இராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் பிரகலாத் பட்டேல் வலியுறுத்தல்

இராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அது உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் எனவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Times of India நாளிதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.

இராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் தனிப்பட்ட முறையில் தனக்கும் அதில் விருப்பம் இருப்பதாகவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் கூறியுள்ளார்.

இராமர் பாலம் தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

இராமர் இலங்கை வரும்போது வானரப் படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைத்ததாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை செயற்படுத்தி இராமர் பாலம் வழியாக கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இராமர் பாலம் சேதமடைந்து விடும் என பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் இராமர் பாலத்திற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பு கிடைக்கும் என்பதுடன், சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமற்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்ற முடியாத ’19’ மீள வரும்: ரணில் உறுதி!

சர்வாதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டம் தற்போது நடைமுறை அரசினால் திருத்தப்பட்டு 20ம் திருத்தச் சட்டம் ஊடாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள போதிலும் மீண்டும், இனி ஒரு போதும் எதிர்காலத்தில் மாற்ற முடியாத வகையில் 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதே தமது அரசியல் இலக்கு என்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள அவர், புதிய வியூகம் அமைத்து பயணிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

அவரது முதல் நாள் நாடாளுமன்ற உரை வெகுவாக அனைவரையும் கவர்ந்திருந்த அதேவேளை, அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்ததன் பின்னணியில் நேற்றைய தினம் ஜனாதிபதி நீண்ட விளக்கவுரை வழங்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், மீண்டும் எதிர்காலத்தில் மாற்றவே முடியாத படி 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சீன ஆக்கிரமிப்பு! தமிழரின் பேரில் அனுமதி

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்பிற்குள் சீன நிறுவனம் கடலட்டை பண்ணை அமைத்து செயற்படுத்தி வருவதாக அந்த பிரதேசத்தில் இருக்கும் பிரதேச கடற் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கௌதாரிமுனையில் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்கள் பலர் தாங்கள் கடலட்டை வளர்ப்பதற்கு கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு அதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும் சீன நிறுவனம் ஒன்று தங்களின் கடற்பரப்பிற்குள் பண்ணை அமைத்து கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர். குறித்த கடலட்டைப் பண்ணை தொடர்பில் பூநகரி பிரதேச செயலகத்தில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீன நாட்டவர்களால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் கடலட்டை வளர்க்கும் ஒருவருடைய பெயரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் பண்ணை அமைத்துள்ளபோதிலும் பூநகரி பிரதேச செயலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடல் தொழில் திணைக்களத்தினதோ அனுமதி பெறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரிடம் இருந்து அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்தோடு குறித்த நிறுவனத்துடன் தங்களுடைய கௌதாரிமுனை கடற்றொழிலார் அமைப்பை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கோரி வருவதாகவும் ஆனால் தாங்கள் கைச்சாத்திடவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல் – கேணல் ஹரிஹரன்

இலங்கையில் கடந்தமாதம் துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டமையால் பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மத்தியில் விசனமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரத்தில் விசேட பொருளாதார வலயம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதன் விளைவாக தென்னிந்தியாவுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பெருமளவு பரபரப்பை தோற்றுவித்து வருகின்றன.

அடுத்த இரண்டு தசாப்தங்களில் கொழும்பு துறைமுக நகரம், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நிதியியல் மையமாக முழுமை முதிர்ச்சியுடையதாக வளரப்போகிறது.

ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், சீனஅரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புகள் நிர்மாண கம்பனியின் ஒரு துணை நிறுவனமான சீன துறைமுக பொறியியல் கம்பனி 85 வீதமான நிலத்தின் குத்தகை உரிமையை 99 வருடங்களுக்கு கொண்டிருக்கும்.

கொழும்பு துறைமுகநகரத்தினால் தோற்றுவிக்கப்படக்கூடிய பீதி வெறுமனே தென்னிந்தியாவுக்கு மாத்திரமானதல்ல. முழு இந்தியாவுக்குமானது. உண்மையில், வர்த்தகரீதியாக நோக்குகையில் கொழும்பு துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனென்றெல், இந்தியாவின் 70 சதவீதமான கொள்கலன் போக்குவரத்துக்கள் இந்த துறைமுகமூடாகவே நடைபெறுகிறது.

மூலோபாய நிலைவரங்களில், கொழும்பு துறைமுகத்துக்கு நெருக்கமான சீனப்பிரசன்னம் வித்தியாசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆனால், அதையும் விட கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு.வர்த்தகமும் வாணிபமும்,தொலைத்தொடர்பும் நிதியியலும் உட்கட்டமைப்புகள் என்று பன்முக சீன நலன்களை கொழும்பு துறைமுகநகரம் சட்டரீதியானவையாக்குகிறது.

இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தை சவாலுக்குள்ளாக்குவதில் சீனாவுக்கு ஒரு பெரிய அனுகூலத்தை கொடுக்கிறது. அத்துடன் இது அபிவிருத்தி உதவி என்ற பெயரில் இந்தியாவின் அயலகத்தில் செல்வாக்கை மேம்படுத்த, சீனா அதன் ஈடிணையில்லா பணப்பல ஆற்றலை பெருக்கவும் உதவும்.

இலங்கையில் அதிகரிக்கும் சீன செல்வாக்கு குறித்து பல இலங்கை தலைவர்கள் கவலைப்படவும் செய்கிறார்கள்.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். ” அபிவிருத்தி என்பது நாட்டின் வளங்களை விற்பனை செய்வதல்ல……. நாட்டைப் பாதுகாப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். தயவுசெய்து எமது நாட்டை வேறுநாடுகளுக்கு கொடுக்காதீர்கள்” என்று அவர் கேட்டுருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு எதுவுமாகவில்லை; சீனாவின் காலனியாக மாறுகிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

விசேட பொருளாதார வலயம் சீனாவுக்கு வர்த்தக, நிதித்துறை நன்மைகைளை மாத்திரம் வழங்கவில்லை. ஆனால், அது இந்தியாவின் தொலைத் தொடர்பு கட்டமைப்புகளுடன் தலையீடு செய்து ஒற்றுக்கேட்பதிலும் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களை அவதானிப்பதிலும் இணையவெளி அச்சுறுத்தலை அதிகரிப்பதிலும் சீனாவின் புலனாய்வு மற்றும் எதிர்ப்புலனாய்வு நடவடிக்கைகளை பெருக்கச்செய்யும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக விசேட பொருளாதார வலயம் இந்திய நலன்களுக்கு எதிரான முகவர்கள் ஊடுருவி செயற்படக்கூடிய வசதியான இடமாக எளிதாக மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.கடந்த காலத்தில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊடாக பாகிஸ்தான்முகவர்களும் பயங்கரவாதிகளும் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.

அத்தகைய முயற்சிகளை தடுப்பதற்கு குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் கரையோரங்களிலும் விமானநிலையங்களிலும் பாதுகாப்பை கடுமையாக பலப்படுத்தவேண்டியிருந்தது.

இலங்கையின் உன்னதமான பூகோள அமைவிடம்; இருமருங்கிலும் இந்துசமுத்திரத்தின் கடல் போக்குவரத்து ஒழுங்கைகள்; இந்தோ பசுபிக்கில் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பின் அத்தியாவசியமான பகுதியாகிறது.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தை கட்டமைப்பில் ‘குவாட்’ அமைப்புடன் இந்துசமுத்திர நாடுகள் இணைந்துவிடுவதற்கான சாத்தியம் குறித்த சீனாவின் விசனமும் அதிகரித்து வருகிறது.

சீனாவை நோக்கிய குவாட்டின் இலக்குகள் இந்தோ பசுபிக்கில் சட்டம் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான, திறந்த சர்வதேச ஒழுங்கை உறுதிசெய்வதை நோக்கியவையாக இருக்கின்றன. கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்த அரசியல் சர்ச்சையொன்று கொழும்பில் கிளம்பியிருந்தபோது மேயில் சீனாவின் அரசாங்கசபை கவுன்சிலரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் வெய் ஃபெங்க டாக்காவுக்கும் கொழும்புக்கும் குறுகிய விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்த பிறகு வெய் அமைதியான அபிவிருத்தியும் இருதரப்புக்குமே பயனுடைய சரியான வழியிலான முன்னோக்கிய பாதையிலான ஒத்துழைப்புமே இன்றைய உலகளாவிய போக்கு என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பிட்ட சில பிரதான நாடுகள் குழுக்களை உருவாக்குவதில் அக்கறைகாட்டுகின்றன; மக்களின் பொது அபிலாசைகளுக்கு எதிராக செல்கின்றதும் பிராந்திய நாடுகளின் நலன்களை பாதிக்கின்றதுமான பிராந்திய மேலாதிக்கத்தில் நாட்டத்தையும் காட்டுகின்றன என்று குவாட் கட்டமைப்பின் பெயரை குறிப்பிடாமல் அவர் சொன்னார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீதுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இத்தகைய கருத்தை வெளியிட்டஜெனரல் வெய், பிராந்தியத்துக்கு வெளியில் உள்ள வல்லாதிக்க சக்திகள் தெற்காசியாவில் இராணுவக் கூட்டணிகளை அமைத்து மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக பங்களாதேஷும் சீனாவும் கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்வரும் மாதங்களில் இந்தோ பசுபிக் மூலோபாய சூழ்நிலைகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களுடன் சேர்த்து சீனாவிடமிருந்து பாரதூரமான நெருக்குதல்களை இலங்கை எதிர்நோக்கும் என்பது வெளிப்படையானது. அத்தகைய சூழ்நிலைகளில், இலங்கையின் பொருளாதாரம் அதன் குவியும் கடன்களை சமாளிக்க போராடும்போது சீனாவின் பணத்தை நாடவேண்டிய நிர்ப்பந்தத்தை தவிர்ப்பது ஜனாதிபதி ராஜபக்ஷவை பொறுத்தவரை மிகவும் கஷ்டமானதாகும்.

இலங்கையும் இந்தியாவும் அவற்றின் பாதுகாப்பு அக்கறைகளை பொறுத்தவரை பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வைக்கொண்டுள்ளன. இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிறல் ஜெயந்த கொலம்பகே 2020 நவம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் பொருளாதார அபிவிருத்திக்காக ஏனைய நாடுகளுடன் காரியமாற்றுகின்றபோதிலும்கூட, இலங்கையின் மூலோபாய பாதுகாப்புக்கொள்கை “இந்தியா முதலில்” என்ற அணுகுமுறை ஒன்றைக்கொண்டிருக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்திவிட்டார்.

ஆனால், அத்தகைய உணர்வுகள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை மீறுவதை தடுக்கும் என்றில்லை.கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை எண்ணெய் குதங்கள் போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணங்கள். இலங்கையையும் சீனாவையும் சம்பந்தப்படுத்திய முத்தரப்பு உறவுகளைப் பொறுத்தவரை இந்தியா வலுமிக்க மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.

கொழும்பு துறைமுக நகருக்குள் சீனா அதன் பிரசன்னத்தை வலுப்படுத்தும்நிலையில், இலங்கையின் அரசியல் செயற்பாடுகளிலும் அது செல்வாக்கை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியும்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா இலங்கையில் நடந்துகொண்டதைப்போன்ற நிலையை ஒத்ததாக, இலங்கையின் கட்சி அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கமாக துறைமுக நகரின் செல்வாக்கு வந்துவிடும்.

சீனாவின் பணப்பலத்துடன் இந்தியாவினால் போட்டிபோட முடியாது என்பதும் அபிவிருத்தி போட்டியிலும் கூட பிரிவுபிரிவாகவே வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்பதும் வெளிப்படையானதாகும்.

ஆனால், இலங்கையுடனான பொதுவான கலாசார, வரலாற்று உறவுகளை இந்தியாவினால் பலப்படுத்தமுடியும். இந்தவிடயத்தில், இலங்கையின் அனுகூலத்துக்கு ஏற்றமுறையில் தமிழர்கள் மத்தியில் நீரிணை ஊடான உறவுகளை இந்தியா ராஜீவ் காந்தி யுகத்தின் தலையீட்டு கட்டத்துக்குப் பிறகு பயன்படுத்தவில்லை.

திஸ்ஸமஹாராம சீன – இலங்கை வாவி புனரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமது அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வரை இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் மதிப்பீடு செய்து வாவிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்பு இந்தப் பணிகளை முன்னெடுப்பதா அல்லது மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என தொல்பொருள் திணைக்களம் உத்தேசிக்கும் என்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத்தடைச்சட்ட புதிய நடைமுறைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் அல்லது அவரசகால நிலையின்போது கைதுசெய்யப்பட்டவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய நடைமுறைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

‘சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினத்தை’ முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் அல்லது அவரசகால நிலையின்போது கைதுசெய்யப்பட்டவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அந்த நடைமுறைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பொறுத்தமட்டில், புனர்வாழ்வளித்தல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை. அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், இந்த நடைமுறைகளை நிறைவேற்றும் அதிகாரமையத்துடன் நெருங்கிய தொடர்பிலிருப்பதும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இயங்கின என்பதையும் அங்கு பாலியல் வன்முறைகள் மற்றும் பாலினப்பாகுபாடுகள் உள்ளடங்கலாக எந்தளவிற்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதையும் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைத் தீவில் தமிழரின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் இல்லை அரசியல் தீர்வே! ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்டு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதல்ல நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதே ஆகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு தமக்கு சாதகமாக கையாள ஒன்றிணைந்து தீர்வுக்கான உறுதியான நிலைப்பாட்டை தயார்ப்படுத்தி இராஐதந்திர காய் நகர்த்தல்களை மேற் கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்டு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதல்ல நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதே ஆகும். 1948 ஆண்டில் இருந்து 2019 வரை ஆட்சியில் ஆட்களை மாற்றியதை தவிர ஆட்சியின் நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியவில்லை என்பது தமிழர்களுக்கு பாரிய ஏமாற்றமாகும்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளரின் வெளிநாட்டுக் கொள்கை கடந்தகால ஆட்சியாளர்களின் நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதால் இந்திய மேற்குலக நாடுகளின் தொடர் அழுத்தங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இது தொடரும் இதனை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு சாதகமாக கையாள வேண்டும். தற்போதைய ஆட்சியாரின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையும் ஆளும் கட்சியில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானோர் புதிய முகங்களாக உள்ளமையாலும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் மாற்றத்தை எதிர்க்கட்சியால் ஏற்படுத்த முடியாது.

தற்போதைய கோட்டாபய ஆட்சி 2025 வரை தொடரும் போது ஏற்பட இருக்கும் சர்வதேச பூகோள இராஐதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு களம் இறங்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் அல்ல தங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வே.

Posted in Uncategorized

இலங்கை விடயங்களை கையாள, இந்தியா விசேட தூதுவரை நியமிக்க வேண்டும்: சர்வதேச கருத்தரங்கில் தாயன் ஜயதிலக யோசனை

இலங்கையின் அண்மைக்கால விடயங்களில் இந்தியா அதிகளவில் கரிசணை கொண்டுள்ள நிலையில் இலங்கை விடயங்களை உயர்ந்த மட்டத்தில் கையாள்வதற்கு உடனடியாக விசேட தூதுவரை நியமிக்க வேண்டும் என இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக யோசனை முன்வைத்துள்ளார்.

கொல்கத்தாவைத் தளமாக கொண்டு இயங்கும் திலோத்தமா அமையத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சீனாவின் தலையீடு’ என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பிரித்தானியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் அம்ப் ருச்சி கானஷ்யம் வழிநடத்திய இந்த மெய்நிகர் கருத்தரங்கில் கலாநிதி தயான் ஜயதிலக, கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திலினி பத்திரண, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய கற்கைகள் நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் சுலனி அத்தநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, ஆரம்ப உரையாற்றிய கலாநிதி தயான் ஜயத்திலக்க மேற்கண்டவாறு யோசனையொன்றை முன்வைத்தார். அவருடைய நீண்ட உரையின் முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையானது தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துமான இடத்தில் அமைந்திருக்கும் தீவாகும்.

இதனால் இலங்கையின் மீது பல நாடுகளுக்கு கரிசனைகள் அதிகமாகவே உள்ளன. அந்த வகையில், இலங்கை இதுவரை காலமும் அணிசேராக் கொள்கையை பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை சுமூகமாகவே கொண்டு வந்திருந்தது.

ஆனால், இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் வெளிவிவகாரக் கொள்கையிலிருந்து விலத்தியிருக்கின்றார்கள். இதுபற்றிய பல கரிசணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து விட்டதாக பகிரங்கமான விமர்சனங்கள் உள்ளன.

சீனா தனது கனவுத்திட்டமான பட்டி மற்றும் பாதை திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக்கொண்டு தெற்காசியாவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் கடன்தொகைகளையும் பாரிய அபிவிருத்தித்திடங்களிலும் முதலீடுகளைச் செய்து வருகின்றது.

அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தினைக் குறிப்பிட முடியும்.

இந்தத் திட்டம் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகின்றபோதும் இதனால் சீனாவின் தலையீடுகள் இலங்கையில் அதிகரித்து விடும் என்ற கரிசனை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளுக்கு அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு அதன் தேசியபாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாக உள்ளது. வடஇந்தியாவின் லடாக் பகுதியில் சீனாவுடனான எல்லை விவகாரங்கள் காணப்பட்டு வரும் நிலையில் தென் இந்தியாவில் அவ்விதமான நிலைமைகளை தவிர்ப்பதற்கு இந்தியா அதிகளவில் ஈடுபாட்டினைக் கொண்டிருக்கின்றது.

ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை விடயத்தில் உயர்மட்ட நகர்வுகளையே மேற்கொண்டு வருகின்றது. இறுதியாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்திருந்தார். அதற்கு முன்னதாக கம்னியூஸ்ட் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான பிரதிநிதி வருகை தந்திருந்தார்.

இவ்விதமான விஜயங்கள் இலங்கையுடன் உயர்மட்ட அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு சீனாவுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதனைவிடவும், சீனாவின் கம்னியூஸ்ட் கட்சியானது இலங்கையின் ஆளும் கட்சியாக இருக்கும் பொதுஜனபெரமுனவுடன் இருதரப்பு தொடர்புகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது

இவ்விதமான சீனாவின் உயர்மட்ட அணுகுமுறைகளுக்கு நிகராக இந்தியாவின் அணுகுமுறைகள் அண்மைய காலங்களில் காணப்படவில்லை. 80களில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகள் முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. விசேட கவனம் கொள்ளப்பட்டு விசேட பிரதிநிதிகள் அமர்த்தப்பட்டு இலங்கை விடயங்கள் கையாளப்பட்டன.

ஆனால் பின்னரான நிலைமையில் அவ்விதமான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தியா வெளிவிவகார கலாநிதி.ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் கூட சீனாவின் உயர்மட்டக்குழுவின் விஜயத்துடன் ஒப்பிடும்போது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்று கணிக்க முடியாது.

தற்போதைய மத்திய அரசாங்கத்தில் வெளிவிவகர அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இலங்கை விடயத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க, இலங்கை விடயங்களை கையாள்வதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாகும். இத்தகைய நியமனம் ஒன்றின் ஊடாக இலங்கை விடயங்களை கையாள்வதே இந்தியாவுக்கு தற்போதுள்ள இராஜதந்திர மூலோபாயத் தெரிவாக இருக்கும் என்பது எனது யோசனையாகவுள்ளது என்றார்.

Posted in Uncategorized

பசிலுக்காக பதவி விலகும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கு!

நாட்டிற்கு திரும்பியுள்ள சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அரசாங்க உள்வட்டார தகவளின்படி, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலின் உறுப்பினரான ஜனாதிபதி சட்த்தரனி ஜயந்த வீரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதால் அந்த இடத்திற்கு பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

ராஜினாமா செய்யும் ஜயந்த வீரசிங்க அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க கொழும்பு ராஜகீய கல்லூரியின் பழைய மாணவராவார்.அவர் பின்னர் கொழும்பு சட்ட பீடத்தில் நுழைந்து 1976 இல் சட்டத்தரனியாக பட்டம் பெற்றார்.

அவர் 2010 இல் ஜனாதிபதி சட்டத்தரனியாக பதவியேற்றார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ராஜபக்சர்களின் சட்ட பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகவும் ஜனாதிபதி சட்டத்தரனி ஜயந்த வீரசிங்க பணியாற்றியுள்ளார்.

இதற்கிடையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினறும் தொழிலதிபருமான மொஹமட் பலீல் மர்ஜானும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஆர்வம் காட்டியதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

தொழிலதிபரான மொஹமட் பலீல் மர்ஜான் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக பலவெகு ஜன ஊடகங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ஷ சார்பு அரசாங்க ஆர்வலர் ‘தி லீடர்’ வலைத்தளத்திடம், நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்றத் தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கக்கூடும் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பசிலின் அரசியல் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து வருகிறது. பசில் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை எப்போதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் என்று அர்த்தமில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான நேரம் உள்ளது. அந்த திட்டவட்டமான நேரம் எதிர்காலத்தில் வரும்.

“இந்த நாட்டின் முற்போக்கான மக்கள் அவரை நாடாளுமன்றத்திற்கு வரச் சொல்லும் நாள் விரைவில் வரும். எண்ணெய் விலைகள் உயரும் நேரத்தில் அரசாங்கத்தில் ஒரு முக்கியமான அமைச்சு பதவியை வகிக்காததன் விளைவுகளை ஒரு நாடு அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கும்பல்களின் நடனமாடாத ஒரு கட்சியாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவை நிறுவுவதற்கு அவரது தொலைநோக்கு பார்வையும் பொருளாதாரத்தைப் பற்றிய அறிவுமே முக்கிய காரணமாகும்.

அது மட்டுமல்லாமல், ராஜபக்ஷர்களுக்காக இந்த நாட்டின் முற்போக்கான மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பராமரிக்கக்கூடிய சுறுசுறுப்பான ராஜபக்சர்களில் அவர் முன்னணியில் உள்ளார்.

அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற தேவையான சக்திவாய்ந்த அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்வார். ஆனால் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிகழும்.

பஷில் தேசியப்பட்டியல் எம்.பியாவதில் சிக்கல்..?

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக தலைவரும், தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசம் செய்யவுள்ளதாகவும், அதற்குரிய இறுதிக்கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஆளும் தரப்பின் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பஷில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற வேண்டுமாயின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்க கிடைத்திருந்த 17தேசியப்பட்டியல் ஆசனங்களில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் பதவி விலகுவதன் ஊடாக அப்பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்டபோது, தேசியப்பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப்பட்டியில் பெயரில்லாத ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 99ஆவது சரத்தின் ஏ பிரிவில் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பற்றிய ஏற்பாடு காணப்படுகின்றது.

அதனடிப்படையில் தேசிப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்களின் பெயர்கள் வேட்புமனுத்தாக்கலின்போது பெயரிட்டிருக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையில் நாடாளவிய ரீதியில் உள்ள 22தேர்தல் மாவட்டங்களில் ஏதாவதொன்றில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் காணப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு பட்டியிலிலும் பெயர் இல்லாத ஒருவர் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்பட முடியாது. அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

இதனைவிடவும், இறுதியாக பாராளுன்ற தேர்தல் நடைபெற்ற போது நீங்கள் குறிப்பிட்ட நபர்(பஷில் ராஜபக்ஷ) இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அப்போதிருந்த சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அவரால் தேசியப்பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளவும் முடியாது.

ஆகவே இங்கு நீங்கள் குறிப்பிடும் (பஷில்) நபராக இருக்கலாம் வேறு யாராவதாகவும் இருக்கலாம் மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான முறைமையையே கண்டறிய வேண்டும் என்றார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்வதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை. அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றச் சட்டம் இதுபற்றிய ஏற்பாடுகள் தெளிவாக உள்ளன. இரண்டையும் தனித்தனியான விடயங்களாக பார்க்காது, ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப்பார்க்கின்றபோது இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

அதனடிப்படையில், தேசியப்பட்டியலில் பெயரில்லாத ஒருவர் முதலாவது சுற்றில் அதாவது முதலாவது தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட முடியாது. விரிவாக கூறுவதாயின், குறித்தவொரு கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு அமைவாக முதலில் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். அதன் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவர் இராஜினாமாச் செய்வதன் மூலமாக புதிய பிரதிநிதியாக பட்டியலில் இல்லாத ஒருவர் கூட முன்மொழியப்படலாம். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஒருவர் (அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) கடந்த ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகா தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்வாங்கப்பட்டார். அதன்போது தற்போதுள்ள சட்டங்கள் தான் அமுலில் இருந்தன. ஆனால் அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை,கட்சியொன்றின் சார்பில் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு புதிதாக பட்டியலில் இல்லாத ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் ஏற்கனவே பட்டியலிடப்பட்டவர்கள் அனைவரிடத்திலும் இராஜினாமாக் கடிதங்களைப் பெற்று பின்னர் மத்தியகுழுவில் குறித்த நபரை ஒருவர் முன்மொழிந்து பிறிதொருவர் வழிமொழிந்து அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பும் மரபு ரீதியான முறையொன்றும் பின்பற்றப்படுவதாக தமிழ்க் கட்சியொன்றின் பெயர் குறிப்பிட விரும்பான முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது தேசியப்பட்டியல் உறுப்புரிமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனங்கள் நீடித்துக்கொண்டிருக்கையில் தற்போது அற்கான உறுப்பினர்களை நியமிக்கும் சட்ட ஏற்பாடுகளிலும் முரண்பாடுகள் இருக்கின்றமை வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.