தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை

13 ஆம் திருத்தம், 16 ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பொது செயலாளர்சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.

இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ம் திருத்தம், 16ம் திருத்தம் என்பவை ஆகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது. 13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்து விட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்ட விரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.

16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.

ஆகவே 13ஐ பற்றி பேசும் போது, இந்திய அரசு 16 பற்றும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு பறித்துக்கொண்டு கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனரகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.

அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும் இந்திய அரசுக்கும், புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட்சமபலம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழு முழுக்க தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. இதுவே ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டு கொள்வது இல்லை. அப்படியானால், இந்த மக்கள் வேறு நட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியிரை சந்திக்க விரும்புகிறது, இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவேதான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியீடு

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவான விதத்தை நினைவில் கொண்டு இந்த விடயத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

மேலும் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து இங்கு விவாதித்து எந்தவொரு பலனும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் இல்லாது செய்தமையால் இன்று சர்வதேசத்தின் பகையை சம்பாதித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபயவின் பெயர்-எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு

பத்திரிகை சுதந்திரத்தை பெருமளவில் முறியடிக்கும் 37 அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களின் விபரங்களை ‘RSF’ என்று அழைக்கப்படும் எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளதுடன், முதல் முறையாக இரு பெண்களும் ஒரு ஐரோப்பியரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஃப் இன் பத்திரிகை சுதந்திர வரைபடத்தில் 19 பேர் சிவப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அவர்களின் நிலைமை பத்திரிகை சுதந்திரத்தக்கு “மோசமானது”.

16 நாடுகளின் தலைவர்கள் கறுப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது அவர்களின் நிலைமை பத்திரிகை சுதந்திரத்துக்கு “மிகவும் மோசமானது”.

பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயற்படும் கொடுங்கோலர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (13) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

” பத்திரிகை சுதந்திரத்தை சூறையாடும் 37 தலைவர்கள் தற்சமயம் உலகம் முழுவதும் உள்ளனர். இந்த பட்டியல் முழுமையானது என்று யாரும் சொல்ல முடியாது” என்று ஆர்எஸ்எஃப் பொதுச்செயலாளர் கிறிஸ்டோஃப் டெலோயர் கூறினார்.

“இவ்வாறான தலைவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது சொந்த பாணியைக் கொண்டுள்ளனர். சிலர் பகுத்தறிவற்ற மற்றும் சித்தப்பிரமை உத்தரவுகளை பிறப்பித்து பயங்கரவாத ஆட்சியை முன்னெடுக்கின்றார்கள். மற்றவர்கள் கடுமையான சட்டங்களின் அடிப்படையில் கவனமாக கட்டமைக்கப்பட்ட மூலோபாயத்தை பின்பற்றுகிறார்கள்.

பட்டியலில் புதிதாக நுழைந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சவூதி அரேபியாவின் 35 வயதான கிரீட இளவரசர் முகமது பின் சல்மான்.

அவர் தனது கைகளில் உள்ள அனைத்து சக்திகளின் மையமாகவும், பத்திரிகை சுதந்திரத்தை சகித்துக் கொள்ளாத ஒரு முடியாட்சிக்கு தலைமை தாங்குகிறார். அவரது அடக்குமுறை முறைகளில் உளவு மற்றும் அச்சுறுத்தல்கள் அடங்கும், அவை சில நேரங்களில் கடத்தல், சித்திரவதை மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத பிற செயல்களுக்கு வழிவகுத்தன.

ஜமால் காஷோகியின் கொடூரமான கொலை வெறுமனே காட்டுமிராண்டித்தனமான ஒரு கொள்ளையடிக்கும் முறையை அம்பலப்படுத்தியது.

பட்டியலில் புதிதாக நுழைந்தவர்களில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவும் அடங்குவர், ஊடகங்களைப் பற்றிய ஆக்ரோஷமான மற்றும் கசப்பான சொல்லாட்சி தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து புதிய உயரங்களை எட்டியுள்ளது.

மற்றும் ஒரு ஐரோப்பிய பிரதம அமைச்சர், ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆவார். அவர் 2010 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊடக பன்மைத்துவத்தையும் சுதந்திரத்தையும் சீராகவும் திறம்படவும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியவராகவும் காணப்படுகிறார்.

முதன் முறையாக பட்டியலில் இரு பெண்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவார்.

ஒருவர் கேரி லாம், அவர் 2017 முதல் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி, லாம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கைப்பாவை என்பதை நிரூபித்துள்ளார்,

இப்போது ஊடகங்களுக்கு எதிரான தனது கொள்ளையடிக்கும் கொள்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கிறார். ஜூன் 24 அன்று ஹொங்கொங்கின் முன்னணி சுயாதீன செய்தித்தாள் ஆப்பிள் டெய்லியை மூடுவதற்கும், அதன் நிறுவனர் ஜிம்மி லாய், 2020 ஆர்எஸ்எஃப் பத்திரிகை சுதந்திர பரிசு பெற்றவரை சிறையில் அடைப்பதற்கும் அவரது தலைமை வழிவகுத்தது.

மற்றைய நபர் 2009 முதல் பங்களாதேஷின் பிரதம அமைச்சராக இருக்கும் ஷேக் ஹசினா.

அவரது கொள்ளையடிக்கும் சுரண்டல்களில் 2018 இல் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்வது 70 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பதிவர்கள் மீது வழக்குத் தொடர வழிவகுத்தது.

இந்தப் பட்டியலில் புதிதாக இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் இடம்பிடித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜயந்த கெட்டகொட இராஜினாமா – பசில் பாராளுமன்றத்திற்கு?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஸவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸவின் பெயர் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று முற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இவரின் இராஜினாமாவால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக பசில் ராஜபக்ஸவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயார்!

இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் பரஸ்பர நலன்களை முன்னேற்றுவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.

1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.எங்கள் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை மக்களும் பாராட்டுகின்றனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி, தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அளவுகள் நன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தினேஷ் குணவர்த்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

இக் கடித்தில் வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவின் சந்தர்ப்பத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரசாங்கம் குறித்து அதிருப்த்தியா..? தாரளமாக வெளியேறலாம், கதவுகள் திறந்தே இருக்கின்றன – பிரதமர் மகிந்த

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறுவதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்துவைத்துள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் விதத்தில் சில அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஐலண்ட் நாளிதழிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் அரசியல்கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியலில் உள்ள வேறுபலர் போல இல்லாமல், நாங்கள் உள்ளக ஜனநாயகத்தை பேணுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள எவரும் வெளியேறலாம், மக்களின் நம்பிக்கை எங்கள் மீது உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம், அதற்காகவே மக்கள் எங்களிற்கு பெரும் ஆணையை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர் அதனை பெரிதுபடுத்தக்கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் விதம் குறித்து எவராவது உண்மையிலேயே அதிருப்தியடைந்திருந்தால் அவர்கள் வெளியேறுவதற்காக எங்கள் கதவுகள் எப்போதும் அகலத்திறந்திருக்கின்றன அதேபோன்று நாங்கள் ஆட்சி செய்யும் விதம் பொருத்தமானது என கருதி எவராவது எங்களுடன் இணைய விரும்பினால் எங்கள் கதவுகள் அவர்களிற்காகவும் திறந்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்து அழைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தீர்மானத்தினை நிறைவேற்றிய நாடுகள் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் -வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்

டெய்லி மிரருடன் மேற்கொண்ட டுவிட்டர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1998 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பாக செயறபடுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை அணுகினார்.

ஏனைய நாடுகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர் எனினும் நோர்வே தொலைதூர நாடாக காணப்பட்டதாலும் இலங்கை குறித்து தனிப்பட்ட நலன்கள் இல்லாததன் காரணமாகவும் இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக காணப்பட்டதாலும் அவர்கள் நோர்வேயை தெரிவு செய்தனர்.

நோர்வே என்பது இந்தியாவிற்கும் இலங்கை விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த முக்கிய வெளிநாடுகளிற்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாடாக காணப்பட்டது.

முதல் இரண்டு வருடங்கள் அனைத்தும் கொழும்பில் இரகசியமாக இடம்பெற்றன.
விடுதலைப்புலிகள் தரப்பில் சமாதான முயற்சிகள் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கும் மாத்திரம் தெரிந்திருந்தது.

2000 ம் ஆண்டு சந்திரிகா தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்டார் அதன் பின்னர் அவர் எங்களின் பங்களிப்பு குறித்து பகிரங்கப்படுத்தினார்

2001-2002 இல் நாங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம்முதல் இரண்டு வருடங்கள் அது மிகவும் வெற்றிகரமானதாக காணப்பட்டது எவரும் கொல்லப்படவில்லை.

ஒஸ்லோ உடன்படிக்கை குறித்த இணக்கப்பாடு காணப்பட்டதுஅது இலங்கை பிரச்சினைக்கு இரு தரப்பும் சமஸ்டி உடன்படிக்கையை ஆராயவேண்டும் என தெரிவித்தது.

இது இடம்பெற்றவேளை விடுதலைப்புலிகள் மிகவும் பலமான நிலையிலிருந்தனர் பலர் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே சமாதானப்பேச்சுவார்த்தைக்குள் இழுத்து வரப்பட்டனர் என தெரிவித்தனர்

ஆனால் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் அவர்கள் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையிலிருந்தனர்.
விமானநிலையம் மீதான தாக்குதல் இலங்கை பொருளாதாரத்தின் மீதுமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் மிகவும் பலமாகயிருந்தவேளையே சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

மெல்லமெல்ல சமாதானப்பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சி காணத்தொடங்கின இருதரப்பும் மற்றைய தரப்பை இலக்குவைக்க தொடங்கின.

ஆனால் விடுதலைப்புலிகள் அரசாங்கத்தை விட அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மகிந்த அதிகாரத்திற்கு வந்ததும்வீதியோர வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் அவரது ஜனாதிபதி பதவியை பலவீனப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் முயன்றனர்.

ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை .
அவர் அனைத்து தவறுகளையும் செய்ய தொடங்கினார்பாரம்பரிய இராணுவத்தை போல செயற்பட தொடங்கினார்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹக்கீமுடன் பிரிட்டன் தூதர் பேச்சு!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized