இலங்கையில் இயற்கையின் சீற்றம் : 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு சீரற்ற காலநிலையால் இதுவரையில் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பிரதேச செயலகப்பிரிவில் தெவனகல கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

மண் சரிவில் சிக்கிய இக்குடும்பத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தந்தை, 56 வயதுடைய தாய் மற்றும் 23 வயதுடைய மகள் மற்றும் 29 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்க்கப்பட்டனர். மேற்கு பாதுகாப்புபடை தலைமையகத்தின் இராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை கேகாலை மாவட்டம் , வரகாப்பொல பிரதேச செயலகப்பிரிவில் அல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடொன்றில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கி காணாமல் போன 72 வயதுடைய ஆணொருவரும் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த வீட்டிலுள்ள ஏனைய அங்கத்தவர்கள் இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று 4 பேர் பலி

நேற்று வெள்ளிக்கிழமை சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி அயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மண் சரிவில் சிக்கி உயிரிழந்ததோடு , புத்தளம் – மாம்பே மகுணுவட்டவன கிராம உத்தியோகத்தர் பிரிவில் 21 வயதுடைய இளைஞன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதே போன்று களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதோடு , இரத்தினபுரி – அயகம கெப்பிட்டிபொல கிராம உத்தியோகத்தர் பிரிவில் 43 வயதுடைய ஆணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காணாமல் போனார் மீட்க்கப்படவில்லை

நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தில் மஹவெள பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். எனினும் குறித்த சிறுவன் நேற்று சனிக்கிழமை மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டம் – அயகம , மெதபொல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல் போன நபரும் நேற்று மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2,19,027 பேர் பாதிப்பு

அதற்கமைய இன்று மாலை வரை சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 45 380 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 19,027 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5375 நபர்கள் 39 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு , 612 குடும்பங்களைச் சேர்ந்த 2,471 நபர்கள் பாதுகாப்பிற்காக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு உள்ளிட்டவற்றால் இதுவரையில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு , 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம, வலல்லாவிட்ட மற்றும் ஹொரனை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்த்தில் எஹலியகொட, கலவான, அயகம, குருவிட்ட எலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, இரத்தினபுரி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, அரநாயக்க மற்றும் வரகாப்பொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தேசிய கட்டட ஆராய்வு நிறுவகம் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை நீடித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்க, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் , நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் 125 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதால் இன்று மாலை 8.30 மீற்றர் வரை உயர்வடைந்திருந்த நீர்மட்டம் 9 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கும் வெள்ளம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அத்தனகலு ஓயாவில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அத்தனகலுஓயா மற்றும் உருவல்ஓயாவை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

களுகங்ககையில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்லனிய, மதுராவல மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

மகாஓயாவில் நீர்மட்டம் அதிகரித்தால் அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் மகாஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறப்பு

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக 3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குகுலே நீர் தேக்கத்தில் 3 வான்கதவுகளும் , தெதுருஓயா நீர்தேக்கத்தில் 4 வான்கதவுகளும் , லக்ஷபான நீர்தேக்கத்தில் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.

மழைவீழ்ச்சி

இதேவேளை இன்று கேகாலை மாவட்டத்திலேயே அதிக மழை வீழச்சி பதிவாகியது. இம்மாவட்டத்தில் அல்கம என்ற பிரதேசத்தில் 24 மணித்தியாலங்களுக்கும் 197.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை கலிகமுவ பிரதேசத்தில் 132 மி.மீ, பஸ்யால பிரதேசத்தில் 130 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் மேல் , சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மி.மீ மழை வீழ்ச்சியும் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் விவகாரம்- ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை. ஆகவே இவ்விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்ற போதிலும் இந்த ஊழியர்கள், தங்களது உயிரை பெரிதாக கருதாது மக்களுக்கான சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனாலும் அதனை பெரிதாக கருதாது தங்களது வேலையை சிறந்த முறையில் செய்து வருகின்றனர்.

இத்தகையவர்களின் நலன் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஆகவே 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை கருத்தில் கொண்டு, நியாயமான தீர்வை அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்” என அவர் கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் மேலும் 2,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 198,546 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,883 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 164,281 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்-ஜெனிவா உட்பட பல விடயங்கள் ஆராய்வு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.

2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.

“எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

தமிழ் மொழியை புறக்கணித்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு!

பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் அலுவலகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வுவனியா மாவட்ட ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் மற்றும் ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உணவுப் பொருட்களின் சில்லறை விலை மற்றும் திகதி உள்ளிட்ட பல விடயங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மும்மொழிகளில் குறிப்பிட வேண்டும் என முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில், அரசின் வர்த்தமானி அறிவித்தலை மீறி சீனாவின் மண்டரின் மொழி உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மொழி உள்ளடக்கப்படவில்லை என முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தது.

Posted in Uncategorized

பயணத்தடையை மீறி யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிபைப்படுத்தல்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் குறித்தபகுதியின் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

தற்போது நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள்

யாழ்ப்பாண போலீசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம்

பாராளுமன்றத்தின் அடுத்த வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.

Posted in Uncategorized

சைபர் தாக்குதல் தொடர்பான தகவல் பொய்யானது

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட 6 அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு சைபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தாக இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த இணையத்தளங்களின் தகவல்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

அஸ்ராசெனிகா கிடைக்காவிடின் மாற்றுத் தடுப்பூசியை ஏற்றலாம் ! ஆய்வுகளில் உறுதி

ஆறு இலட்சம் பேருக்கான அஸ்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது போனால், முதலாம் கட்டத்தில் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மாற்றுத்தடுப்பூசிகள் ஏற்றுவதனால் எந்தவொரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு இன்னமும் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதா அல்லது ஒரு தடுப்பூசியுடன் நிறுத்துவதா என்பதில் பாரிய குழப்பமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத் தடுப்பூசி ஏற்றுவது குறித்து நேற்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பொன்றை விடுத்திருந்த நிலையில், இது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேனவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக அதே தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தொடர்ச்சியாக வெளிநாடுகளிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் இன்னமும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் சகல நாடுகளுமே வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்மைப்போன்றே அவர்களும் தமது மக்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துகின்றனர்,

எனவே அவர்கள் எமக்கான தடுப்பூசிகளை வழங்க மறுக்கின்றனர் என கருதுகின்றோம். எவ்வாறு இருப்பினும் நாம் மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டியுள்ளது.

ஆகவே அஸ்ராசெனிகா தடுப்பூசியை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது போனால் முதலாம் தடுப்பூசியாக அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவது சாதகமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஒத்ததாகும். ஆகவே இவற்றை ஏற்றுவதால் உடலுக்கு எந்தவித தீங்கும் அல்லது பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

கடந்த சில மாதங்களாக நாம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளுக்கு உட்படுத்திப்பார்த்தோம். அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஒருவரது மாதிரியை எடுத்து எத்தனை நாட்களில் எவ்வாறான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றது என்பதை அவதானித்தோம்.

அதேபோல் ஏனைய இரண்டு தடுப்பூசிகளின் சோதனை முயற்சிகளிலும் சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. எனவே மாற்றுத் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற தீர்மானத்தை நாம் எட்டியுள்ளோம்.

இதற்கு மாறாக மொடேனா, பைசர் ஆகிய தடுப்பூசிகளையும் இலங்கையில் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கைகளில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். அடுத்த மாதமளவில் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?

சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது. அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து அபகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற திரவியங்களை காவிச் செல்லும் கப்பல் என்பதாகும். அக்கப்பல் படைக்கு தளபதிகளாக பெரும்பாலும் நலமெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வீரம்மிக்க தளபதிகளே நியமிக்கப்பட்டார்கள்.சிறுவயதிலேயே நலம் எடுக்கப்பட்ட போர்வீரர்கள் திட்டமிட்டு உக்கிரமான தளபதிகளாக வளர்க்கப்படுவார்கள். எங்களூர்களில் காளைகளுக்கு நலம் எடுப்பது போல.

இவ்வாறு வெல்லக்கடினமான தளபதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட புதையல் கப்பல் படைப்பிரிவின் சுமார் 3000 துருப்புக்கள் கோட்டை ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டன. அழகேஸ்வரனும் அவருடைய குடும்பமும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எனினும் சீனத்துப் பேரரசன் அழகேஸ்வரனை விடுதலை செய்ததோடு அவருடைய இடத்துக்கு ஆறாவது பராக்கிரமபாகுவை அரசனாக நியமித்தார். அல்லது ஆறாவது பராக்கிரமபாகு சீனப் பேரரசின் ஆளுகையை ஏற்றுக் கொண்டதனால் அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படித்தான் சீனா ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைதீவின் கோட்டை ராச்சியத்தை ஆட்சி செய்தது. அது ஒரு ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது அப்படியல்ல. இது ஒரு வர்த்தக விரிவாக்கம். சீனப் படர்ச்சி எனப்படுவது அப்படி ஒரு வடிவத்தில்தான் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கெனவே மாலைதீவுகள் மியான்மர், தென்கிழக்காசியா, ஆபிரிக்காவின் ஒரு பகுதி போன்றன சீனாவின் கடன் பொறிக்குள் மீள முடியாதபடி வீழ்ந்துவிட்டன. இலங்கையிலும் சீனப்பட்டினம் அப்படித்தான் பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தெற்கு வாசலில் சீனா நிரந்தரமாக குடியேறி விடும் என்ற அச்சத்தை அது அதிகப்படுத்தியிருக்கிறது. ஆறு நூற்றாண்டுகளின் முன் நிகழ்ந்தது ஒருவித ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது இலங்கைத்தீவின் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு நிகழும் ஒரு சீன விரிவாக்கம். சீனாவை உள்ளே வரவிட்டு நாட்டின் வரைபடத்தை மாற்றும் விதத்தில் தீவுக்குள் ஒரு தீவை உருவாக்க அனுமதித்தது தனியாக ராஜபக்சக்கள் மட்டுமல்ல ரணில் விக்ரமசிங்கவுந்தான்.தமிழ் மக்களை வெற்றிகொள்ள எந்த ஒரு வெளிப் பிசாசோடும் கூட்டுச்சேர தயாராக காணப்பட்ட எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு.

சீன விரிவாக்கம் எனப்படுவது திறந்த சந்தை பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளின் ஊடாக சீனா பெற்ற அபரிதமான ஒரு வளர்ச்சியின் விளைவுதான். கெடுபிடிப் போரின் முடிவுக்குப் பின் குறிப்பாக கம்யூனிச பொருளாதாரக் கட்டமைப்பின் தோல்விக்கு பின் உலகம் முழுவதும் பொருளாதார அர்த்தத்தில் ஓரலகு ஆகிவிட்டது. இன்டர்நெட் நாடுகளின் எல்லைகளை திறந்தது. நிதி மூலதனம் சந்தைகளின் எல்லைகளை திறந்தது. இவ்வாறாக திறந்துவிடப்பட்ட சந்தைப்பரப்பில் சீனா வெற்றிகரமாக தன்னை பலப்படுத்திக் கொண்டு விட்டது.

யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்லோவாச் சிசிக் பல ஆண்டுகளுக்கு முன் பின்வருமாறு சொன்னார் “முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று. அதன் பொருள் என்னவென்றால் ஜனநாயகமற்ற சீனா திறந்த சந்தை பொருளாதாரக் கட்டமைப்பைக் கைப்பற்றிவிட்டது என்பதுதான்.இவ்வாறு திறந்த சந்தைப் பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளினூடாக சீனா பெற்ற வளர்ச்சியின் விளைவே சீன விரிவாக்கம் ஆகும்.வுகானில் தோன்றிய வைரசையும் அந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்பவர்கள் உண்டு.இவ்வாறு திறந்த சந்தை பொருளாதாரத்தின் அனுகூலங்களை பயன்படுத்தி சீனப்பொருளாதாரம் உலகின் ஏனைய ஜனநாயக பொருளாதாரங்களை விடவும் சக்தி மிக்கதாக மேலெழுந்தது. அது வறிய சிறிய நாடுகளை மிக இலகுவாக தனது கடன் பொறிக்குள் வீழ்த்தி விட்டது. மேற்கத்திய ஜனநாயக அரசுகள் வறிய நாடுகளுக்கு உதவி செய்யும் பொழுது மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைக்கின்றன. ஆனால் சீனாவுக்கு மனித உரிமைகள் ஒரு விவகாரமல்ல. எனவே எந்தவிதமான முன் நிபந்தனையும் இன்றி உதவி செய்யத் தயாரான சீனாவை நோக்கி வறிய சிறிய நாடுகள் போவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இலங்கைத் தீவுக்கும் அதுதான் நடந்தது. இலங்கைத் தீவு போர் காரணமாக ஏற்கனவே கடனாளியாக இருந்தது.இந்நிலையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்க சீனா தயாராக இருந்தது. ஏனெனில் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் இலங்கை ஒரு முக்கியமான முத்து என்று சீனா கருதியது. அதேசமயம் அப்பொழுது இலங்கை தீவை ஆட்சி செய்த ராஜபக்ஷக்களுக்கு மேற்கை நோக்கியோ அல்லது இந்தியாவை நோக்கியோ செல்வதில் சில வரையறைகள் இருந்தன.

மேற்கில் மிகப்பலமான ஒரு தமிழ் டயஸ்போரா இருந்தது. அது போரின் தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதோடு ஐநாவில் இலங்கை தீவை ஒரு குற்றவாளியாக கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று அந்த டயஸ்போரா கடுமையாக உழைத்தது;உழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மேற்கு நாடுகளை நோக்கி செல்லும் பொழுது அங்குள்ள பலமான தமிழ் டயஸ்போரா ஒரு தடை. மேற்கு நாடுகளும் மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைத்தே உதவிகளைச் செய்கின்றன. அதேசமயம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்குள்ள 8 கோடி தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக எப்பொழுதும் நொதிக்ககூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அந்த நிலைமைகளை முன்வைத்து இந்தியா இலங்கைத் தீவில் தனது பேரத்தை அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இந்தியாவையும் முழுமையாக நம்ப இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் தயாராக இல்லை. அதேசமயம் சீனாவில் ஒரு பலமான தமிழ்ச்சமூகம் இல்லை. தவிர சீனாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பண்பாட்டுப் பிணைப்புக்களும் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான நடைமுறைக் காரணம் உண்டு. அது என்னவெனில் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை ஒரு முதலீடாக வைத்து தமது வம்ச ஆட்சியை ஸ்தாபித்து வருகிறார்கள்.யுத்த வெற்றியை அவர்கள் ஒரு அரசியல் வெற்றியாக மாற்ற தயாராக இல்லை. இவ்வாறு யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கி யுத்த வெற்றி வாதத்தை முன்னெடுக்கும் ஒரு அரசாங்கமானது மேற்கை நோக்கியோ இந்தியாவை நோக்கியோ போவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.மாறாக சீனாவை நோக்கி போவதை தவிர அவர்களுக்கு வேறு எந்த தெரிவும் இல்லை. இப்படித்தான் ராஜபக்சக்கள் சீனாவை நெருங்கினார்கள்.சீனாவுக்கும் தேவை இருந்தது. எனவே படிப்படியாக சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய ஸ்ரீலங்கா இப்பொழுது ஏறக்குறைய அதன் பங்காளியாகவே மாறியிருக்கிறதா என்ற கேள்வியை துறைமுக நகரம் எழுப்பியிருக்கிறது.

திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்படும் சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் முதலீட்டு வலையங்கள் போன்றன விசேட சலுகைகளை பெற்ற கட்டமைப்புக்களாகவே உருவாக்கப்படுகின்றன. அவை உள்நாட்டுச் சட்டங்கள் பலவற்றிலிருந்து சிறப்பு விடுப்புரிமையை கொண்டிருப்பதை காணலாம்.”பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல பிரச்சினை அது எலி பிடித்தால் சரி” என்று கூறிக்கொண்டு சீனா தனது பிராந்தியங்களை திறந்த சந்தை பொருளாதாரத்தை நோக்கி திறந்த பொழுதும் இவ்வாறு விசேஷ சலுகைகள் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டன. எனவே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் இவ்வாறான பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படும் பொழுது அவற்றுக்கு விசேட அந்தஸ்து வழங்கப்படுவது உண்டு.ஆனால் இங்கு பிரச்சினை சீனப்பட்டினத்துக்கு வழங்கப்பட்ட அவ்வாறான விடுப்புரிமைகள் எதிர்காலத்தில் அப்பட்டினத்தை இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்துக்கு பதில்கூற தேவையில்லாத ஒரு கட்டமைப்பாக மாற்றக் கூடியவையா என்பதுதான்.

மாலைதீவுகளைப் போன்று சீனாவின் அயல் நாடாகிய லாவோசை போன்று சில ஆபிரிக்க நாடுகளைப் போன்று மியான்மரை போன்று இலங்கைத் தீவும் அதன் கடன்பொறியில் இருந்து மீள்வதற்கு எதிர்காலத்தில் எதையெதை நீண்டகால அடிப்படையில் விற்க வேண்டிவரும் என்பதே இங்கு உள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.

மாலைதீவுகளை சீனக்கடன் பொறிக்குள் இருந்து முழுமையாக விடுவிப்பதென்றால் அங்குள்ள ஆளில்லாத் தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று இந்திய பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். அவ்வாறு விற்றால் சீனா இந்துமாகடலில் இந்தியாவின் தெற்கு வாசலில் நிரந்தரமாக வந்து குந்திவிடும். அப்படித்தான் மியான்மரிலும். அங்கே சீனசார்பு ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு மேற்கத்திய சார்பு ஆங் சாங் சூகி பதவிக்கு வந்தார். ஆனால் அவராலும் சீனாவின் செல்வாக்குக்குக்கு வெளியே சிந்திக்க முடியவில்லை. சீனாவுக்கு வங்காள விரிகுடாவில் எல்லைகள் இல்லை. எனவே மியான்மரின் கியாப்கியூ துறைமுகத்தை அது தனக்கான வங்காள விரிகுடா வாசலாக பயன்படுத்தி வருகிறது. கியாப்கியு துறைமுகம் எனப்படுவது பர்மிய வரைபடத்தில் வங்காள விரிகுடாவில் காணப்படும் பர்மாவை நோக்கி வாயை திறந்து கொண்டிருக்கும் ஒரு மாட்டுக் கன்றின் வடிவிலான நிலத்துண்டு ஆகும்.

அந்நிலத்துண்டில் சீனாவின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோக குழாய்கள் மியான்மரை குறுக்கறுத்து சீனாவை நோக்கி செல்கின்றன.இந்த நிலத்துண்டு ரோஹியங்யா முஸ்லிம்களின் சனத்தொகை செறிவாக உள்ள பகுதிகளுக்குள் வருகிறது. இது காரணமாகவே ரோகியங்கா இனப்படுகொலை எனப்படுவது பிராந்திய பரிமாணம் மிக்கதாக மாறியது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரத்தை மேற்கு நாடுகள் சீனாவுக்கு எதிராக கையாளக்கூடிய நிலைமைகளுக்கு பின்னால் இருக்கும் புவிசார் அரசியல் காரணம் அதுதான்

.உலகப்புகழ் பெற்ற ஆங் சாங் சூகி தலைவியாக வந்த பின்னரும்கூட அவரால் சீனாவை மீறிச் செயற்பட முடியவில்லை. முடிவில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சீனச்சார்பு ராணுவம் அவரை கவிழ்த்து விட்டு மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இது சீன விரிவாக்கத்தின் மற்றொரு முனை. ஸ்ரீலங்காவிலும் அப்படித்தான். பட்ட கடனை மீறிச்சிந்திக்க மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்ரமசிங்கவாலும் முடியவில்லை. அதனால்தான் அவர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். சீன நிதி நகரத்துக்கான திருத்தப்பட்ட உடன்படிக்கையை அவர்தானே தயாரித்தார்?

எனவே இங்கு ஒரு விடயத்தை நாங்கள் தொகுத்துப் பார்க்கலாம். மேற்கு நாடுகள் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றங்களை ஒர் உபாயமாக கைக்கொண்டு வருகின்றன. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் சீனாவின் கடன் பிடிக்குள் இருந்து குறிப்பிட்ட அரசுகளை விடுவிப்பது கடினமானது என்பதற்கு மலேசியா மியான்மர் லாவோஸ் மற்றும் சிறிலங்கா போன்றவை பிந்திய உதாரணங்களாகும். இந்த அடிப்படையில் கூறின், சீன விரிவாக்கத்தின் ஒரு பங்காளியாக மாறியிருக்கும் இலங்கைத்தீவிலிருந்து சீனாவை அகற்றும் வல்லமை தீவுக்குள்ளிருக்கும் எந்த ஒரு சக்திக்கும் இப்போதைக்குக் கிடையாது.அதை வெளிச்சக்திகளால் மட்டும்தான் செய்ய முடியும்.

நிலாந்தன்

Posted in Uncategorized