படும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது தமக்கு அழைப்பு விடுவதற்கு அரச ஆதரவு அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அச்சம் கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளாா்.

சம்பந்தனின் வெற்றிடத்தை நிரப்ப ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: ரெலோ கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடன் நிரப்புவதற்கு விரும்புகிறோம் என தமிழர் ஈழ விடுதலை இயக்கம்(TELO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்  தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கும்  ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோருக்கு ரெலோவின் செயலாளர் நாயகம் தனித்தனியே கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முதலாவதாக மறைந்த இரா.சம்பந்தன் ஐயாவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, கடந்த 23 வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக எங்கள் எல்லோராலும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டு இரா.சம்பந்தன் ஐயா செயற்பட்டு வந்தார். தற்போது அவரது மறைவுக்குப் பின்பு புதிதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுள் கடந்த காலங்களில் பல உள்வீட்டுப் பிரச்சினைகள், மனவேதனைகள் வந்தபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தினுள் எமது மக்களின் தேவை, நன்மை கருதி ஒற்றுமையாகத்தான் செயற்பட்டு வந்தோம். அந்த அடிப்படையில் தொடர்ந்தும் ஒற்றுமையாக நாடாளுமன்றத்தினுள் செயற்பட விரும்புகின்றோம்.

எனவே, ஏற்பட்டுளள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான வெற்றிடத்தை எல்லோருடைய சம்மதத்துடனும் நிரப்புவதற்கு விரும்புகின்றோம்.

நாடாளுமன்ற சிரேஷ்ட தன்மை மற்றும் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே, 26 வருடங்களுக்கு மேலாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது.

Gallery

Gallery

Gallery

இரா.சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் – ரெலோ

தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான பயணத்தில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் வரிசையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற மறைந்த அரசியல்வாதிகள் வரிசையில் சம்பந்தனும் இணைந்துகொண்டுள்ளார்.
1977களில் தன்னை நாடாளுமன்ற அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்ட சம்பந்தன் அவர்கள் 1983 ஜுலைக் கலவரத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டும், இலங்கை அரசியலமைப்பின் 6ஆம் திருத்தத்திற்கு ஆதரவளிக்கமுடியாது என்றும் எதிர்ப்பினை வெளிக்காட்டியமையினால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். இருந்தாலும் அதன் பின்னரான 18 வருடகாலங்கள் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் இருந்திருந்த போதிலும் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்திருந்தார். அது தமிழ் மக்களுக்கான அவருடைய அரசியல் பணிக்குக் கிடைத்த வெகுமதியாகும். 
2009க்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமைப் பேராட்டத்திற்கு தலைமை தாங்கியது மட்டுமல்ல ஒருமித்த, பிரிக்கப்படாத நாட்டுக்குள் பல விமர்சனங்களுக்கும் பலரது வேறுவிதமான விருப்பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒரு சமரஷ்டி முறையிலான தீர்வைக் கொண்டுவருவதற்கு முயற்சித்தார்.

அவ்வேளைகளில் மாறிமாறிவந்த அரசுத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டவர். அதே நேரத்தில் முஸ்லிம் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும் சமாந்தரமாக அணுகுவதிலும் பின்நிற்கவில்லை. அதனால் தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல்வாதிகளாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தார். 

தன்னுடைய முதுமையினையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பாடுபட்டவரான ஆர்.சம்பந்தன், வெளிநாட்டு தூதுவர்கள், உலக நாடுகளின் தலைவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவராக இருந்தார். சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடமும் தமிழ் மக்களுடைய விடயங்களை எடுத்தியம்பும் வகையில் தன்னுடைய அரசியலை தொடர்ந்து வந்திருந்த அவர் இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் ஜனநாயக வழிமுறையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார்.

அந்தவகையில்தான் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி   சிங்கள அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடியதுடன், 2015ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வேளையில் அரசியலமைப்பு மாற்றத்திற்காக பாடுபட்டிருந்தார். 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவிடாது அரசியல் ரீதியாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒர் பேரிழப்பாகும்.
2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைமைதாங்கி வழிநடத்திவந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவிலும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களிலும் அண்மைக்காலங்களில் மனம்நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒன்றுமையும் ஒருமிப்பும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பயணமுமே நாம் அவருக்குச் செய்யும் இறுதிக்கடனாகும்.

ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியை இழந்து துயருறும் தமிழ் மக்கள், அவருடைய குடும்பத்தார், அவருடைய கட்சியினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோ.கருணாகரம் பா.உ.
செயலாளர் நாயகம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
01.07.2024

Posted in Uncategorized