ரணில் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகளை வன்மையாக கண்டிப்பதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவதென்ற பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது இத்தகைய போலியான ஊடக பிரசாரத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், சம்பிக ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித்த சேனாரத்ன,அசோக அபேசிங்க ஆகியோர் ஆமோதித்ததோடு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை, அதன் ஆதரவு கட்சிகளுடன் முரண்பாடு இருப்பதுபோன்ற போலியான செய்திகளை பரப்புவதன் பின்னால் மக்களால் நிராகரிக்கப்படும் அரசாங்கத்தையும், நிராகரிக்கப்படும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் டீல் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். குறிப்பாக கடந்த அரசாங்க காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் டீல் வைத்துக்கொண்டிருந்தவர்களே இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்படுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை பிளவுபடுத்தும் திட்டத்திலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அழுத்தம் கொடுத்திருக்கின்றார். ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை சுகம் விசாரிக்க சென்றிருந்த வேளையே மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்ற விடயங்களும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துக்கொண்டு, அவர் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்கும் நோக்கத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக உழைப்பதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமானதாக நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அதிகபட்ச நிவாரணங்கள், சலுகைகளுடன் துறைமுக நகரில் முதலீடு செய்யுங்கள்: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சர்வதேச சமூகத்திடம் இன்று முன்வைத்தார்.

2021 இலங்கை முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரையாற்றினார். இந்த மாநாட்டில் 65 நாடுகள் இணையவழியில் இணைந்துகொண்டன.

இந்த மாநாட்டில், 2030 ஆம் ஆண்டளவில் தனிநபர் நிகர உற்பத்தியை 8000 டொலர்கள் வரை அதிகரிப்பதற்குத் தேவையான துரித பொருளாதார மாற்றத்திற்கான திட்டம் உள்ளதாகவும் அதற்கான நிலையான பொருளாதார கொள்கையைப் பேண அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரத்தை உலகின் துரித அபிவிருத்தி பிராந்தியமாகவும் சேவை வழங்கும் மத்திய நிலையமாகவும் மாற்றுவதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி, முதலீடுகளுக்கு இடையூறாகவுள்ள கொள்கைகளை சீரமைத்து, வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் போன்றே சுகாதாரத்திற்கு ஏற்புடைய விவசாய முறைமையில் முதலீடு செய்யவும் ஏனைய நாடுகளுக்கு மாநாட்டில் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

தமது அரசாங்கம் மசகு எண்ணெய் பயன்பாட்டை குறைத்து மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை ஊக்குவிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 2030 ஆம் ஆண்டளவில் தேசிய எரிசக்தி தேவைப்பாட்டின் 70 வீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக ஈடு செய்ய முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன் பொருட்டு, பாரியளவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை துறைகளில் முதலீடு செய்ய முன்வருமாறும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உற்பத்தி கைத்தொழில் துறையின் முதலீடுகளையும் நாம் ஊக்குவிக்கின்றோம். குறிப்பாக இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் தயாரிப்புத்துறை போன்றவற்றை ஊக்குவிக்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் தயாரிப்புகளை சர்வதேச சந்தைக்கு அனுப்பி வெற்றிகொள்ள எதிர்பார்க்கின்றோம். பூகோள அமைப்பு ரீதியாக இலங்கை மில்லியன் கணக்கான டெராபைட்ஸ் தரவுகளை பிறப்பிக்கும் கடல் கேபிள் கட்டமைப்பு அருகே அமைந்துள்ள நாடாகும். ஆகவே, பிராந்தியத்தின் தவல் தேவைகளை நிறைவேற்றும் தரவு மத்திய நிலையத்தின் எல்லையாக அமைகிறது. அந்த சந்தர்ப்பத்தை மேலும் விரிவுபடுத்த தனிப்பட்ட தகவல் காப்பு குறித்த புதிய சட்டங்கள் வழிவகுத்துள்ளன. இந்த விதிமுறைகள் இலங்கையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது

என ஜனாதிபதி மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த – இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று(07) சந்தித்து பேசியுள்ளார்.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து, ஒரு மாத இடைவெளியில் இருவரும் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்து கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் பிரதேச சபை உப தவிசாளர் ரெலோ ஜெனமேஜயந் உள்ளிட்ட பத்து பேர் கைது

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளருமான ஜெனமேஜயந் உட்பட 10 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுக்குடியிப்பு ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை இன்றைய தினம் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலை வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதியின் கருத்து

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (07) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

1,700 ஐ கடந்த கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் (06) நாட்டில் 2,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 205,333 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,172 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 167,304 ஆக அதிகரித்துள்ளது.

பாராளுமன்ற சபை அமர்வு தொடர்பான அறிவித்தல்

பாராளுமன்ற அமர்வை நாளையதினம் (08) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னனுரிமை அடிப்படையில் ஏற்றப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் பிரிந்துரைக்கமைய 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாயமாகும். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தொகை 6 இலச்சம் பேரில் 30 வயதுக்கு மேற்பட்டோர் 3 இலச்சத்து 11 ஆயிரம் பேர்.

எனவே, 3 இலச்சத்து 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றவேண்டியுள்ளது இருந்தபோதும் நாளை 25 ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.

இதில் அபாய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிரிகள் பிரிவு காரியாலயங்களில் ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலை திறப்புக்கு ரெலோ வினோ எம்பி எதிர்ப்பு! ஜனாதிபதிக்கு கடிதம்

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு இன்று மாலை அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஹைர்டறாமணி ஆடைத் தொழிற்சாலையானது இன்று வரை இலங்கையின் கோவிட் -19 தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதம் அவ் ஆடைத்தொழிற் சாலையில் பணிபுரியும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அதில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியிருந்தமை அறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதனால் இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் ஆடைத்தொழிற்சாலையும் உடன் மூடப்பட்டது.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறைகள் கடந்த 31ம் திகதியுடன் நிறைவடைந்தன. ஆனால் இன்று வரை ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசம் உட்பட மாவட்டத்தின் 9 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவில்லை. தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள், பொதுப்போக்குவரத்து உட்பட்ட பயண நடவடிக்கைகள், ஒன்றுகூடல்கள், நடமாட்டங்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கொவிட்-19 சட்ட நடைமுறையாகும்.

மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன் நீதிமன்றிலும் அரசாங்கத்தினால் வழக்கும் தாக்கல் செய்ய முடியும். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பது கிராமசேவையாளர் பிரிவுகள் இன்னமும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். தனிமைப்படுத்தல் நீக்கப்படாமையினால் அது நீடிக்கப்பட்டதாகவே அர்த்தமாகும்.

இருந்தபோதும் நாளைய தினம் குறித்த ஆடைத்தொழிற்சாலை திறக்கப்பட இருப்பதாகவும் பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வர வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்ட கிராமத்தினுள் குறித்த தொழிற்சாலை இயங்க அனுமதிப்பதானது சட்டத்துக்குப் புறம்பானதோடு சட்ட மீறலாகும்.

அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தங்களின் கொள்கைக்கும் நேர் மாறான உதாரணமாகும். முல்லைத்தீவு மாவட்டத்தின் தொற்று அதிகரிப்புக்கு இவ் ஆடைத் தொழிற்சாலையும் முக்கிய காரணமாகும்.

இன்றுவரை 600க்கு மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தலுடன், பயணத்தடையினாலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் உங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பிரதேசங்களின் தனிமைப்படுத்தலை நீக்கும் வரை அவ் ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என தங்களை அவசரமாகவும், வினயமாகவும் கேட்டுக் கொண்கின்றேன் என குறித்த கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச?

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார். அதேபோல் நாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் உட்பட ஜனாதிபதியின் நேரடியான கட்டுப்பாட்டில் செயற்படுத்தப்படும் பல முக்கிய வேலைத்திட்டங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் உட்பட மக்களுடன் சம்பந்தப்பட்ட பல பொறுப்புகள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பல மாவட்டங்களில் இணைப்புக்குழுக் கூட்டங்களை நாமல் ராஜபக்சவே கண்காணித்து வருகிறார். இவற்றின் ஊடாக அவர் வேலை செய்ய முடியும் என்ற திறமையை வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக கடந்த வார இறுதியில் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் தொழிற்நுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவியானது. கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கக் கூடிய அமைச்சாக அமைந்துள்ளது. இதனை தவிர நாமல் ராஜபக்ச சீனாவின் ஆட்சியாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர் என்பது இரகசியமான விடயமல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு் இடையிலான நேரடியான அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் மாநாடு ஒன்று அண்மையில் இணையத்தளம் வழியாக நடைபெற்றதுடன் அதற்கு நாமல் ராஜபக்சவே தலைமை தாங்கினார்.

மறுபுறம் நாமல் ராஜபக்சவின் இந்த வேகமான அரசியல் பயணம் தற்செயலாக நடந்தது அல்ல. ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக, அந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தை சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் நாமல் ராஜபக்ச குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது. இதனடிப்படையில் அரசியல் துறையினல் தற்போது பேசப்பட்டு வரும் இந்த வதந்தி உண்மையாக மாறுவதற்காக சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதுடன் சாதகமான அடையாளங்களும் காணப்படுகின்றன.