மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு HRW வலியுறுத்து!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இன்று வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகளுக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றபோதும், கடுமையான இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனது உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யவுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வெசாக் பூரணை தினமாக ஜூன் -24 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் உட்பட 94 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சித்திரவதை மூலம் பலவந்தமாகக் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவர்கள் பலர் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன், சக அரசியல்வாதியைக் சுட்டுப் படுகொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளியான துமிந்த சில்வாவுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தமையானது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன், பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரம் தனிப்பட்ட விறுப்பு-வெறுப்புக்களின்பால் பயன்படுத்தப்படுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

2019 -இல் பதவியேற்றதிலிருந்து ராஜபக்ச அரசு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டைத் தூண்டுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை இன்னும் மோசமானதாக்குவதற்கான நடவடிக்கைகளை கோட்டாபய ராஜபக்ச எடுத்துவருகிறார்.

மார்ச் மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இது இன, மத மற்றும் வகுப்புவாத ரீதியாக செயற்பட்டு தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டப்படும் எவரையும் இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க வழி செய்கிறது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை கொழும்பில் ஒரு மோசமான சித்திரவதை தளத்தில் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என இப்பகுதி வழக்கறிஞா் ஒருவர் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் ராஜபக்ச அரச நிர்வாகத்தின் கீழுள்ள பாதுகாப்புப் படைகளால் ஏராளமான சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என சா்வதேசத்தில் இருந்தும் உள்நாட்டில் இருந்து தொடா்ச்சியான அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் மோசமான துஷ்பிரயோகங்களை ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி + சலுகையை இரத்துச் செய்யும் தனது அறிவிப்புக்கு குறித்த ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

அனுமதியின்றி சீனர்கள் நாட்டுக்குள் நுழையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது – சரத் பொன்சேகா

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தியதால் தேசிய பாதுகாப்பு உறுதி பெறாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு மாற்றமும் புலனாய்வு பிரிவில் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு பதவிகளில் நியமனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு வலுவடைந்துவிட்டதாகக் கூற முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரானுக்கு அப்பால் இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாதவரை நாட்டில் அடிப்படைவாத , பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படும்.

பாதாள உலகக் குழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அண்மையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் நபரொருவரை கடத்திச் சென்று சுட்டுகொலை செய்து களனி கங்கையில் வீசியவர்கள் யார் ? தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கூட பாதாள உலகக்குழுவினரைப் போலவே செயற்படுகின்றனர்.

அதனால் தான் பிரபாகரனை அழைத்துச் செல்வதைப் போன்று 20 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக சென்று அசேல சம்பத்தை இழுத்துச் சென்றனர். இவ்வாறு செயற்படும் அதிகாரிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்களுக்கு மாத்திரமல்ல. இலங்கைக்குள் பிரவேசித்து எமது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டவருக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தேசிய சொத்துக்களும் மீள பெறப்படும்.

இலங்கைக்குள் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிக இடம் பாரிய ஆபத்தாகும். இவ்வாறு இடமளிக்கப்பட்டுள்ளமை சீனர்கள் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என்றார்.

Posted in Uncategorized

மேலும் சில நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர தடை!

இலங்கையினுள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களினுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும், அந்த நாடுகளின் வழியாக வரும் புலம்பெயர்ந்த பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

17 பெண்களும் மற்றும் 24 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 254,828 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 221,249 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

“சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர்கள் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி கோட்டாபயவிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இன்று எதிரணி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

விலைவாசி உயர்வுக்கு கொரோனா என காரணம் காட்டும் ஜனாதிபதியால், தனது 19 மாத ஆட்சியின் முழு அலங்கோலத்தையும் கொவிட் கொரோனா என்ற திரையை போட்டு மூட முடியாது.

ஜனாதிபதி கோட்டாபயவை நினைத்து, எல்லே குணவன்ச தேரர் இன்று கண்ணீர் விட்டு அழுகின்றார். இன்னொருவரான முருத்தெட்டுவே தேரர் திட்டி தீர்க்கிறார். உண்மையில் அழ வேண்டியது அவர்கள் அல்ல, நாங்களே. ஆனால், இவர்கள் அழுது திட்டுகிறார்கள். இவர்கள்தான் இந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்கிய பெளத்த தேரர்கள். இவர்களின் அழுகையும், திட்டுமே இந்த அரசின் இலட்சணத்ததை படம் பிடித்து காட்டுகிறது.

இன்று இந்நாட்டில் ஆடை தொழில் ஏற்றுமதியின் எதிர்காலம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இவர்களின் மனித உரிமை மீறல் காரணமாக ஜிஎஸ்பி சலுகை இல்லாமல் ஆக போகிறது. இதனால், இந்த ஏற்றுமதி வருமானம் நின்று போகலாம். சுற்றுலாதுறை முழுமையாக நின்று போய் விட்டது. மத்திய கிழக்கு பணியாளர்களின் வாழ்வும், வருமானமும் இன்று கேள்விக்கு உரியதாக மாறி உள்ளது.

இந்நிலையில், இன்றும் அன்றும், என்றும் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருவது தேயிலை ஏற்றுமதியே. இதனாலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசினார். ஆனால், “சிலோன் டீ” யின் பின்னால் உள்ள உழைப்பாளிகளின் உயிர் வாழ்வு அவருக்கு மறந்து விட்டது.

தோட்ட தொழிலாளரை அப்படியே தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் சும்மா இருக்கிறீர்கள். அவர்களை தோட்ட நிறுவனங்களிடம் பணயக் கைதிகளாக விட்டு விட்டீர்கள். உங்களை அரசில் தோட்ட தொழிலாளரை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சி குறட்டை விட்டு தூங்குகிறது.

இலங்கை சிலோன் தேயிலை தொடர்பாக பேசிய ஜனாதிபதி, இலங்கைத் தேயிலையின் பின்புலத்தில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் பேச மறந்துள்ளார். அது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். எப்பொழுதும் போலவே இன்றும் நாட்டில் மிஞ்சியுள்ளது, தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் ஏற்றுமதித் தொழில்துறை மட்டுமே.

இந்தத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்தீர்களா என அவரிடம் நான் வினவ விரும்புகின்றேன், கவலை கொள்கிறேன். அவர் சற்றும் அது குறித்து நினைத்துப் பார்த்தது போல் தெரியவில்லை. தோட்டத் தொழிலாளர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்தருவதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படுகிறது? நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 30 நாட்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைப்பதாக ஜனாதிபதி நினைக்கிறாரா? அவ்வாறு இல்லை. ஏழு அல்லது எட்டு நாட்களுக்கான சம்பளமே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதுபோல, நாளொன்றுக்கு அவர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் எடை, தோட்டத்திற்கு தோட்டம், நிர்வாகத்திற்கு நிர்வாகம் மாறுபடுகிறது. தான்தோன்றித்தனமாக அவர்கள் அதனை நிர்ணயித்துக் கொள்கின்றனர். புத்தகத்திலே குறிப்பிடப் பட்டிருப்பதைப் போன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற எண்ணப்பாட்டிற்கமைய, அந்த நியாயம் அவர்களுக்கு கிடைக்கவில்லை, 5000 ரூபாய் உதவிப் பணமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை,

தோட்ட தொழில் துறை இது ஒரு ஏற்றுமதி தொழில். இதில் எப்படி கொரோனா வருகிறது? வருமானம்தான் வருகிறது. இதில் கிடைக்கும் அரசின் வரி வருமானம் மூலம் தோட்ட தொழிலாளருக்கு நிவாரணம் வாழங்குங்கள்.

இதேபோல் நடுக்கடலில் மிதந்த இரசாயன திரவியம் கொண்ட, தீப்பற்றிய கப்பலை யார் இங்கே இலங்கை கடலுக்குள் கொண்டு வர சொன்னது? துறைமுக மாஸ்டரா ? அல்லது உங்கள் அமைச்சரா? உங்கள் அரசா? அதில் பெருந்தொகை காப்புறுதி கிடைக்கும் என கற்பனை செய்தீர்களா?

இதனால் இன்று பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை தோட்ட தொழிலாளரைப் போல், மீனவர்களும் நடுத்தெருவுக்கு வந்து கொண்டுள்ளார்கள். அது மன்னார் வரை போய் விட்டது. அவர்கள் வாழ்க்கை உடைகிறது. நம் கடலின் மீனவ செல்வங்கள் பேரழிவை சந்திக்கின்றன. அதேபோல் இலங்கை மக்களின் சாப்பாட்டு மேசைகளில் இன்று மீன் உணவு இல்லை. மீன் வாங்க சமைக்க எல்லோரும் பயப்படுகிறார்கள். மீன் உணவும் இல்லை. மீனவர் வாழ்வும் இல்லை.

அதேபோல், உங்கள் உரக்கொள்கை சந்தி சிரிக்கிறது. இரசாயன உரம் வேண்டாம். சேதன உரம் வேண்டும். என்ற கொள்கை பற்றி எங்களுக்கு நீங்கள் தொலைக்காட்சியில் வந்து விரிவுரை நடத்த வேண்டாம். அது எங்களுக்கு தெரியும். அதை ஒரே நாளில் செய்ய முடியாது. உலகில் நூற்றுக்கு நூறு சேதன உரத்தால், பயிர் செய்யும் நாடு என்ற ஒன்று கிடையாது.

நெல் விவசாயிகள் மட்டுமல்ல, காய்கறி விவசாயிகள், கிழங்கு விவசாயிகள், தேயிலை பயிர் என நாடு முழுக்க இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகசூல் குறைய போகிறது. இன்றைய நாளை விட, இன்னமும் சில மாதங்களில் நிலைமை மோசமடைய போகிறது. இது தொடர்பாக உங்களுக்கு யாரோ கொடுத்த இற்றுப்போன கயிற்றை நீங்கள் விழுங்கி, சாப்பிட்டு விட்டீர்கள். அதுதான் உண்மை.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய அவர்களே, உங்களது பத்தொன்பது மாத அலங்கோல ஆட்சியினால், தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் ஆகிய அனைவரும் இன்று வாழ்விழந்து தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

Posted in Uncategorized

உயிர் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், ஷானி அபேசேகர தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரிவாக விளக்கியுள்ளார்.

அதன்படி, நியாயமாக நடந்துகொண்டு தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் என நம்புவதாகவும் ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக வருமாறு:

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பயிற்சி நிலை உப பொலிஸ் பரிசோதகரான நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன். கறுவாத்தோட்டம் , மருதானை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய பின்னர் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி சி.ஐ.டி.யில் முதன் முதலாக கடமைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டேன்.

அத்துடன் கடந்த 2009 ஏப்ரல் முதலாம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சேவை செய்த பின்னர் மீள சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு, 2019 நவம்பர் 21 ஆம் திகதிவரை அங்கு கடமையாற்றினேன்.

2020 ஜனவரி 7 ஆம் திகதி காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளரக இடமாற்றம் பெற்றதுடன், 2020 ஜூலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கம்பஹா நீதிமன்றில் உள்ள பீ 1536/20 எனும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன்.

இதன்போது கடந்த 2020 நவம்பர் 24 ஆம் திகதி விளக்கமறியலில் இருந்த போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நான், பொலன்னறுவை கல்லேல்ல கொவிட் 19 தொற்று இடைத் தங்கல் முகமிலும், பின்னர் வெலிகந்த வைத்தியசாலையிலும் பின்னர் ஐ.டி.எச். வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றேன்.

அதன்பின்னர் 2021 ஜனவரி 18 ஆம் திகதிவரை இறுதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றிருந்தேன்.

இவ்வாறான நிலையிலேயே 2021 ஜூன் 16 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த பிணை அனுமதிக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

எனது பொலிஸ் சேவையில் நான் நேர்மையாக பல விசாரணைகளை முன்னெடுத்தேன். அதனால் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலக குழு உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களை சேர்ந்தோரை நான் கைது செய்துள்ளேன். அவர்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்டவை கிடைக்கப் பெறவும் எனது விசாரணைகள் காரணமாகின.

நான் கைது செய்யப்பட முன்னர் 2020.01.7 ஆம் திகதி இரவு 11.23 மணிக்கு எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் எனது குடும்பததாரை கொலை செய்துவிடப் போவதாக மிரட்டப்பட்டிருந்தேன். அது தொடர்பில் எனது மனைவி கடந்த 2020.01.08 ஆம் திகதி முறைப்பாடளித்திருந்தார். எனினும் அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு, தேசிய உளவுச் சேவை வழங்கிய அறிக்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனால் எனக்கும், எனது வீட்டுக்கும் மேலதிக அதிரடிப் படை பாதுகாப்பு முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் வழங்கப்பட்டது.

எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து காலிக்கு இடமாற்றப்படும் போது நீங்கள் அந்த பாதுகாப்பினை பறித்தீர்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், எனக்கு இருந்த உயிர் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இரு துப்பாக்கிகளை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சின் ஊடாக எழுத்து மூல அனுமதியைப் பெற்றிருந்தேன். எனினும் நான் கைது செய்யப்பட்டதும் குறித்த துப்பாக்கிகளை எனது மனைவி, பொரளை பொலிஸ் நிலையத்தில் எனது ஆலோசனைக்கு அமைய ஒப்படைத்திருந்தார்.

இந் நிலையில் தற்போது எனது உயிருக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நான் முன்னெடுத்த விசாரணைகளில் அரசியல் வாதிகள், இராணுவ, கடற்படையினர், பொலிசார், பாதாள உலக குழு உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அச்ச்சுறுத்தல்கள் நீண்டன.

ஏற்கனவே எனது பதுகாப்பு தொடர்பில் பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பிலான பொலிஸ் பிரிவு, மனித உரிமைகள் ஆணைக் குழு, பிரதம நீதியரசர், பொலிஸ் ஆணைக் குழு, சட்ட மா அதிபர் ஆகியோருக்கும் உங்களுக்கும் முறைப்பாடளித்துள்ளேன்.

இவ்வாறான நிலையிலேயே நிலைமையை நியாயமாக ஆராய்ந்து எனதும், எனது குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் எனும் நம்பிக்கையில் இக்கடிதத்தை எழுதிகிறேன்.’ என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு கடும் நிபந்தனை விதிக்கும் சீனா!

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால், தமது தடுப்பூசி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தக் கூடாது மற்றும் அது குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என சினோவாக் நிறுவனம் கடும் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தம்முடனான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விலை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டாலோ அல்லது அது குறித்து பொதுவெளியில் பேசினாலோ இலங்கை அரசாங்கத்துடனான உடன்படிக்கை நிறுத்தப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சீன நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு கடந்த 13ம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடமிருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்படும் விலைகள் குறித்து சர்ச்சை நிலவுகின்ற சூழலிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியை பஙகளாதேசிற்கு வழங்கியதை விட அதிகரித்த விலையில் இலங்கைக்கு சீனா வழங்கியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Posted in Uncategorized

16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் கூட கிழக்கில் இல்லை -ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலைசெய்யப்பட்ட 16 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை என்பது கவலைக்குரிய விடயம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உரறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும். அச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இத்தடைச்சட்டத்தை நீக்கி நாட்டில் நிரந்தர அரசியல்தீர்வை கொண்டுவாருங்கள்.அப்போது நாட்டில் குழப்பமும் வராது போராட்டமும் இருக்காது.

“ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்தப்படுமென்ற அழுத்தமே இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவைத்திருக்கின்றது. எனினும், விடுதலை செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர்கூட கிழக்கைச் சேர்ந்தவர் இல்லை.

“அண்மையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சம்பவத்தில் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டு, இதே சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

“அதேபோல் பேஸ்புக்கில் தவறாகப் பதிவிட்டார்கள் என்றபெயரிலும் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் விடுதலை செய்யப்படவேண்டும்” என்றார்.

இன்று இடம்பெறவிருந்த சூம் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ரெலோ தலைவர் செல்வம் எம்பி

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும் அதற்கு தமிழ் ஈழ விடுதலை  இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ரெலோவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவிருந்த சூம் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து, நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. அது எமது மக்களிடத்திலும், மண்ணிலும் ஒரு அபாயகரமான நிலைமையை உண்டுபண்ணிகொண்டிருக்கின்து.
இதற்கு நாம் தடைபோடவில்லை என்றால் நிச்சயமாக இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

அதனை முறியடிக்கவேண்டும் என்றால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.

குறிப்பாக மாவைசேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அதற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றார்கள்.
கஜேந்தி்ரகுமார் தனது பதிலை அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த அணியில் அவர் தொடர்ந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.
யாரை அழைப்பது என்ற விடயம் தொடர்பாக நாம் அனுப்பிய கடித்தில் சில தவறுகள் இருப்பதை குறிப்பிடவேண்டும். எந்தக்கட்சியினை சார்ந்தவர்கள் என்ற விடயத்தினை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும். அதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

இந்த விடயம் பிசுபிசுத்துப்போயுள்ளதாக சில ஊடகங்கள் தமது கருத்துக்களை சொல்கின்றது. ஆரம்பப்புள்ளியினையே நாம் வைத்திருக்கின்றோம். அதில் தவறுகள் இருக்கும். அவற்றை திருத்திக்கொள்வோம். அதனை பெரிதுபடுத்தாது இந்த ஒற்றுமைக்கான வாய்ப்பினை தரவேண்டும். கூட்டமைப்புத்தான் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நாம் செய்யவில்லை. அத்துடன் இந்த ஒற்றுமை புலம்பெயர் உறவுகளோடும் தமிழ்நாட்டு மக்களோடும்   பேணக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.

அந்தவகையில் யாரை அழைப்பது யாரை விடுவது என்ற ஆலோசனையை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்றையே இன்று ஏற்பாடு செய்திருந்தோம். எனவே யாரும் விடுபடமாட்டார்கள், விடுபட்டவர்களையும் அழைத்துக்கொண்டு மிகவிரைவிலே முழுமையான ஒரு கூட்டத்தினை நடாத்துவதற்கான முயற்சியினை மேற்கொள்வோம்.

இது ஒரு கட்டமைப்பாக வருவதே சாலச்சிறந்ததாக இருக்கும். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. நாம் சோர்ந்து போகமாட்டோம், அதற்கு என்னவிலை கொடுக்கவேண்டுமோ. அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம்.
அரச தரப்புடன் இணைந்து செயற்படும் வடக்கினை சேர்ந்த கட்சிகளையும் இந்த கட்டமைப்பில் உள்வாங்கி செயற்படுவீர்களா என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு..
அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையே நாம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆகவே ஒரு வலுவான ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக அவர்களும் வரவேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டால் அதனை நாங்கள் பரிசீலிக்கத்தயார் என்றார்.

சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில்! சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம்

இலங்கையில் போர் முடிவிற்குவந்து 12 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், தமிழர்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு இரத்தக்கறை படிந்த சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னும் தொடர்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மிளகாய்த்தூள், பிளாஸ்டிக்பைகள், பெற்றோல், கட்டுமானக்குழாய்கள், தண்ணீர் பீப்பாய்கள், மின்சார வயர்கள், சிகரட்கள், முட்கம்பிகள், சூடான இரும்புக்கம்பிகள், கப்பிகள் மற்றும் கிரிக்கெட் விக்கெட் மட்டைகள் என்பன சித்திரவதை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சித்திரவதை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கும் அதேவேளை, போர் முடிவடைந்ததன் பின்னர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் சிலர் கடந்த 2020 நவம்பரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகின்ற பாதிக்கப்பட்டோரில் அநேகமானோர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்களது வாக்குமூலங்களை ஆவணப்படுத்துவதில் தாமதமேற்பட்டுள்ளது.

ஜனாதிபதித்தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகப் பிரசாரம் செய்தமையும் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொண்டமையுமே தாம் கடத்தப்பட்டமைக்கு காரணமென விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் கூறுகின்றனர்.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இலங்கை எந்தளவிற்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோ, அந்தளவிற்கு சித்திரவதைகளுக்கும் பிரபல்யம் பெற்றுள்ளது.

பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஷ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொள்வதுடன் பாதுகாப்புப்படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இதுவாகும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டிய நேரமாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized