நாட்டை முடக்க எவ்வித தீர்மானமும் இல்லை – இராணுவத் தளபதி

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை கொள்வனவு செய்து சேகரிக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுவிஸ் கிளையால் சூரிச் மாநிலத்தில் ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளையால் மறைந்த தலைவர் சிறி அண்ணா, மற்றும் அவருடன் மரணித்த 350க்கும் மேற்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும், சுவிஸ் கிளையால் சூரிச் மாநிலத்தில் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது,

அத்துடன் 1985ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி எமது இயக்கம் நடத்திய மிகப்பெரிய இராணுவத் தளமான கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணமடைந்த ஒன்பது போராளிகளுக்கும் 36வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வானது மூத்த உறுப்பினர் விமல் அவர்களின் தலைமையில்,

எமது மூத்த உறுப்பினரும் மதிப்பிற்குரிய சிவா அண்ணன் அவர்களின் அஞ்சலி உரையுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வுக்கு மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

இதில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் Corona தடுப்பூசி (இரண்டையும்) போட்டுள்ளனர்.

எமது வேண்டுகோளை ஏற்று வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்திய, மற்றும் Zoom, தொலைபேசி வாயிலாக, ஸ்கைப் , வாட்ஸ்அப் ஊடாக அஞ்சலி செலுத்திய அனைத்து சுவிஸ் கிளை உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி கிளை நிர்வாகம்.

கொக்காவில் தாக்குதலில் வீரமரணம் எய்திய தோழர்களை தலைசாய்ந்து நினைவு கூறுவோம்

கொக்காவில் தாக்குதலில் மக்களுக்காக மரணித்த எம்தோழர்கள். இவர்களின் கல்லறையிலேயே, எம் வாழ்ககை, உயிர்துடிப்பு, எம் இலக்கு எல்லாம் அடங்கியுள்ளது.இவர்கள் மக்களுக்காக என்பதுடன் எமக்காகவும் தம் உயிரை கொடுத்துள்ளார்கள். இன்று 09/05 இவர்களை தலைசாய்ந்து நினைவு கூறுவோம்.

மிசோ Ram – உன்னதமான தோழன், எமது ஆளுமை மிக்க ஆரம்ப கால ரெலோ உறுப்பினர். 1982இல் மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்தை நாடி எல்லா சுகபோகங்களையும் துறந்து மக்களுக்காக புறப்பட்ட மாவீரன்.

1985ம் ஆண்டு May மாதம் 09ம் திகதி. தாஸ்,புரூஸின்,மிசோவின் தலைமையில் ரெலோவால் நடாத்தப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். அவர்கள் மூவரின் தலைமையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மிசோவுடன் சேர்ந்து எம் தோழர்கள் 9 பேர் வீரமரணம் எய்தியதுடன் சிலர் படுகாயமடைந்தார்கள்.

மிசோ
பவா
குமார்
ரவி
வீனஸ்
பரன்
அஐந்த்
பாலசிங்கம்
ஜெராட்

இவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கிறோம்.

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்வது இந்த அமைப்பின் நோக்கமாகும்.

மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குறித்த, யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக மருத்துவபீட பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ் மற்றும் துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் மற்றும் பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த அமைப்பு வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பித்தக்கது.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்

நாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் என்பனவற்றை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை (12) கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக வைத்தியர்கள், கல்விசார் நிபுணர்கள் உள்ளிட்டோரை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது பெறப்படுகின்ற ஆலோசனைகளின் பிரகாரம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 15 பேர் பலி -உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

மேலும் 40 புதிய அரசியல் கட்சிகள்!

40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவற்றில்18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு இணைய வழியில் அச்சுவேலி பொதுச்சந்தை கட்டிட திறப்புவிழா – ரெலோ தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அச்சுவேலி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பொதுச்சந்தைக் கட்டடம் நாளை திங்கட்கிழமை (10),

காலை 10 மணிக்கு இணைய நேரலையில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையின் சபை நிதியில் 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு கடந்த வருடம் குறித்த அடிக்கல் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள்,

உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணக்கையினருடன் நாட்டிவைக்கப்பட்டது.

தற்போது தனியார் கட்டிடம் ஒன்றில் சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

எனினும் குறித்த தனியாரின் கட்டிடமும் தற்போதைய சுகாதார நிலைமைகளுக்கு ஏற்பாடு உடையதல்ல என பொது சுகாதார அதிகாரி பணிமனையினால்,

எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பிரதேச சபையினால் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் அவசர அவசரமாக திறந்துவைக்கப்படுகின்றது.

புதிய கட்டிடம் திறந்துவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேலும் சமூக இடைவெளியுடன் சந்தையினை நடாத்திச்செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் திறப்புவிழா குறித்து தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசம் 18 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.

இந் நிலையில் அச்சுவேலிச் சந்தையே பிரதான சந்தையாகவுள்ளது. எனவே மிகவும் விமர்சையாக பலரும் அழைக்கப்பட்டு திறப்புவிழா மேற்கொள்ளப்படவேண்டும் எனவே விரும்பியிருந்தோம்.

எனினும் தற்போதைய சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு எவரும் நேரில் அழைக்கப்படாது இணைய வழி திறப்பு விழாவாக சந்தை திறந்துவைக்கப்படுகின்றது.

இவ் அசௌகரியங்களை சகலரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

zசந்தைத்திறப்பு விழா நேரலையில் பிரதேச சபையின் முகப்புத்தகம் மற்றும் ஏனைய இணையவழி முறைமைகளின் ஊடாகவும் அரசியல் தலைமைகள்,

பிரதேச சபையின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள், சனசமூகநிலையங்கள், சந்தை வியாபாரிகள்,

பிரதேச மக்கள் என யாவரும் பங்குகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

ஈழத் தமிழினத்தினைப் பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்குப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சார்பாகவும், ஈழத்தமிழர் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விசேடமாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் எனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழினத்தினைப் பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு எனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது .

வெள்ளிக்கிழமை(07) புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக முதலமைச்சருக்கு மேற்படி பேரெழுச்சி இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ். சிவயோகநாதன் மற்றும் வணபிதா கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாங்கள் பதவி ஏற்றதும் தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத் தமிழர் நல்வாழ்வு எனும் தலைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசை தி.மு.க. கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் ஆகிய அம்சங்களுடன் ஈழத்தமிழர் தொடர்பான மற்றைய வாக்குறுதிகளிலும் விசேட கவனம் செலுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆண்டாண்டு காலமாகத் தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு மற்றும் கலாசார ரீதியான இறுக்கமான உறவே தமிழ்த்தேசியத்தின் உறுதியான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

ஈழத்தமிழினத்தின் உறுதியும், பலமுமே இந்திய தேசத்தின் தென்கோடிக் கரையினதும், தமிழகத்தினதும் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்பதனை மீண்டும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுவதுடன் அந்நிலை மீண்டும் உருவாவதற்கு ஈழத் தமிழினத்தினை பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை உரிமையுடன் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தங்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் மென்மேலும் வளர்ச்சியுறவும், ஈழத்தமிழினத்தினுடனான உறவு வலுப்பெறவும் எதிர்பார்த்திருக்கின்றோம். தற்போது காணப்படும் கொவிட்- 19 பேரிடரிலிருந்து தமிழகம் மிக விரைவில் மீண்டுவர நாமும் பிரார்த்திக்கின்றோம் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்ற பெயரில் அமைச்சக பெயர் மாற்றம் : மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அமைச்சரவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற பெயரில் ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது தற்போது இந்த அமைச்சகத்தின் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது.

தமிழக அமைச்சரவையில் சில துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

‘தமிழகத்திலுள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்கள் நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் அரசின் இலக்குகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ் குடும்பங்களிடமும், அவர் தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனி தமிழும், தமிழகமும் வெல்லும்.

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனதில் வைத்து தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற சிறந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை திட்டங்களாக கொண்டு செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி கே எஸ் மஸ்தான், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்.