தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் கலந்துரையாடல்

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் சிறிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் (30-6-21) நடைபெற்றுள்ளது.

15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் குறித்த கட்சிகளின் தலைவர்களும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பசில் ராஜபக்ச விவகாரம் காரணமாக அரசாங்கத்திற்குள் குழப்பநிலை

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய குழப்ப நிலையும் பிளவும் ஏற்பட்டுள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமையை காரணம் காட்டி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதை எதிர்த்துள்ளன.

இவர்கள் இது குறித்த தங்கள் அதிருப்தியை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் வெளியிட்டுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தில் அவருக்காக உருவாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியே இம்முறையும் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற அறிக்கைகள் முதலில் வெளியான போதிலும் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது பிரதமரே தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற சில நிறுவனங்களை பசில் ராஜபக்சவிற்கான அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான திட்;டம் காணப்படுகின்றது.

இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக பசில் ராஜபக்சவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவது தாமதமாகலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்காவுக்கு சீன அதிபர் மறைமுக எச்சரிக்கை

பிற நாடுகளை சீனா ஒருபோதும் ஒடுக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

பெய்ஜிங் நகரின் தியானென்மன் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் ஷி ஜின்பிங் உரையாற்றினார். கூடியிருந்தவர்களின் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை.

யாரும் சீனாவை அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜின்பிங் தனது உரையின்போது கூறினார்.

தங்களது வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டுவிழாவை ஒட்டி பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

1921-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு 72 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

Source:பிபிசி தமிழ்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர்ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

‘ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க சட்டப்பூர்வ தீர்வு’அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

தமிழகத்தில் வசிக்கும் அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கு சட்டப் பூர்வ தீர்வு காணப்படும் என்றார் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான்.

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டிலுள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களின் வசதிகள், அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 108 ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுமட்டுமின்றி காவல்துறையில் பதிவு செய்துவிட்டு, முகாம்களைவிட்டு வெளியே வசிக்கும் நிலையில் 13,553 குடும்பங்கள் உள்ளன.

Posted in Uncategorized

துமிந்தவின் விடுதலைக்காகத்தான் ஏனைய கைதிகளின் விடுதலைகள் இடம்பெற்றதா? ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா

பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு, அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அரசியற் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு என்னும் அடிப்படையில் பதினாறு தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விடயம் உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏனைய அரசியற் கைதிகளையும் விரைவில் விடுவிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசு முன்வர வேண்டும்.

அரசியற் கைதிகளின் விடுதலை மற்றும் சாதாரண கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் துமிந்த சில்வா அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதானது துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா என எண்ணத் தோணுகின்றது. துமிந்தவின் விடுதலை தொடர்பில் தமிழர் தரப்பில் இருந்து கேள்விகள் வந்து விடக் கூடாது என்பதற்காக எமது அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றதா? என்கின்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

என்ன நடக்கின்றது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று வார்த்தையில் மாத்திரம் சொல்லிக் கொண்டு பேரினவாதத்திற்கு ஒரு சட்டமும் ஏனைய சமூகத்திற்கு ஒரு சட்டமும் என்ற விதத்தில் சட்டப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா வெறும் ஐந்தே ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். தண்டனைக் கைதியாக இருந்த ஞானசார தேரரும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். அதே போல ஒரு இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞனும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இதே நாட்டில் தான் ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். அத்தோடுஇ இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் அவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். இவர்களை போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சிறையில் இன்னும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன்இ சமூக வளைதளங்களில் பதிவுகள் இட்டதன் அடிப்படையில் மட்டும் இளைஞர்கள் உட்பட 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் காரணங்கள் இன்றி தடுத்து வைத்து இருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் சகலரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியும் அடிமைப்படுத்தியும் வைத்திருப்பதற்கே திட்டங்களை வகுக்கின்றன. மதகுரு என்ற ரீதியில் ஞானசாரதேரருக்கு சட்டம் வளைய முடியுமாக இருந்தால் ஏன் ரகுபதி சர்மாவிற்கும் இதே அடிப்படையில் சட்டம் பிரயோகிக்கப்பட முடியாது? ஆளாளுக்கு ஒவ்வொரு விதமதாகச் சட்டத்தினைப் பிரயோகிப்பதையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் ஜனாதிபதி உட்படுத்துகின்றாரா?

எனவே பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாதஇ பயங்கரவாத சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“இராணுவச் சீருடை அணியவேண்டாம்” சீனத்தூதரகத்திடம் பாதுகாப்புச் செயலர் கோரிக்கை!

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் சீனத் தூதரகத்திடம் நேற்று விளக்கம் கோரியிருந்தார்.

இதன்படி குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பலில் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்கு அர்ப்பணிக்கிறார்!

முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பலீல் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்காக அர்ப்பணிக்கவுள்ளதாக உள்ளூர் அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான முகம்மது பலீல் மர்ஜான் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஒப்புக் கொண்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபரான முகம்மது பலீல் மர்ஜான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார், அதனால் அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நாடாளுமன்றத்திற்கு வர உதவிய முஸ்லிம் நபர் ராஜினாமா செய்வதை பிரதமர் ஆரம்பத்தில் மறுத்த போதிலும், நாடாளுமன்ற செயல்முறைக்கு அவர் அளித்த பங்களிப்பு மிகக் குறைவு என்பதை விளக்கி அவர் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டதை ஏற்றுக்கொண்டார்,

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜூலை 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், அதே நாளில் பொருளாதார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராகவும் பதவியேற்பார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பாடங்களும் நிறுவனங்களும் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையை மீண்டும் குறைப்பதாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபையையாவது காப்பாற்ற எம்மவர்கள் ஒன்றிணையவேண்டும்! இன்றேல் அநாதையாவோம் என்கிறார் ரெலோ செயலாளர் ஜனா எம்.பி.

1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்த கட்டத்தில் உண்மையிலேயே தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை,கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும்,1 மாகாணசபை முறைமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாகாணசபையை அரசியல் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும்.

அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள்.

அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம்.
இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.

தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருக்கின்றார்கள்.
தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையைத் தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள்.

அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் அந்நிய செலாவணிச் சந்தைக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளியகப் பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளைகள் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதால், அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்படக்கூடிய ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கும் நிதிப்பிரிவின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணவும் குறித்த கட்டளைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்நிய செலாவணி வெளியகப் பரிமாற்றலின் அடிப்படையில் ஒரு சில மட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை தொடர்ந்தும் 2022 ஜூலை மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized