தூத்துக்குடியில் இலங்கை அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனிமொழி

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு விஜயம் செய்த ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் க.கனிமொழி, அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் – மாப்பிள்ளையூரணி பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமில் சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

குறித்த பகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி செயலாளரும் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவருமான க.கனிமொழி நேற்று முன்தினம் (23) விஜயம் செய்தார்.

இதன்போது, அங்குள்ள இலங்கைத் தமிழர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டு, அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், கனிமொழியின் இந்த விஜயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

துமிந்தவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது – அமெரிக்க துதுவர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிலிட்ஸ் கண்டனம் வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பீடுக்கு உட்படுத்துவதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், “இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Gallery

Posted in Uncategorized

ஜப்பான், அமெரிக்க கடற்படையினர் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சி!

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

இந்த கூட்டு கடற்பயிற்சி, திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலையை அண்மித்த கிழக்குக் கடற்பரப்பில் ஜூன் 30 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இந்த பலதரப்பு கடற்பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

கடற்படையின் பிரதித் தலைவர் மற்றும் கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் Y.N. ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பமானது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடல்சார் ஆலோசகர், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சமுத்திரத் தலையீடு மற்றும் உள்ளக நடவடிக்கைகளை மேம்படுத்தல், பொதுவான சமுத்திர சவால்களில் இணைதல், சமுத்திர நடவடிக்கை தொடர்பில் முழுமையான புரிதலைப் பெற்றுக்கொள்ளல், சமுத்திரப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான நெருக்கமான இயலுமையை மேம்படுத்தல், சர்வதேச சட்டம், தரத்திற்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியன தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே, சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் தரப்புகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தல், இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பான் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகிய தரப்புகளிடையேயான தொடர்பை மேம்படுத்தல் ஆகியனவும், CARAT–21 என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்பயிற்சி மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் துறைமுகம் தொடர்பான கட்டம் இன்றும் நாளையும் திருகோணமலை துறைமுகத்தில் நடத்தப்படுகின்றது.

அத்துடன், கடல்சார் கட்டம் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருகோணமலையை அண்மித்த கிழக்கு கடற்பரப்பில் நடத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர, இந்தப் பயிற்சியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணத் திட்டமிடல், சமுத்திரம் தொடர்பான புரிதல், சமுத்திர விமான நடவடிக்கை, கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்களைப் பரிமாற்றுதல், எதிரிக் கப்பல்களைப் பின்தொடர்தல், கப்பலுக்குள் பிரவேசித்தல், சோதனை செய்தல் மற்றும் விடுவித்தல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

COVID-19 தொற்றைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்படையின் சயூர மற்றும் கஜபாஹூ கப்பல்களும் ஆழமான கடற்பகுதியைக் கண்காணிக்கும் கப்பல், இலங்கை விமானப் படையின் Bell 212, Bell 412 ரக ஹெலிகொப்டர்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியனவும் இந்தப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், ஐக்கிய அமெரிக்க கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Littoral Combat ரக USS Charleston கப்பல், Boeing P-8 Poseidon ரக சமுத்திரப் பாதுகாப்பு விமானம், MH-60S ரக ஹெலிகொப்டர் ஆகியனவும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Destroyer ரக JDS Yugiri கப்பல் மற்றும் MH – 60R ரக ஹெலிகொப்டர் ஆகியன ஈடுபடுத்தப்படவுள்ளன.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு மேலும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறிகின்றேன்

மேலும் அனைத்து சிறைகளிலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் விரைவாக விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த 16 அரசியல் கைதிகள் கைதிகளின் விடுதலை என்பது அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் கண்ணீருக்கும் காத்திருப்புகளுக்கும் கிடைத்த பரிசு என்றே நான் கருதுகின்றேன்.

இதே நேரம் விடுதலை செய்யப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது.

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Posted in Uncategorized

விடுதலையான 16 பேர் தொடர்பிலான விபரங்கள் வெளியாகின!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்ட 16 நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

விடுதலையானவர்கள் அனைவரும் நீதிமன்றங்கள் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்துவந்தவர்கள் என்றும் விரைவில் அவர்களுக்கான தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலையான 16 பேரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என்று சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவரும் நிலையில் குறித்த தகவலை மறுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகள்,

விடுதலையானவர்களில் மிக அதிகமானவர்கள் போராளிகள் அல்ல என்றும் போராட்டத்திற்காக உதவிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்கள் ஊடாக தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனை அனுபவித்து தண்டனைக் காலம் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர்கள் விடுதலையாகியிருக்கின்றனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே இன்று விடுதலையானவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 09 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பேரும் மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த,

நடராஜா சரவணபவன்,

புருஷோத்தமன் அரவிந்தன்,

இராசபல்லவன் தவரூபன்,

இராசதுரை ஜெகன்,

நல்லான் சுவலிங்கம்,

சூரியமூர்த்தி ஜெவோகன்,

சிவப்பிரகாசன் சிவசீலன்,

மயில்வாகனம் மதன்,

சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரும்,

மன்னார் மாவட்டத்தில்,

சிமோன் சந்தியாகு,

ராகவன் சுரேஷ்,

சிறில் ராசமணி,

சாந்தன் ஸ்ராலின் ரமேஸ்,

கபிறில் எட்வேட் யூலியன் ஆகியோருடன்,

மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த

விசுவநாதன் ரமேஸ் ஆகியோரே விடுதலையாகியுள்ளனர்.

விடுதலையானவர்களில் 15 பேர் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் ஒருவர் யாழ். சிறைச்சாலையிலிருந்தும் விடுதலையாகியிருக்கின்றனர்.

யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையானவர் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்று தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

மரணதண்டனைக் கைதி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இதனை சிறைச்சாலை பேச்சாளர் ஊடகங்களிடம் உறுதி செய்தார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை – முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது.

எனினும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு துமிந்தா சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.

இந்நிலையிலேயே கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்றால் தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

நிதியைக் காட்டி அதிகாரங்களைப் பறிக்க முடியாது! – பவித்ராவுக்கு ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் பதில்

“மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முயல்கின்றார்.”

-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பாராளுமன்ற உரையிலே மாகாண சபை வைத்தியசாலைகளைக் கையகப்படுத்த மாட்டோம்; ஆனால் நிதியும் ஒதுக்கமாட்டோம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க முயல்கின்றார். இது ஒரு அரசியல் குற்றம் என்பதை அவர் உணரத் தவறி இருக்கின்றார்.

அமைச்சரின் கூற்று தற்போது அரசின் சர்வாதிகாரப் போக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அரசியல் சாசனத்தின் ஊடாகவும் மாகாண சபை சட்டத்தின் மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வைத்தியசாலைகள், மத்திய அரசால் கையகப்படுத்துவது அரசியல் யாப்பை மீறும் செயலாகும். மாகாண சபையின் ஒப்புதலுடன்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும்.

மாறாக மாகாண சபைகள் இயங்கு நிலையில் இல்லாத சூழலில் கையகப்படுத்துவது தவறானதாகும். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மக்களின் உரிமை என்பதையும், மத்திய அரசின் திறைசேரி நிதியும் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்டதால் மக்களுக்கே உரித்தானது என்பதையும் அமைச்சர் மறந்துவிட்டார். நிதி ஒதுக்கீடு என்பதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அடிப்படையில்தான் என்பதையும் மாகாண சபைக்குரிய வைத்தியசாலைகளால் பயனடைவது திறைசேரிக்கு வரி செலுத்தும் மக்களே என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகவே, நிதி ஒதுக்கீடு என்பது பயனாளிகளின் நலன் கருதி இருக்க வேண்டுமே தவிர அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிரட்டுகின்ற அல்லது பணயம் வைக்க கையாளுவது அரசியல் குற்றம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாகாண சபையின் அதிகாரத்துக்குள் வைத்தியசாலைகள் இயங்கும்போது கூட மத்திய அரசால் நிதி ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்த முடியும். அப்படி பல வைத்தியசாலைகள் சிறந்த முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி அடைந்த நிலையில் பல மாகாணங்களில் காணப்படுவதையும் அமைச்சர் கருத்தில்கொள்ள வேண்டும்.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களின் பிரகாரம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவைகளின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்குவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீறும் செயலாக இதை நோக்குகின்றோம்.

மாகாண சபைகளின் நிர்வாகத்தைக் குழப்பும் முகமாக அல்லது மிரட்டு முகமாக அமைச்சர் தெரிவித்த கூற்றை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதி ஐ.நா. மனித உரிமைப் சபையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்போம்” – என்றுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் கைதிகளை விடுவிக்க முயற்சி காலம் கடந்த ஞானம்- ரெலோ செயலாளர் கருணாகரம் ஜனா

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக் ஷ கூறிய விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது.

ஆனால் இந்த விடயத்தை 2009 ஆம் ஆண்டில் செய்திருக்க வேண்டும். அப்போது 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வு வழங்கி விடுவித்ததாகவும், மூவாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கியதாகவும் கூறினீர்கள், அப்படியென்றால் சில நூறு பேரை ஏன் 30-40 ஆண்டுகளாக தடுத்து வைத்தீர்கள்.

இது குறித்து நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும். இன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போகின்றமை, அமெரிக்க காங்கிரஸில் அறிக்கை என்பவற்றை வைத்துக்கொண்டு சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் இதனை செய்ய முயற்சிக்கின்றீர்கள். எவ்வாறு இருப்பினும் காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது. எனவே அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும்.

அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த நாட்டிற்கு சுபீட்சம் ஏற்படும். 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தினால் நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

இறுதியாக 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்பில் தானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய நாடுகள் இன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற காரணத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

அரசாங்கம் இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்கின்றதா – ரணில்

அரசாங்கம் இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்கின்றதா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் -23- நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஆற்றிய கன்னி உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு பாரதூரமான ஓர் நிலையில் காணப்படுவதாகவும் வெறும் புள்ளி விபரங்களை நாடாளுமன்றில் ஒப்புவிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட விரும்பாவிட்டால் மாற்று வழி என்ன என்பதனை நாடாளுமன்றில் தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பிரதான மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அதிகாரம், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரம் மற்றும் இராணுவ அதிகாரம் என்பனவே அவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டில் இராணுவ அதிகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் ஒழிப்பு குறித்த தேசிய செயலணி நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நிபுணர்களைக் கொண்டே கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் மட்டுமே இராணுவத் தளபதியிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டாளர்களுடனான கூட்டத்திலும் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொள்வதாகவும் அவ்வாறான கூட்டங்களில் நிதி அமைச்சர் ராஜாங்க அமைச்சர் பங்கேற்பது நியாயம் என்ற போதிலும் இராணுவத் தளபதிக்கு அங்கு வேலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கூட்டங்களில் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொண்டால் வரும் முதலீட்டாளர்களும் ஓடி விடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்த்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சரவை, நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கை அமைச்சரவையிடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க 1977ம் ஆண்டு முதல் இதுவரையில் தொடர்ச்சியாக 44 ஆண்டுகள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனுக்கு ஜனாதிபதி கடிதம்; சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால், இடையூறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியூஸ்ஃபெஸ்டுக்குத் தெரிவித்தார்.

வெகு விரைவில் சந்திப்பிற்கான திகதியை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் விடயங்கள் இடம்பெறும் போது, தமது கட்சி அது குறித்து முடிவெடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

அமைச்சர் உதய கம்பன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தராமையினால், உத்தியோகபூர்வமாக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized