அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் இலங்கை; எங்களிடம் நாட்டைத் தந்தால் முன்னேற்றிக் காட்டுவோம்! – மனோ

இலங்கையில் சிங்கள – பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்துப் பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாகத் திருப்பித் தருகின்றோம்.”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது ருவிட்டர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ இது பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உங்கள் நண்பர் லக்ஸ்மன் கதிர்காமருக்குக் கூட நீங்கள் பிரதமர் பதவியைத் தர மறுத்தீர்கள். ஜே.வி.பி. மட்டுமே அவருக்குப் பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

இலங்கை, இயற்கை வளமில்லாத வள – ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்த நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்த நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான ‘இல்லை‘களின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

இப்போது இந்த நாடு – இலங்கைத் தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது எனத் தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்த நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950களில், இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கின்றோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருக்கின்றமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாகக் கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவைப் பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972இல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்திப் போகின்றது. இது உங்களுக்குத் தெரியுமா?

இன முரண்பாடுகள், போர், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டுச் செலவாணிப் பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகின்றேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலித் தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – என்றுள்ளது.

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கப்பலில் தீ பரவிய பகுதியில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தம்

MV X-Press Pearl கப்பலில் தீ பரவிய கடற்பிராந்தியத்தில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படும் கொழும்பு, கம்பஹா மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

கடந்த இரு தினங்களாக கொள்வனவு செய்யப்பட்ட மீன்கள் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்பிராந்தியத்திற்குள் மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறித்த கடற்பிராந்தியத்தில் ஆய்வுகள் நிறைவு பெறும் வரை மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.

தீ விபத்துக்குள்ளான கப்பலால் மீன்வளத்துக்கு பாதிப்பு- பேராசிரியர் நவரத்னராஜா

கொழும்பு துறைமுகத்திற்கு வட மேற்று பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

கப்பலிலிருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. ஆகவே கடலில் மிதந்து வரும் பொருட்களை தொடுவதை பொது மக்கள் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா குறிப்பிட்டுள்ளார்.

தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு கப்பலினால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீன்வளத்துறைக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து சிதறிய கொள்கலகள் நீர்க் கொழும்பு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருட்கள் கடலில் கலந்துள்ளமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது வரை கிடைக்கப் பெற்றள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

கப்பலில் இருந்து வெளியாகியுள்ள பிளாஷ்டிக் உற்பத்தி மூலம் பொருட்கள் பெருமளவில் நீர்கொழும்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் கரையொதிங்கியுள்ளன. இம் மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மீன்கள் உண்பதால் அவை இறக்க நேரிடும். இக் கடற்பரப்பில் மீன்கள் இறந்து மிதக்கின்றனவா என்பது குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே தற்போதைய நிலைமைக்கு அமைய சமுத்திரத்திற்கும், கடற் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

நன்றி -வீரகேசரி

Posted in Uncategorized

சில துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,

துறைமுக அபிவிருத்தி அதிகார சபை
பெட்ரோலிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல்
துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் சேவை
ரயில்வே
இலங்கை போக்குவரத்து சபை

ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சேவை உள்ளடங்கலாக பிரதேச மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களினது சேவைகளும் குறித்த வர்த்தமானியினூடாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ சேவை ஆகியனவும் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 128 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவே இதுவரை மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட COVID-19 தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கையாகும்.

நேற்று (26) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (26) வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனைகளில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாவர்.

இவ்விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அங்கு கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வௌி மாவட்டங்களுக்கு தொற்றாளர்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் 1,300 ஐ கடந்தது

இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் 2,572 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகள் வழங்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கொரோனா நிலைமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படு்த்த உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை விரைவு படுத்த ஆளுநர் நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண சுகாதார அமைச்சுக்கு வளங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வடக்கு ஆளுநர் நிர்வாகத்தின் கவனத்திற்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

1) பி சி ஆர் இயந்திரங்கள்
2) தடுப்பூசி மருந்துகள்

போன்றன மிக பிரதானமானவையாகவும் அடுத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சரியான முறையில் அவர்கள் ஓரளவு திருத்திப்படும் வகையிலான அடிப்படை வசதிகளை பேணுதல்.

பி சி ஆர் இயந்திரங்கள் பற்றாக்குறை வடக்கு மாகாணத்தில் தொற்றாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இயந்திரத்திற்கு இராசயன மருந்து முடிவடைந்தமையால் பரிசோதனை தடைப்பட்டுள்ளது. வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் இயந்திரங்கள் பற்றாக்குறை ஆரோக்கியமானதாக இல்லை.

வடக்கு மாகாணத்திற்கு ஓரளவு முதல் கட்டமாக சமூக தொடர்பாடல்களுடன் உள்ள 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.

தற்போது வடக்கு மாகாண நிர்வாகம் ஆளுநரின் பொறுப்பில் இருப்பதன் காரணமாக விரைந்து நடவடிக்கைகளை ஆளுநர் நிர்வாகமே எடுக்க வேண்டும்.

உரிய செயற்பாட்டை வடக்குமாகாண மக்கள் ஏதிர்பார்க்கின்றனர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினர்.

ரெலோ இளைஞர் அணித் தலைவர்.

‘பரிசோதனை உபகரணங்கள்’ வழங்குமாறு இந்திய, பிரித்தானியவிடம் ரெலோ தலைவர் செல்வம் எம்பி கோரிக்கை

வன்னி மாவட்ட வைத்தியசாலைகளிற்கான பரிசோதனை உபகரணங்கள் வழங்குமாறு இந்திய மற்றும் பிரித்தானிய தூதரகங்களிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னிமாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக தொற்றாளர்களை அடையாளம் காண முடியாமல் இருக்கின்றது.

குறிப்பிட்ட அளவான பரிசோதனைகளை செய்வதற்கே வசதி இருப்பதால் அதன் முடிவுகள் வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுப்பதனால் தொற்றுக்கள் அதிகமாக பரவுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த தொற்று பரிசோதனைக்கான உபகரணங்கள் இல்லாமையும் அவற்றிற்கான பற்றாக்குறையும் இருப்பதனாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீர் செய்யவேண்டும.

எனவே காலம் தாழ்த்தாமல் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும் உடனடியாக முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கும் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை தந்துதவுமாறு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமும் உடனடியாக இந்த பரிசோதனை உபகரணங்கள் வன்னி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிறப்புரிமையடிப்படையில் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் அபாய நிலை வருவதற்கு முன்னதாக இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வன்னி மக்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்று தனது கோரிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட ஊடக அறிக்கை ஒன்றினூடாக பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர்களூடாக நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் பாதுகாப்பு தொடர்பில் நான்காம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized