இலங்கைத்தீவில் சீன சகாப்தம்?

சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில் இலங்கைத் தீவின் கோட்டை ராச்சியத்தை சீனக் கப்பற்படை கைப்பற்றியது. அப்போது கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவர் ஒரு தமிழன். அழகேஸ்வரர். அவர் யாழ்ப்பாணத்து இராச்சியத்தை வெற்றி கொண்டார். அதனால் கிடைத்த பலம் காரணமாக கோட்டை ராச்சியத்துக்கும் அரசனாகினார். அக்காலகட்டத்தில் சீனாவின் புதையல் கப்பல் என்றழைக்கப்படும் ஒரு கப்பல் படையணி இலங்கை தீவை ஆக்கிரமித்தது. புதையல் கப்பல் என்பதன் பொருள் கைப்பற்றிய நாடுகளிலிருந்து அபகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற திரவியங்களை காவிச் செல்லும் கப்பல் என்பதாகும். அக்கப்பல் படைக்கு தளபதிகளாக பெரும்பாலும் நலமெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வீரம்மிக்க தளபதிகளே நியமிக்கப்பட்டார்கள்.சிறுவயதிலேயே நலம் எடுக்கப்பட்ட போர்வீரர்கள் திட்டமிட்டு உக்கிரமான தளபதிகளாக வளர்க்கப்படுவார்கள். எங்களூர்களில் காளைகளுக்கு நலம் எடுப்பது போல.

இவ்வாறு வெல்லக்கடினமான தளபதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட புதையல் கப்பல் படைப்பிரிவின் சுமார் 3000 துருப்புக்கள் கோட்டை ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டன. அழகேஸ்வரனும் அவருடைய குடும்பமும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எனினும் சீனத்துப் பேரரசன் அழகேஸ்வரனை விடுதலை செய்ததோடு அவருடைய இடத்துக்கு ஆறாவது பராக்கிரமபாகுவை அரசனாக நியமித்தார். அல்லது ஆறாவது பராக்கிரமபாகு சீனப் பேரரசின் ஆளுகையை ஏற்றுக் கொண்டதனால் அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இப்படித்தான் சீனா ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைதீவின் கோட்டை ராச்சியத்தை ஆட்சி செய்தது. அது ஒரு ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது அப்படியல்ல. இது ஒரு வர்த்தக விரிவாக்கம். சீனப் படர்ச்சி எனப்படுவது அப்படி ஒரு வடிவத்தில்தான் முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கெனவே மாலைதீவுகள் மியான்மர், தென்கிழக்காசியா, ஆபிரிக்காவின் ஒரு பகுதி போன்றன சீனாவின் கடன் பொறிக்குள் மீள முடியாதபடி வீழ்ந்துவிட்டன. இலங்கையிலும் சீனப்பட்டினம் அப்படித்தான் பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தெற்கு வாசலில் சீனா நிரந்தரமாக குடியேறி விடும் என்ற அச்சத்தை அது அதிகப்படுத்தியிருக்கிறது. ஆறு நூற்றாண்டுகளின் முன் நிகழ்ந்தது ஒருவித ஆக்கிரமிப்பு. ஆனால் இப்பொழுது நடப்பது இலங்கைத்தீவின் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு நிகழும் ஒரு சீன விரிவாக்கம். சீனாவை உள்ளே வரவிட்டு நாட்டின் வரைபடத்தை மாற்றும் விதத்தில் தீவுக்குள் ஒரு தீவை உருவாக்க அனுமதித்தது தனியாக ராஜபக்சக்கள் மட்டுமல்ல ரணில் விக்ரமசிங்கவுந்தான்.தமிழ் மக்களை வெற்றிகொள்ள எந்த ஒரு வெளிப் பிசாசோடும் கூட்டுச்சேர தயாராக காணப்பட்ட எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் அதற்கு பொறுப்பு.

சீன விரிவாக்கம் எனப்படுவது திறந்த சந்தை பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளின் ஊடாக சீனா பெற்ற அபரிதமான ஒரு வளர்ச்சியின் விளைவுதான். கெடுபிடிப் போரின் முடிவுக்குப் பின் குறிப்பாக கம்யூனிச பொருளாதாரக் கட்டமைப்பின் தோல்விக்கு பின் உலகம் முழுவதும் பொருளாதார அர்த்தத்தில் ஓரலகு ஆகிவிட்டது. இன்டர்நெட் நாடுகளின் எல்லைகளை திறந்தது. நிதி மூலதனம் சந்தைகளின் எல்லைகளை திறந்தது. இவ்வாறாக திறந்துவிடப்பட்ட சந்தைப்பரப்பில் சீனா வெற்றிகரமாக தன்னை பலப்படுத்திக் கொண்டு விட்டது.

யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த தத்துவவியலாளர் ஸ்லோவாச் சிசிக் பல ஆண்டுகளுக்கு முன் பின்வருமாறு சொன்னார் “முதலாளித்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையிலான திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று. அதன் பொருள் என்னவென்றால் ஜனநாயகமற்ற சீனா திறந்த சந்தை பொருளாதாரக் கட்டமைப்பைக் கைப்பற்றிவிட்டது என்பதுதான்.இவ்வாறு திறந்த சந்தைப் பொருளாதாரம் திறந்துவிட்ட வழிகளினூடாக சீனா பெற்ற வளர்ச்சியின் விளைவே சீன விரிவாக்கம் ஆகும்.வுகானில் தோன்றிய வைரசையும் அந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்பவர்கள் உண்டு.இவ்வாறு திறந்த சந்தை பொருளாதாரத்தின் அனுகூலங்களை பயன்படுத்தி சீனப்பொருளாதாரம் உலகின் ஏனைய ஜனநாயக பொருளாதாரங்களை விடவும் சக்தி மிக்கதாக மேலெழுந்தது. அது வறிய சிறிய நாடுகளை மிக இலகுவாக தனது கடன் பொறிக்குள் வீழ்த்தி விட்டது. மேற்கத்திய ஜனநாயக அரசுகள் வறிய நாடுகளுக்கு உதவி செய்யும் பொழுது மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைக்கின்றன. ஆனால் சீனாவுக்கு மனித உரிமைகள் ஒரு விவகாரமல்ல. எனவே எந்தவிதமான முன் நிபந்தனையும் இன்றி உதவி செய்யத் தயாரான சீனாவை நோக்கி வறிய சிறிய நாடுகள் போவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இலங்கைத் தீவுக்கும் அதுதான் நடந்தது. இலங்கைத் தீவு போர் காரணமாக ஏற்கனவே கடனாளியாக இருந்தது.இந்நிலையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்க சீனா தயாராக இருந்தது. ஏனெனில் சீனாவின் முத்துமாலை திட்டத்தில் இலங்கை ஒரு முக்கியமான முத்து என்று சீனா கருதியது. அதேசமயம் அப்பொழுது இலங்கை தீவை ஆட்சி செய்த ராஜபக்ஷக்களுக்கு மேற்கை நோக்கியோ அல்லது இந்தியாவை நோக்கியோ செல்வதில் சில வரையறைகள் இருந்தன.

மேற்கில் மிகப்பலமான ஒரு தமிழ் டயஸ்போரா இருந்தது. அது போரின் தோல்வியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதோடு ஐநாவில் இலங்கை தீவை ஒரு குற்றவாளியாக கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று அந்த டயஸ்போரா கடுமையாக உழைத்தது;உழைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மேற்கு நாடுகளை நோக்கி செல்லும் பொழுது அங்குள்ள பலமான தமிழ் டயஸ்போரா ஒரு தடை. மேற்கு நாடுகளும் மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக வைத்தே உதவிகளைச் செய்கின்றன. அதேசமயம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்குள்ள 8 கோடி தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக எப்பொழுதும் நொதிக்ககூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அந்த நிலைமைகளை முன்வைத்து இந்தியா இலங்கைத் தீவில் தனது பேரத்தை அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இந்தியாவையும் முழுமையாக நம்ப இலங்கையில் உள்ள அரசாங்கங்கள் தயாராக இல்லை. அதேசமயம் சீனாவில் ஒரு பலமான தமிழ்ச்சமூகம் இல்லை. தவிர சீனாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பண்பாட்டுப் பிணைப்புக்களும் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான நடைமுறைக் காரணம் உண்டு. அது என்னவெனில் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை ஒரு முதலீடாக வைத்து தமது வம்ச ஆட்சியை ஸ்தாபித்து வருகிறார்கள்.யுத்த வெற்றியை அவர்கள் ஒரு அரசியல் வெற்றியாக மாற்ற தயாராக இல்லை. இவ்வாறு யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கி யுத்த வெற்றி வாதத்தை முன்னெடுக்கும் ஒரு அரசாங்கமானது மேற்கை நோக்கியோ இந்தியாவை நோக்கியோ போவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.மாறாக சீனாவை நோக்கி போவதை தவிர அவர்களுக்கு வேறு எந்த தெரிவும் இல்லை. இப்படித்தான் ராஜபக்சக்கள் சீனாவை நெருங்கினார்கள்.சீனாவுக்கும் தேவை இருந்தது. எனவே படிப்படியாக சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறிய ஸ்ரீலங்கா இப்பொழுது ஏறக்குறைய அதன் பங்காளியாகவே மாறியிருக்கிறதா என்ற கேள்வியை துறைமுக நகரம் எழுப்பியிருக்கிறது.

திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்படும் சுதந்திர வர்த்தக வலையங்கள் மற்றும் முதலீட்டு வலையங்கள் போன்றன விசேட சலுகைகளை பெற்ற கட்டமைப்புக்களாகவே உருவாக்கப்படுகின்றன. அவை உள்நாட்டுச் சட்டங்கள் பலவற்றிலிருந்து சிறப்பு விடுப்புரிமையை கொண்டிருப்பதை காணலாம்.”பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல பிரச்சினை அது எலி பிடித்தால் சரி” என்று கூறிக்கொண்டு சீனா தனது பிராந்தியங்களை திறந்த சந்தை பொருளாதாரத்தை நோக்கி திறந்த பொழுதும் இவ்வாறு விசேஷ சலுகைகள் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டன. எனவே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் இவ்வாறான பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படும் பொழுது அவற்றுக்கு விசேட அந்தஸ்து வழங்கப்படுவது உண்டு.ஆனால் இங்கு பிரச்சினை சீனப்பட்டினத்துக்கு வழங்கப்பட்ட அவ்வாறான விடுப்புரிமைகள் எதிர்காலத்தில் அப்பட்டினத்தை இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்துக்கு பதில்கூற தேவையில்லாத ஒரு கட்டமைப்பாக மாற்றக் கூடியவையா என்பதுதான்.

மாலைதீவுகளைப் போன்று சீனாவின் அயல் நாடாகிய லாவோசை போன்று சில ஆபிரிக்க நாடுகளைப் போன்று மியான்மரை போன்று இலங்கைத் தீவும் அதன் கடன்பொறியில் இருந்து மீள்வதற்கு எதிர்காலத்தில் எதையெதை நீண்டகால அடிப்படையில் விற்க வேண்டிவரும் என்பதே இங்கு உள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.

மாலைதீவுகளை சீனக்கடன் பொறிக்குள் இருந்து முழுமையாக விடுவிப்பதென்றால் அங்குள்ள ஆளில்லாத் தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று இந்திய பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். அவ்வாறு விற்றால் சீனா இந்துமாகடலில் இந்தியாவின் தெற்கு வாசலில் நிரந்தரமாக வந்து குந்திவிடும். அப்படித்தான் மியான்மரிலும். அங்கே சீனசார்பு ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு மேற்கத்திய சார்பு ஆங் சாங் சூகி பதவிக்கு வந்தார். ஆனால் அவராலும் சீனாவின் செல்வாக்குக்குக்கு வெளியே சிந்திக்க முடியவில்லை. சீனாவுக்கு வங்காள விரிகுடாவில் எல்லைகள் இல்லை. எனவே மியான்மரின் கியாப்கியூ துறைமுகத்தை அது தனக்கான வங்காள விரிகுடா வாசலாக பயன்படுத்தி வருகிறது. கியாப்கியு துறைமுகம் எனப்படுவது பர்மிய வரைபடத்தில் வங்காள விரிகுடாவில் காணப்படும் பர்மாவை நோக்கி வாயை திறந்து கொண்டிருக்கும் ஒரு மாட்டுக் கன்றின் வடிவிலான நிலத்துண்டு ஆகும்.

அந்நிலத்துண்டில் சீனாவின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோக குழாய்கள் மியான்மரை குறுக்கறுத்து சீனாவை நோக்கி செல்கின்றன.இந்த நிலத்துண்டு ரோஹியங்யா முஸ்லிம்களின் சனத்தொகை செறிவாக உள்ள பகுதிகளுக்குள் வருகிறது. இது காரணமாகவே ரோகியங்கா இனப்படுகொலை எனப்படுவது பிராந்திய பரிமாணம் மிக்கதாக மாறியது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் விவகாரத்தை மேற்கு நாடுகள் சீனாவுக்கு எதிராக கையாளக்கூடிய நிலைமைகளுக்கு பின்னால் இருக்கும் புவிசார் அரசியல் காரணம் அதுதான்

.உலகப்புகழ் பெற்ற ஆங் சாங் சூகி தலைவியாக வந்த பின்னரும்கூட அவரால் சீனாவை மீறிச் செயற்பட முடியவில்லை. முடிவில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சீனச்சார்பு ராணுவம் அவரை கவிழ்த்து விட்டு மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இது சீன விரிவாக்கத்தின் மற்றொரு முனை. ஸ்ரீலங்காவிலும் அப்படித்தான். பட்ட கடனை மீறிச்சிந்திக்க மேற்கின் செல்லப் பிள்ளையான ரணில் விக்ரமசிங்கவாலும் முடியவில்லை. அதனால்தான் அவர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு நீண்டகால குத்தகைக்கு எழுதிக்கொடுத்தார். சீன நிதி நகரத்துக்கான திருத்தப்பட்ட உடன்படிக்கையை அவர்தானே தயாரித்தார்?

எனவே இங்கு ஒரு விடயத்தை நாங்கள் தொகுத்துப் பார்க்கலாம். மேற்கு நாடுகள் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றங்களை ஒர் உபாயமாக கைக்கொண்டு வருகின்றன. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் சீனாவின் கடன் பிடிக்குள் இருந்து குறிப்பிட்ட அரசுகளை விடுவிப்பது கடினமானது என்பதற்கு மலேசியா மியான்மர் லாவோஸ் மற்றும் சிறிலங்கா போன்றவை பிந்திய உதாரணங்களாகும். இந்த அடிப்படையில் கூறின், சீன விரிவாக்கத்தின் ஒரு பங்காளியாக மாறியிருக்கும் இலங்கைத்தீவிலிருந்து சீனாவை அகற்றும் வல்லமை தீவுக்குள்ளிருக்கும் எந்த ஒரு சக்திக்கும் இப்போதைக்குக் கிடையாது.அதை வெளிச்சக்திகளால் மட்டும்தான் செய்ய முடியும்.

நிலாந்தன்

Posted in Uncategorized

சிவப்பு பட்டியலில் உள்வாங்கப்பட்ட இலங்கை! பிரித்தானியா அரசு அறிவிப்பு

கோவிட் பெருந்தொற்று ஆபத்து காணப்படும் சிகப்பு பட்டியலைக் கொண்டு நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நோய்த் தொற்று பரவக்கூடிய ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் பிரித்தானிய அரசாங்கம், இலங்கையின் பெயரை இணைத்துக் கொண்டுள்ளது.

சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கோவிட் பரிசோதனை நடாத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பலி எண்ணிக்கை 1600 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

50,000 கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? ரெலோ வினோ எம்.பி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது.

வட மாகாணம் என்பது யாழ் மாவட்டம் என்பதாக வடமாகாண சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், அரச உயர் அதிகாரிகளும், அரச தரப்பின் யாழ் அரசியல் தலைமைகளும் எண்ணங்கொண்டிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.

ஐம்பதாயிரம் சினோபார்ம் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவினையாவது வன்னி மாவட்ட மக்களுக்கும் செலுத்தி கோவிட் பரவலை கட்டுப்படுத்த தவறுவது, அல்லது அக்கறை கொண்டிருக்காமை அரசாங்கமும், யாழ் மையவாத அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வன்னி மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.

கொவிட் 19 முழுமையாக இன்று அரசியல் மயப்பட்டிருக்கும் இக்காலத்தில் வன்னியை பிரதி நிதித்துவப்படுத்தும் இரு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அக்கறையற்று இருப்பது அல்லது திராணியற்று இருப்பது கவலைக்குரியது.

அரசில் அங்கம் வகிக்கும் இவர்கள் அடுத்த கட்ட தடுப்பூசிகளை வன்னி மக்களுக்கு செலுத்துவதற்கான அழுத்தங்களை கொடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் வழங்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளை வன்னி மாவட்டத்துக்கும் வழங்க முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.

வவுனியாவிலும், மன்னாரிலும் மரணங்களும், தொற்றும் அதிகரித்துச் செல்கின்றதுகின்றது. அதே போல் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக் கொத்தணி பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை இனங்கண்டது.

பல கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆடைத்தொழிற்சாலைக் கொத்தணியே காரணமாகும்.

நாம் ஆரம்பத்தில் ஆடைத் தொழிற்சாலையில் ஒருசில தொற்றுக்கள் காணப்பட்ட வேளையில் தொழிற்சாலையை இழுத்து மூடுமாறு பல தரப்பினரிடமும் கோரியிருந்தோம்.

அவர்கள் மறுத்துவிட்டனர். இன்று அது 350க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு தொடர் கொத்தணியாக பரவிவிட்டிருக்கின்றது.

இதன் பின்னரும் தடுப்பூசியின் அவசியத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவார்களாயின் அது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

வன்னி மாவட்டம் தடுப்பூசி வழங்கலில் புறக்கணிக்கப்படுவது அல்லது ஏமாற்றப்படுவது ஏன் என்பதை அதிகாரிகளும், அரசாங்கமும் பகிரங்கமாக வன்னி மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.

மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று, அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யு.ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்

யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையில் இருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடல்வாழ் உயிரினங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்கிறேன்.

பேர்ள் கப்பல் விபத்தினால் உள்நாட்டு கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரதன்மை குறித்து அறியமுடிகின்றது என உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

பேர்ள் கப்பல் விபத்து குறித்து வீரகேசரி – செய்திப்பிரிவிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்குப்பகுதி கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்கு கப்பலில்பாரிய தீ ஏற்பட்டது.

சுமார் ஒரு வாரக்காலம் வரை நீடித்த அந்த கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் அதனால் கடல்வளத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை சீர் செய்ய முடியாத நிலையே உள்ளது.

குறிப்பாக இராசாயண பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசுப்பொருட்கள் ஏற்கனவே கடல் நீரில் கலந்து விட்டுள்ளது.

இந்த விபத்தின் மோசமான பின்விளைவுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாறான இரசாயணங்கள் கடலில் கலப்பது ஆபத்தானதாகும். இலங்கை கடற்கரைக்கு பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட ஆபத்தான நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது பாரியதொரு ஆபத்தாகவே காண முடிகிறது.

இலங்கையின் அழகிய கடற்கரைகளுக்கு கப்பலிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாடு பரவியுள்ளது. இது பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்வதாக உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை வரவேற்கிறோம் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது.

அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது. இணைந்த வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்விக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு கிழக்கு இலங்கை தமிழரின் பூர்விகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கிறது.

இப்பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது தமிழரின், இணைந்த வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும்.

இப்பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்த கணத்தில் எம்மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப் படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தபால் நிலையங்கள் நாளை முதல் திறப்பு

நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் போது குறித்த கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்து பயனாளர்கள் தபால்/ உப​தபால் நிலையங்களுக்கு வர முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

COVID தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பல வருடங்களாக போராடியதன் விளைவாக 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

1000 ரூபா சம்பளத்திற்கு 20 கிலோகிராம் கொழுந்தை பறிக்க தாம் நிர்பந்திக்கப்படுவதாக பொகவந்தலாவை தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

20 கிலோகிராம் கொழுந்தினை பறிக்க முடியாத தற்போதைய சூழலில், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டனர்.

கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடரும் பயணக் கட்டுப்பாடு மற்றும் முடக்கல் நிலைமை காரணமாக முற்கூட்டியே பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும் இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் இதன் உண்மையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.