25 ஆம் திகதி வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும் வீடுகளிலேயே தங்கியிருக்கமாறு கொவிட் ஒழிப்பு தொடர்பிலான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும் என
செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பயணத் தடை தளர்த்தப்படுவது உணவுப்பொருட்கள் மற்றும் ஔடதங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக மாத்திரமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணியிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத் தடை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்பட்டு அதேநாள், இரவு 11 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பயணத் தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பயணத் தடை தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்தகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களை மாத்திரமே திறந்து வைப்பதற்கு
வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படுமாயின் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்-ரெலோ விஜிந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்ற போது அல்லது குடும்பங்கள் தனிமை படுத்தப்படுகின்ற போதோ குடி நீர் பிரச்சினை ஏற்படுமாயின், தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்;போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதாக இருந்தால் வட்டார உறுப்பினர்கள் அல்லது உப பிரதேச சபை பொறுப்பதிகாரிகளுடன் குறித்த கிராம அலுவலர்கள் தொடர்புகொள்ளும் வேளையில் இலவசமாக குடி நீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகளை உள்ளடக்கிய கரைதுறைப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது 46 கிராம சேவை பிரிவுகளை கொண்ட பிரதேசத்தில் 13ஆயிரத்தி 280 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் என (21.05.21 வரை) 88 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய ராஐபக்க்ஷ ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

போர்த்துக்கேயர் மோசமானர்கள் அவர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி அவர்களை விட மோசமானவர்களை வரவழைத்தமை அதாவது இஞ்சியை விட காரமான மிளகாயை வாங்கியது போன்ற உவமைக்கு உள்ளானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றின் அன்னிய காலணித்துவ பின்னணியை திரும்பிப் பார்த்தால் தற்போது இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள் உறவை மிக தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் இடம் பெறப் போகிறது என்பதை உணர முடியும்.

இலங்கையில் முதலாவதாக வந்த போர்த்துக்கேயர் கோட்டை மன்னனை எப்படி வசப்படுத்தி உள் நுழைந்தவர்கள் இறுதியில் டொன்யுவான் தர்மபாலவுடன் ஒப்பம் செய்து கோட்டை ராச்சியத்தையே ஒரு துளி இரத்தம் சிந்தாமல் கைப்பற்றினர்.

போர்த்துக்கேயருடன் தொடர்ந்து போரில் ஈடுபட்ட சிங்கள மன்னர்களுள் இரண்டாம் இராஐசிங்கன் ஒரு கட்டத்தில் போர்த்துக்கேயரை வெளியேற்ற ஒல்லாந்தருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டான் இதுவே பின்னாளில் சிங்கள மக்களால் இஞ்சி கொடு்த்து மிளகாய் அல்லது மிளகு வாங்கிய கதையாகியது. காரணம் போர்த்துக்கேயர் மோசமானர்கள் அவர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி அவர்களை விட மோசமானவர்களை வரவழைத்தமை அதாவது இஞ்சியை விட காரமான மிளகாயை வாங்கியது போன்ற உவமைக்கு உள்ளானது.

இதே நிலைமைதான் தற்போது ராஐபக்சாக்களின் நிலைமை அதாவது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் கோரமாக அடக்கும் போது நடந்த போர்க்குற்றங்கள்,மனிதப் படுகொலைகள் ,இனப்படுகொலைகள் பெரும் பூதமாக ஐக்கியநாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் உருவெடுத்தமையின் பின்னணியில் இந்திய,அவுஸ்ரேலிய,ஆசிய ,மேற்குலக,அமெரிக்க நாடுகள் ஓரணியில் இருப்பதால் அதனை எதிர்க்கும் முகமாக அந்த அழுத்தங்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் தங்கள் ஆட்சியை தொடர்வதற்காகவும் சீனாவிடம் முழுமையாக சரணடைந்ததுடன் ஒப்பந்தங்கள் பலவற்றை சட்டமாக்கியதுடன் தனியான தீவை நாட்டின் இறைமையை தாண்டி வழங்கியுள்ளனர்.

இங்குதான் இஞ்சி போன்ற தமிழர்களை பகைத்துக் கொண்டு மிளகாய் போன்ற சீனாவுடன் வாழத் தொடங்கியுள்ளனர். இது வரலாற்று ரீதியாக இரண்டாம் இராஐசிங்கனின் கதையாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரம்பகாலங்களில் இலங்கையுடன் பட்டுப்பாதையில் வியாபாரங்களில் ஈடுபடும் போது இலங்கைக்கு சீனர்கள் இட்ட பெயர் சீலன் ஆகும் எதிர்காலத்தில் கொழும்பு போர்ட் சிற்றிக்கு சீலன் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

எதிர்க்கட்சித் தலைவருக்கும், மனைவிக்கும் கொரோனாத் தொற்று!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றுச் சனிக்கிழமை தமது மனைவிக்குத் தொற்று உறுதியானதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துத் தாமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று உறுதியானதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்தால் சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்; மனோ

“இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் ருவிட்டர் பதிவு வருமாறு:-

“தமிழைத் தவிர்த்து, சீனர்கள் மொழிச் சட்டத்தை இங்கு மீறுகின்றார்கள். சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர்ப் பலகைகளும் உள்ளன. நான் சீனத் தூதுவரைச் சந்தித்து இது பற்றி விளக்கியுள்ளேன். எனினும், பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் தெருப் போராட்டம் செய்ய வேண்டி வரும்.”

Posted in Uncategorized

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை-இம்ரான் மஹ்ரூப் எம். பி சாடல்

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (22)கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காணப்பப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை இருபதாம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகிறது.

இருபதாம் திருத்த சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் துறைமுக நகர சட்டமூலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் காட்டுப்பாட்டில்லையே உள்ளனர் என்பது புலனாகியது.

அதுவும் இந்த சட்டமூல விவாதத்தில் இதற்கு எதிராக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்காளிக்காமல் தடுத்துள்ளனர். காரணம் இவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்காளிக்க முடியாது. எனவே எதிராக வாக்ளிக்க இருந்த தலைவரையும் வாக்காளிக்காமல் தடுத்து இவர்கள் மக்களிடமும் ராஜாபக்சக்களிடமும் தப்ப முயற்சிக்கின்றனர்.

அடுத்த பக்கம் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட அக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமது தலைவரை சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை.

ஆகவே இவர்கள் அனைவரும் தற்போது ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது என தெரிவித்தார்.

Posted in Uncategorized

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடை நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறிவிட்டது : சந்திரிகா ஆதங்கம்

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

கொரோனா வைரஸ் பரவலில் நாடே சிக்கித் தவிக்கும் வேளையில் நாட்டை முடக்காது தற்போது துறைமுக சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாட்டை முடிக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அவசரகால நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகள் மோசமானதாகும், குறிப்பாக துறைமுக நகர் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதானது மிகவும் மோசமான செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.

உயர் நீதிமன்றத்தில் தவறெனக் கூறியும், நாட்டு மக்கள் கூப்பாடு போட்டும் அது எதனையும் கருத்தில் கொள்ளாது துறைமுக சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாட்டு மக்கள் வெளியில் இறங்க முடியாத நிலையொன்று காணப்படுகின்ற இந்த நேரத்தில், மக்கள் உயிரிழந்து கொண்டுள்ள இந்த நேரத்தில், நாட்டினை முடக்காது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாட்டினை முடக்கிவிட்டு, நீதிமன்ற வியாக்கியானத்தையும் கருத்தில் கொள்ளாது சட்டமாக்கிவிட்டனர்.

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் பண்டாரநாயக்கவை அதிகமான நினைவுக்கு வருகின்றது, அவர் வழியில் வந்த சுதந்திர கட்சியினர் மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை இன்று செய்துள்ளனர்.

தனித்த பயணமொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாலில் தொங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலைமையே உள்ளது எனவும் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு ஐநாவிடம் ஆவணப்படுத்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டது.  இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர்.

அத்தோடு நிறுத்தி விடாது ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த  வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப் பட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும்,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். இக்கடிதம் ஐநாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் ” 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. இது ஒரு வெட்கக் கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு.

உலகில் உள்ள எவ்வகையான வலிமைபொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும் நினைவுகளையும் அழிக்க முடியாது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம்.

நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒப்பம்

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ. தலைவர் த.ம.தே. கூ.

மனோ கணேசன் பா.உ. தலைவர், த. மு. கூ

செல்வம் அடைக்கலநாதன் பா. உ . த.தே. கூ

த. சித்தார்த்தன் பா. உ  த.தே. கூ

எம். ஏ. சுமந்திரன் பா. உ. த.தே.கூ

கோ. கருணாகரம் (ஜனா) பா. உ த.தே.கூ

சி. சிறிதரன் பா.உ  த.தே.கூ

ஐ. சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ  த.தே.கூ

எஸ். வினோ நொகரதலிங்கம் பா.உ த.தே.கூ

சா. இராசமாணிக்கம் பா.உ   த.தே.கூ

த. கலையரசன் பா.உ  த. தே. கூ

வி. இராதாகிருஷ்ணன் பா.உ  த.மு.கூ

எம். வேலு குமார் பா.உ  த.மு.கூ

என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. சம்பந்தன் மற்றும் திரு. திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் அவர்கள் ஒப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இக்கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

பிருத்தானியாவில் ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு ரெலொவின் பிருத்தானியாகிளை ஏற்பாட்டில் Harrow பகுதியில் அமைந்துள்ள Harrow West Conservative Association மண்டபத்தில் இன்று (21-05-2021) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் பாரி ஈகைச்சுடரேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அஞ்சலி நிகழ்வு பிரித்தானிய கிளையின் பொறுப்பாளர் சாம் சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தலைவர் ஸ்ரீசபாரெத்தினம்,மற்றும் அனைத்துப் போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து

மலர் அஞ்சலிகள் முன்னாள் ரெலோ முக்கியஸ்தர்கள் அரபாத்,சிவபெருமான்,ரூபன்,பரா,சிங்கன், திரு,மனேஜர்,பீற்றர்,மதன்,நந்தன்,மூர்த்தி,ரஜனி,கொடி, புண்ணியம் ஆகியோரால் நிகழ்த்தபட்டது.

ரெலோ வின் முன்னைநாள் நிதி பொறுப்பாளர் அரபாத்,சிவபெருமான்,பரா தலைவர் ஸ்ரீசபாரெத்தினரத்தினத்துடன் தமது கடந்த கால சம்பவங்களை நினைவுகூர்ந்து சிறப்புரை ஆற்றினார்கள்.

தற்கால சூழ்நிலையில் 30 பேர் கொண்ட ஒன்று கூடலுக்கான அனுமதியை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் எமது பிருத்தானியாகிளையின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.

Posted in Uncategorized