பயணத் தடை நீக்கப்படுமா! – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை தளர்த்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2500க்கு மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். கோவிட் மரணங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டைத் திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில்முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவேதான் 7ம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வார காலம் நீடிக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல. நாட்டிலுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய,கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே 14 நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும்.

21 நாட்களுக்குப் பின்னரும் பயணத்தடை நீடிக்குமா? தளருமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன் அறிவிப்போம். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும்.ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான அஜித்ரோஹண விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

பொருட்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி உப வீதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலர் உணவுப்பொருட்கள் , துரித உணவுப் பொருட்கள் , மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது , விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பிரதான வீதிகளை மாத்திரமே பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பிரதான வீதிகளில் இன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பொருட்களை கொள்வளவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் இவ்வாறு விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பிரதான வீதிகளில் மட்டுமன்றி ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பகுதியில் மாத்திரம் பொருள் விநியோக நடவடிக்கை இடம்பெறுவதால் , அந்த பகுதிகளில் மக்கள் ஒன்றுக்கூடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும். இதேவேளை இவ்வாறு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசுக்கு வந்தவினை: சம்பந்தன், விக்கி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் இதுகால வரையிலும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றாகவே அமெரிக்க காங்கிரஸால் இலங்கை குறித்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் தெரிவித்துள்ளனர்.

2009 மே 18, அன்று இலங்கையில் போர் முடிவடைந்து 12 ஆண்டுகளை அங்கீகரித்து, இழந்த உயிர்களை கௌரவித்தல் மற்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, இலங்கையில் நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதிப்படுத்துவதற்கான நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழப்பீடு மற்றும் மறுசீரமைப்புக்கான ஆதரவை வெளிப்படுத்துதல் எனும் தலைப்பில் , ஜனநாயக கட்சின் வட கரோலினா மாநில காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரொஸினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு, பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான, பில் ஜோன்சன், டானி டேவிஸ், பிரட் ஷேர்மன், கதி மன்னிங், ஆகியோரும் இணை அனுசரணை வழங்கியிருக்கின்றனர். இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதன் முன்நகர்த்தல் செயற்பாடுகளை உடனடியாக இடை நிறுத்துமாறும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக கோரிக்கைகளை முன்வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலைமை தொடர்பில் தனித்தனியாக சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனிடத்தில் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் வருமாறு,

சம்பந்தன் கூறுகையில், இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக போரின் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட இனநல்லிக்கணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் என்று பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் நிரந்தமான சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்கான விருப்பத்தினை வெளியிட்டிருந்தார். ஆகவே ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருமே உள்நாட்டிலும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் அதனை நடைமுறையில் முன்னெடுக்கவில்லை. குறிப்பாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனைகளை கொண்டிருக்கவில்லை. அதேநேரம், ஜனநாயகத்திற்கு முரணான கருமங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள். இதனால் நாட்டின் ஸ்திரமற்ற நிலைமை நீடிக்கின்றது.

இவ்வாறான நிலையில் தான் அமெரிக்கா காங்கிஸால் இலங்கை பற்றிய முன் கூட்டத் தீர்மானம் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தகட்டமாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றபோது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிருந்து விலகி நிற்க முடியாத நிலைமைகள் தீவிரமடையும்.

அரசாங்கம் இதுகாலவரையிலும் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிட்டு உடனடியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல் இதுபோன்ற பல விடயங்களுக்கு சர்வதேச ரீதியாக முகங்கொடுக்க நேரிடும். அடுத்துவரும்காலங்களில் இவ்விதமான பல காரியங்கள் நிகழலாம் என்றார்.

விக்னேஸ்வரன் கூறுகையில், உறுப்பினர் ரொஸ் தம் சார்பிலும் மற்றைய உறுப்பினர் நால்வர் சார்பிலும் இந்தக் முன்கூட்டத் தீர்மானம் முன்வைத்து அது வெளிநாட்டலுவல் குழுவிற்குத் தற்போது பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நாம் நடத்திய “பறிபோகும் எமது வடகிழக்குக் காணிகள்” பற்றிய மெய்நிகர்கூட்டம் கூட தீர்மானத்தினை முன்னிலைப்படுத்த உதவியிருக்கும் என்று நம்புகின்றேன்.

ஏனென்றால் ரொஸ் குறித்த மெய்நிகர் கூட்டத்தை மிக உன்னிப்பாகச் செவிமடுத்தார் என்று அறிகின்றேன். இந்தத் தீர்மான வரைவு நடந்ததையே வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அரசாங்கம் செய்வதாக வாக்களித்துப் பின்னர் நடைமுறைப்படுத்தாதவற்றையே குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் சபையின் 2017மே, ஆண்டின் 30/1 தீர்மானம் முன்னர் ஸ்ரீலங்கா செய்வதாக வாக்களித்தவற்றையே மேலும் உறுதிப்படுத்தியது. அவையாவன –

1. பொதுநலவாய நாடுகளின் மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் மேலும் விசாரணையாளர்களைக் கொண்டு பொறுப்புக் கூறல் சம்பந்தமான ஒரு பொறிமுறையாக விசேட நீதிமன்றமொன்றை உருவாக்குவது.

2. உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை உருவாக்குவது.

3. காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஒரு அலுவலகத்தை உருவாக்கல்.

4. மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதிக்கப்பட்டோரின் நிவாரணம் பற்றிய அலுவலகத்தை உருவாக்கலும் நிறுவன ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதும்.

5. முரண்பட்டிருக்கும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்தல்

ஆகவே இவை பற்றி அப்போதிருந்த அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பின்னர் புதிய அரசாங்கம் வந்த பின் குறித்த 30/1 தீர்மானம் இலங்கையால் கைவாங்கப்பட்டது.

இதுபற்றிக் கூறி புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் குறித்த தீர்மானத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

1. போர்க்குற்றம் இழைத்தவர்கள் அரசாங்கத்தால் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை.

2. நீதிமன்றங்களால் போர்க்குற்றம் புரிந்தவர் என்று தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பு அளித்தமை.

3. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதியின் கைகளுக்கு அதிகாரம் முற்று முழுதாகச் சென்றடைய வழிவகுத்துள்ளமை.

4. போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணை செய்யாது தடுத்து வைத்துள்ளமை.

5. பெரும்பான்மையினரின் அதிகாரங்களைப் பெருக்கி வைத்து தனித்துவமாக அவர்கள் சார்பில் அரசாங்கம் நடத்தி வருவது.

6. பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் சதா கண்காணித்து வர நடவடிக்கைகள் எடுத்துள்ளமை.

7. படையினரைக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரானவர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும்.

இலங்கை அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறி செய்யாது விட்டமையால்த் தான் இந்தக் கூட்டத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்னர் இதுகாறும் கொடுத்து வந்துள்ள உறுதி மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியே இந்தக் கூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதால் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படலாம், சமாதானம் நிலைநாட்டப்படலாம் என்றும் கருதப்பட்டுள்ளது.

தீர்மானத்தில், போர் முடிந்து 12 வருடங்கள் ஆகிவிட்டுள்ளமை பற்றியும், போரில் இறந்தவர்களை நினைவுறுத்தி வாழும் மற்றவர்களின் மீள் நிர்மாண முயற்சிகளுக்கு உதவ முன்வந்துள்ளமை பற்றியும், 2021ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் 46/1 ஆம் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக பொறுப்புக் கூறலை வலியுறுத்தியே மேற்படி கூட்டத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

விசாரணைகள் நடைபெறாத வரையில் தம்மைப் பற்றி தமக்கு எதிரானவர்கள் அநியாயமாகப் பழி சுமத்துகின்றார்கள் என்று தொடர்ந்து கூறி வரலாம். ஆனால் விசாரணைகள் நடந்தால் உண்மை புலப்பட்டு விடும். அதனால்த்தான் சாட்சிகள் இன்றி போர் நடத்திய அரசாங்கம் விசாரணைகளுக்கும் சர்வதேச மக்களின் கண்டனங்களுக்கும் அஞ்சுகின்றது.

உண்மையில் இலங்கை போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மனிதாபிமான முறையில் தனது மக்களை, முக்கியமாகத் தமிழ் மக்களை, நடத்தி வந்திருந்தால் அது ஏன் இவ்வாறான கூட்டத் தீர்மானங்களுக்குப் பயப்பட வேண்டும்? எதற்காக சீனா போன்ற நாடுகளிடம் மன்றாடித் தஞ்சம் புக வேண்டும். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கின்றது.

நான் குறித்த கூட்டத் தீர்மானத்தை வரவேற்கின்றேன். காலக்கிரமத்தில் இலங்கை சர்வதேச குற்றவியல் மன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் வாக்கெடுப்பு விரைவில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். அதற்கு முன்னோடியாகவே மேற்படி கூட்டத் தீர்மானத்தைப் பார்க்கின்றேன் என்றார்.

சிவகுமாரனின் நினைவேந்தலுக்கு பொஸிசார் அனுமதி மறுப்பு -ரெலோ தவிசாளர் தனித்து அஞ்சலி

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளளது.

தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியாவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத்தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தாம் தடையேற்படுத்துவதாகத் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து பொது இடத்தைத் தவிர்த்து பிரத்தியேக இடத்தில் விளக்கேற்றி தவிசாளரால் அஞ்சலிக்கப்பட்டது.

இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் சயனட் அருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய முதல் வித்து பொன் சிவகுமாரனின் 47 ஆவது நினைவு தினம் ஆகும். இத்தினத்தினை உத்தியோகபூர்வமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை வருடாவருடம் அனுஸ்டித்து வருகின்றது.

இந்நிலையில,நேற்றைய தினம் பொன் சிவகுமாரனின் சிலை மற்றும் நினைவுத்தூபி உள்ள பகுதிகள் பிரதேச சபையினால் சிரமதானம் செய்யப்பட்டது. பகிரங்க நினைவேந்தலினை, கோவிட் அபாய பயணத்தடைகள் நீக்கத்தின் பின்னர் பிரிதொரு தினத்தில் உரிய ஏற்பாடுகளுடன் மேற்கொள்ள சபையின் கட்சித்தலைவர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும் சிலைக்கு இன்றைய தவிசாளர் விளக்கேற்றி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில,; தவிசாளர் இன்று காலை உரிய சிலை அமைந்துள்ள இடத்திற்கும் நினைவுத்தூபி அமைந்துள்ள இடப்பகுதியிலும் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தவிசாளர் எவரையும் பொருட்படுத்தாமல் நினைவேந்தலுக்கான பொருட்களை எடுத்துச்சென்ற போது பொலிஸார் தவிசாளரைச் சூழ்ந்து கொண்டனர். விளக்கு ஏற்ற முடியாது என பொலிஸ் தரப்பும் அஞ்சலிப்பதை தடுக்க முடியாது என தவிசாளரும் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள், அரசின் பகிரங்க பயணத்தடை உள்ள நிலையில் நாம் அத்தியாவசிய சேவைகளை சகலரும் அனுமதிக்கப்பட்டுள்ளோம். விளக்குக் ஏற்றுவது அத்தியாவசிய சேவை கிடையாது.

தொற்று தொடர்பான பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் தாங்கள் பொது இடத்தில் செயற்படுவது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டனர். இதற்குத் தவிசாளர் “நினைவேந்தல் பிரச்சினை கிடையாது. ஆனால் பொதுமக்கள் நன்மை கருதிய சுகாதார நோக்குடைய பயணத்தடை மட்டுமே காரணம் ஆயின் நாம் முரண்படவில்லை என்றார்.

பொலிஸாரும் அமோதித்த நிலையில், பயணத்தடை நீக்கத்தின் பின்னர் நாம் பொது இடத்தில் மேற்கொள்வோம்” என தவிசாளர் வெளியேறிச் சென்றார்.

இதன் பின்னர் பொது இடத்தினைத் தவிர்த்து உரும்பிராயில் பிரத்தியேக இடத்தில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. பின்னர் கருத்துரைத்த தவிசாளர், அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்கும் நோக்குடனேயே செயற்படுகின்றது.

அதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் நாட்டில் உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது. அப் பொறுப்புணர்வை நாம் மீறியதாக இருக்கக்கூடாது என்பதற்காக பிரத்தியேக இடத்தில் அஞ்சலித்தேன். தொற்று அபாயநிலை கட்டுப்பாட்டுக்குள் வரும்போது பொதுஇடத்தில் ஏனையோருடன் சிவகுமாரனின் அஞ்சலி நிகழ்வு திட்டமிட்டவாறு இடம்பெறும் என்றார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு மட்டும் நினைவேந்தல் செய்ய அரசாங்கம் தடை! ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

தமிழர்கள் மட்டும் நினைவேந்தல் செய்ய முடியாத அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் மட்டுமே தங்களது இறந்த, படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவேந்துவதற்கும் அவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கும் ஆளும் ஆட்சியாளர்கள் தடை விதித்து அடக்குமுறைகளை இரும்புக் கரம் கொண்டு மேற்கொள்கின்றனர்.

கொரோனாவை தற்போது காரணம் காட்டி நினைவேந்தலை உறவினர்கள் செய்வதற்கு கூட மறுக்கப்படுகிறது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் மட்டுமே இவ்வாறான பாகுபாடுகள் தென்னிலங்கையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் உறவுகளுடன் நடைபெறுகின்றன. அதற்கு எவ்வித தடைகளும் இல்லாது பொலிசார் கை கட்டி பார்த்த வண்ணம் உள்ளனர்.

வடக்கு கிழக்கில் புலனாய்வாளர்கள் மறைமுக அச்சுறுத்தல், பொலிசார் நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் குவிக்கப்பட்டு தடுத்தல் மற்றும் நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை எடுத்தல் போன்ற ஐனநாயக அடக்குமுறைகள் சொல்லில் அடங்காது.

கடந்த காலங்களில் தமிழர் தாயகப்பகுதியில் பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டன அதன் தொடர்ச்சி தற்போதும் தொடர்கிறது தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுச் சிலை ஐந்து தடவைகள் கடந்த காலத்தில் உடைக்கப்பட்டது.

அதே போல தமிழாராச்சிப் படுகொலை நினைவுச் சின்னம் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டன பின்னர் தியாகி தீலிபனின் நினைவு தூபி உடைக்கப்பட்டது.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டது மேலும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் மே 13 இல் உடைக்கப்பட்டது. இதனை விட என்னும் பல நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

உண்மையில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்களை படுகொலை செய்தது மட்டுமல்ல அவர்களது நினைவுச் சின்னங்களையும் உடைத்தார்கள் தற்போது நினைவேந்தலை செய்வதற்கும் அரச இயந்திரத்தின் மூலம் தடை செய்கின்றனர் இது ஐனநாயகம் என்ற பெயரளவு ஆட்சியில் நடைபெறும் அராஐகம் என்றார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் சீன கொடி ஏற்றப்பட்ட விவகாரம் -வெளிவிவகார அமைச்சு கருத்து

யாழ்ப்பாணத்தில் கட்டிடமொன்றில் சீன கொடி ஏற்றப்பட்டமை குறித்து தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன கட்டுமான நிறுவனத்தின் கட்டிடத்திலேயே சீன கொடி காணப்பட்டதாக டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இது குறித்து தனக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விசேட நிகழ்வுகளின் போதே தேசியகொடிகள் ஏற்றப்படலாம்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இந்த சம்பவம் உள்ளுரில் பொறுப்பாக உள்ள உள்ளுராட்சியின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டிடத்தில் நிகழ்வு ஏதாவது இடம்பெற்றுள்ளதா சீன கொடியை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் உள்ளுராட்சிஅமைப்பிடம் அனுமதி பெற்றதா என பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உள்ளுராட்சி அமைப்பு இது குறித்து விசாரணை செய்யவேண்டும் வெளிவிவகார அமைச்சில்லை எனவும் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை மரணித்தவர்களைக் பட்டியலிடுதல், அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைத்தல், நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, மனித உரிமைகள் தரவாய்வுக் குழு (HRDAG) மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (ITJP) ஆகிய சர்வதேச அமைப்புகள் சிறிலங்காவிலும், வெளிநாடுகளிலும் வாழுபவர்களிடம் இருக்கக்கூடிய போர் மற்றம் ஏனைய காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சம்பந்தமான தரவுகளை தந்துதவும்படியும், புதிய தகவல்களைத் திரட்டித் தரும்படியும் கேட்டிருந்தன.

”இறந்துபோனவர்களின் பெயர்களைப் பதிவுசெய்வதாவது நாம் அவர்களுக்குக் உரிய மரியாதை செய்துகொள்ளலாம்” என்கிறார் ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சுக்கா தெரிவித்தார்.

“உயிரிழந்தவர்களின் பெயர்களைச் சேகரித்து அவற்றை நிரற்படுத்துவதன் மூலம் இழப்பின் தொகையை சரியாக கணிக்கமுடியுமென்பதோடு இறந்தவர்களை மறக்காது என்றென்றும் சமூகத்தால் நினைவுகூர்வதற்கும் அது உதவியாயிருக்கும்” என ஜாஸ்மின் சுக்கா மேலும் தெரிவிக்கிறார்.

போர் முடிந்து ஒரு தசாப்தமாகியும் சிறிலங்காவில் 2009ம் ஆண்டு வரை எத்தனை பேர் மரணித்தார்கள் என்ற சரியான எண்ணிக்கையோ பட்டியலோ எவரிமும் இல்லை.

புள்ளிவிவர அணுகுமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து ஒரு முடிபை எய்துவதே இவ் வேற்பாட்டின் நோக்கம். 2009 இறுதி போரின்போது சரணடைந்து பின்னர் காணாமற்போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட ITJP யும் HRDAG யும் இதே அணுகுமுறையைத்தான் கையாண்டிருந்தன.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களிடம் பேசி அவர்களுக்குத் தெரிந்த மரணித்தவர்களின் பெயர்களைச் சேகரியுங்கள். இந்த தக்வல்களைச் சேகரித்துப் பதிவு செய்ய இலகுவாக நாங்கள் ஒரு படிவத்தைத் தயார் செய்துள்ளோம்.

பட்டியல்கள் ஆங்கிலத்தில் பதியப்படுவது விரும்பத்தக்கது. அல்லது தமிழிலும் பதியலாம்.

கீழ் உள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் தகவல்களை இலகுவாக இணையவழியில் அனுப்பலாம்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe4HOs4i_wBwdSSBkbtOy0JDA97TpicY6FCyVxZsCeyGYCasw/viewform?usp=send_form

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXOjYo-sTlYGX2ehvFsQuqTJW6q3CVFzsd3M-vkNevcdXznA/viewform

அல்லது

தகவல்களை HRDAG மற்றும் ITJP ஆகிய அமைப்புக்களுக்கு பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

itjpsl@gmail.com or info@hrdag.org

தகவல்களை அனுப்புபவரின் பிரத்தியேகம் பாதுகாக்கப்படும்

ஆங்கில, சிங்கள, தமிழ் படிவங்களைத் தரவிறக்க இங்கே here அழுத்தவும்.
https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-ver4.0.docx

https://sangam.org/wp-content/uploads/2019/01/Counting-the-Dead-Tamil-Ver4.0.docx

மரணமடைந்த ஒருவரைப் பற்றிய என்னென்ன தகவல்கள் தேவை என்பதைப் இப் படிவங்கள் தருகின்றன. சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் கேள்வி பத்திகள் மூலம் சிலவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம்.
https://itjpsl.com/assets/Frequently-Asked-Questions-in-english.docx

இந்த திட்டம் பற்றிய ITJP யின் இணையத்தள முகவரி: http://www.itjpsl.com/reports/counting-the-dead

Posted in Uncategorized

யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் தொடர்பில் போலியான செய்தி

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப் பலகையில் சிங்கள மொழி உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதான பெயர்ப் பலகையில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் மட்டுமே துணைத்தூதரகம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து தற்பொழுது துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகையில் சிங்கள மொழியும் உள்ளடக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகள் போலியானவையாகும்.

எனினும் அங்கு சிங்கள மொழி இணைக்கப்படவில்லை. வழமையாக இருக்கும் பதாதைகளே காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள்

இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும்.

சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

“சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும் இருந்த ஆங்கில மொழி அகற்றப்பட்டு பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

தமிழ் எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலம் உடனடியாகவே இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது. இனநெருக்கடி தீவிரமடைந்து – ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைவதற்கும் இந்தச் சட்டமூலமே முக்கிய பங்களிப்பை வழங்கியது.

1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.

பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, ஜூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.

இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப் பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து அரசப் பணியிலிருந்த தமிழர்கள் பலர் பதவி விலகினார்கள்.

இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

“ஒரு மொழி இரண்டு நாடுகள்! இரண்டு மொழிகள் ஒரு நாடு” என இது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா அப்போது தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மத்தியிலும் உறுதியாக நின்று இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தினார் பண்டாரநாயக்க. நாட்டில் ஒரு பாரிய இரத்தக்களரிக்கான அத்திவாரத்தை இதன்மூலம் அவர் போட்டார்.

கொரோனா பலி எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 202,348 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,851 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளது.