அமெரிக்காவில் இருந்து பஸில் வியூகம் வகுப்பு: நாடு திரும்பியதும் மொட்டுக்குள் அதிரடி மாற்றம்

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன்

விசேட சந்திப்பை நடத்தவுள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்தியதாகவே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு இதன்போது பஸில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு அவர் களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும் கூட்டணி நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேள்வியெழுப்பிய யஸ்மின் சூக்கா

இலங்கையில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து அதிபர் ஆணைக்குழுக்களும் ‘என்ன நேர்ந்தது’ என்பதைக்

கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை ‘யார் அதனைச் செய்தது’ என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேவெளை தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா என்ற கேள்வி எழுப்பியிருக்கின்றது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இதுகுறித்து யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் மேலும் கூறியிருப்பதாவது:

“இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அட்டூழியங்கள் இடம்பெற்ற 1989 ஜுலை மாத காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரி ரத்நாயக்க இன்னமும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.

ஏனெனில் இலங்கையில் நியமிக்கப்பட்ட அனைத்து அதிபர் ஆணைக்குழுக்களும் என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, யார் அதனைச் செய்தது என்று கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக கடந்தகால வரலாறு மீளத்திரும்புகின்றதா?

மனித உரிமைகள் செயற்பாட்டாளரான எம்.சி.எம்.இக்பால் போன்றவர்களின் பங்கேற்புடன் முன்னர் இயங்கிய பல்வேறு ஆணைக்குழுக்கள் மிகக்கடினமாக உழைத்த போதிலும், அப்போதைய காலப்பகுதியில் சாதாரண வன்முறைகளாக விபரிக்கப்பட்டவை அனைத்தும் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாகவே காணப்பட்டன.

எது எவ்வாறெனினும் வலிந்து காணாமல் ஆக்கப்படல்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை அடையாளங்காணமுடியும். ஆனால் 1989 ஒக்டோபர் மாதத்திலிருந்து அதுபற்றி எவரேனும் விசாரணைகளை மேற்கொண்டனரா?

குறிப்பாக 1989இல் காணாமல்போன நபரொருவர் பற்றிய தகவல்களில், அவர் தமது காவலின்கீழ் இருந்ததாக இராணுவத்தினர் (தலத்துஓயா இராணுவ முகாம்) கூறுகின்றனர். அவ்வாறெனில், அந்நபரை எவ்வித சாட்சியங்களுமின்றி காணாமலாக்கியது யார்? அக்காலப்பகுதியில் தலத்துஓயா இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் யார்? அதனைக் கண்டறிவது அத்தனை கடினமானதல்ல.

அதேபோன்று பிறிதொரு காணாமலாக்கப்படல் சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில், 1990ஆம் ஆண்டு பேராதனையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்த பின்னர் காணவில்லை. (இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த வாகனத்தின் பதிவிலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.) அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் 2009 மே மாதம் 18ஆம் திகதி தம்மிடம் சரணடைந்து காணாமல்போன நூற்றுக்கணக்கான தமிழர்களை அவர்களை அழைத்துச்சென்ற பேருந்து (பதிவிலக்கமின்றி) கண்டறியமுடியாது என இராணுவம் கூறியது.

அதுமாத்திரமன்றி 1989ஆம் ஆண்டு இராணுவத்தைச் சேர்ந்த சீருடையணியாத சுமார் 30 – 40 பேரால் அழைத்துச்செல்லப்பட்ட தனது 20 வயது மகன் காணாமல்போனமை குறித்து முறைப்பாடளிப்பதற்கு கலகெதர காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை என தாயொருவர் தெரிவித்துள்ளார்.” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம்.அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் குடியரசின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2024 ஆம் ஆண்டு தீர்மானமிக்கது.2019 ஆம் ஆண்டு 69 இலட்ச மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறின் பிரதிபலனை ஒட்டுமொத்த மக்களும் தற்போது எதிர்கொள்கிறார்கள்.பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என ராஜபக்ஷர்களும் அவர்களின் சகாக்களும் இனி குறிப்பிட முடியாது.ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என உயர்நீதிமன்றம் முத்திரை பதித்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.விசேட வைத்தியர்களின் வெளியேற்றத்தால் நாட்டின் சுகாதாரத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடிகளை நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் ரீதியில் மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலர் வரிசையில் நிற்பதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டும் இவ்வாறு குறிப்பிட்டுக் கொண்டு தான் அவர்கள் கோட்டபய ராஜபகஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினார்கள். இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டும் அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் படுதோல்வியடைவார்கள்.அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை இனி ஆதரிக்க போவதில்லை.மக்களின் அரசியல் சிந்தனை மாற்றமடைந்துள்ளது,ஆகவே நிச்சயம் ஆட்சிமாற்றம் ஏற்படும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியமைத்து 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் போட்டியிடுவோம்.நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை தோற்றுவிப்போம் என்றார்.

Posted in Uncategorized

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் – மனோ கணேசன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன் இந்த மகத்தான நிகழ்வை நடத்தி, மலையக தமிழ் மக்களின் வரலாற்று, நிகழ்கால அவலங்களை, உரை, கலை வடிவங்களில் இந்த மேடையில் கூற வைத்து விட்டார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் எனக்கு ஒரு கடப்பாடு இருக்கிறது. வரலாறு, நிகழ்கால அவலங்களுக்கு அப்பால் நாம் இன்று எங்கே, எப்படி நிற்கிறோம், எங்கே, எப்படி போக வேண்டும் என்ற எதிர்காலம் கூற வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் இராதாகிருஷ்ணன் எம்பி தலைமையில் நுவரேலியாவில் நடைபெற்ற 200ல் மலையக மாற்றம் விழாவில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இந்நாட்டின் சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம் சகோதர இனத்தவர் தங்கள் ஓட்டங்களை 1948லேயே ஆரம்பித்து விட்டார்கள். மலையக தமிழர் தமது குடியுரிமையை சட்டப்படி முழுமையாக பெற்றுக்கொள்ளவே 2003ம் வருடம் ஆகிவிட்டது. ஆகவே நாம் எமது ஓட்டத்தை தாமதமாக ஆரம்பித்த பிரிவினர் ஆகும். ஆகவே எமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடைவுகள், சகோதர இனத்தவர்கள் அடைந்துள்ள, இலக்குகளை விட குறைவாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆனால், இந்த இருபது வருடங்களில் ஏனையோர் மரதன் ஓடும்போது நாம் நூறு மீட்டர் ஓடி வேகமாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். எனினும் இன்னமும் நாம் போக வேண்டிய தூரம் கணிசமாக இருக்கிறது.

நாம் அடையவேண்டிய வளர்ச்சியை அடையாமல் குறைவளர்ச்சியில் நிற்கிறோம். மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வரும் போதெல்லாம், 1948ல் இலங்கையின் அந்நிய செலவாணி தொகை ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகமாக இருந்தது என்று பெருமையாக கூறுவார். அது உண்மை. அதன் பின்னுள்ள கசப்பான உண்மை என்ன? அந்த அதிக தொகை அந்நிய செலவாணியை இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி பெற்று தந்தது நமது மக்களின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைப்பினால் கிடைத்த ஏற்றுமதி வருமானம் ஆகும். ஆனால், இதற்காக 1948லேயே முதல் சுதந்திர இலங்கை அரசு எமக்கு செய்த கைம்மாறு என்ன? எமது குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடற்ற மக்கள் ஆக்கியதே அந்த கைம்மாறு ஆகும்.

1964ல் எம்மை கலந்தாலோசித்து எமது உடன்பாடுகளை பெறாமலேயே இந்திய அரசு, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்த உடன்பாடு தெரிவித்தது. அன்று ஏற்படுத்தப்பட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக எமது மக்கள் கால்நடைகள் போல் நாடு கடத்தப்பட்டு, இங்கே நாம் அரசியல்ரீதியாக பலவீனபடுத்தப்பட்டோம். இந்த ஒப்பந்தம் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

1972 வரை நாம் குடியரசு ஆகவில்லை. அதுவரை பிரிட்டிஷ் மகாராணியார் தான் எமது தேசத்தலைவராக இருந்தார். நாம் டொமினியன் சிலோன் என்ற நாடாக இருந்தோம். எம்மை 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான். 1948ல் எமது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும், 1964ல் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும் பிரிட்டிஷ் மகாராணியார் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசால் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

இந்த வரலாற்றின் காரணமாக, எமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிட வேண்டிய தார்மீக கடப்பாடு இன்று, இந்திய, பிரித்தானிய அரசுகளுக்கு உண்டு. அதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இங்கிலாந்து பிரதமர் ரீஷி சுனக் அவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோருகிறேன். கடந்த வாரம் நானும், இராதாகிருஷ்ணனும் இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் தூதுவர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போது, இதை நான் அவருக்கு தெளிவாக எடுத்து கூறினேன். அவரது இன்றைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்சின் அரசு எமக்கு உதவிட வேண்டும். இந்தியாவின் கடப்பாடு பற்றி நான் பலமுறை இந்திய தலைவர்களிடம் எடுத்து கூறியுள்ளேன்.

இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார் திசாநாயக்க ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். எனது கருத்தை இவர்களுக்கும் நான் பலமுறை எடுத்து கூறியுள்ளேன் என கூறினார்

அரசியல் சீர்குலைவை சரி செய்வதே முதன்மையானது

உலகத் தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் முயற்சியை பல்வேறு புலம்பெயர் அமைப்புகளும் விமர்சித்திருக்கின்றன.

அவர்கள் புலம் பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டிருப்பதை பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் வரவேற்றதாகத் தெரியவில்லை.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்தோடு அரசாங்கம் உரையாடி வருவதான ஒரு தோற்றம் ஏற்பட் டிருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவையினர் இலங்கையில் தங்கியிருக்கும் சூழலில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியான – டீசிரி கோமியர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருகின்றது.

இதேவேளை, தமிழத் தேசிய அரசியல் பரப்பின் பிரதான கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ, ”தனிநபர்கள் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை கையாள முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று தெரிவித்திருக்கின்றது.

இதிலுள்ள அடிப்படையான பிரச்னை வேறு.

அதாவது, தமிழ் மக்களின் அரசியலை எவர் வேண்டுமனாலும் கையாளலாம் என்னும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகள் இருக்கின்றபோதும் அவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் இல்லை – தென்னிலங்கையோடு விடயங்களை கூட்டாகக் கலந்துரையாடும் போக்கு இல்லை.
இந்த இடை வெளியாலேயே உலகத் தமிழர் பேரவை என்னும் பெயரில் புலம்பெயர் சமூக உறுப்பினர்கள் சாதாரணமாக விடயங்களில் தலையீடு செய்ய முடிகின்றது.

இது தொடர்பில் ‘ஈழநாடு’ தொடர்ந்தும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.

அதாவது, தாயக அரசியலை வேறு தரப்புகள் கையாள அனுமதிக்கக்கூடாது. புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெற வேண்டும் – அவர்களது ஆதரவு முக்கியமானது. ஆனால், தாயக அரசியலை தீர்மானிக்கும் உரிமையை அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. 2009வரையில் புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் வெறுமனே நிதியளிக்கும் கருவிகளாகவே இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்தான் ஆளுக்கொரு கடை என்னும் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் அரசியலில் தலையீடு செய்ய முற்பட்டனர்.

2009இற்கு பின்னரான தாயக அரசியல் தலைமைகளை மதித்து நடக்கும் போக்கு புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் பெரியளவில் இல்லை.

தாங்கள் கூறுவதை இங்குள்ளவர்கள் கேட்க வேண்டும் என்னும் அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை இருந்தது.

இந்தப் போக்கின் விளைவாக – விடுதலைப் புலிகளுக்கு அதிகம் உரிமை கோருவது யார் என்னும் அரசியல் போக்கொன்றும் உருவாகியது.

அந்த உரிமையை அதிகம் தங்கள் வசப்ப டுத்துவதை ஓர் அரசியல் போக்காகவே கைக்கொண்டிருப்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர்தான்.
அதேவேளை கிளிநொச்சியில் அந்த உரிமையை தன் வசப்படுத்துவதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னணி வகிக்கின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிலர் இந்த விடயத்தை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்போடு செயல் படுகின்றனர்.

இதற்கு பின்னால் புலம்பெயர் குழுக்களின் நிதி ஆதரவும் உண்டு. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை செய்யலாம் என்னும் சூழலில்தான உலகத் தமிழர் பேரவையினர் சிங்கள மக்களோடு உரையாடும் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஜனநாயக அரங்கில் எவரும் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம் – அதற்காக அவர்கள் செயல்படலாம்.

ஆனால், அவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பெயரால் விடயங்களை முன்னெடுப்பதுதான் சிக்கலானது.
அது ஆபத்தானதும்கூட.

ஏற்கனவே, பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றுபட்டு சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி செயல்பட்டு வருகின்றபோது – இதேவேளை, தாயக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள இந்தியாவின் உதவியை கோரி வரும் சூழலில் தன்னிச்சையாக சிங்கள மக்களோடு உரையாடப் போகின்றோம் என்று சிலர் தென்னிலங்கையில் சந்திப் புகளை மேற்கொள்வதானது அடிப்படையிலேயே தமிழர் அரசியலை பலப்படுத் தும் செயல்பாடுகளாக அமையாது.

இவை அனைத்தும் தமிழ் அரசியலின் சீர்குலைவையே அடையாளப்படுத்தும்.

மற்றவர்களோடு உரையாட செல்வதற்கு முன்னர் தமிழத் தேசிய தரப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் அரசியலிலுள்ள சீர்குலைவை சரிசெய்ய வேண்டும்

Posted in Uncategorized

சீனாவுக்காக இந்தியாவின் வரலாற்று உறவை முறித்துக்கொள்ள போகின்றீர்களா – கோவிந்தன் கருணாகரன்

இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும்.

இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீன எக்சிம் வங்கி எமக்கு உதவுகின்றது. சர்வதேச கடன் மறுசீரமைப்பில் கை கொடுக்கின்றது என்று குறிப்பிடப்படுகிறது.

சீன கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் வரையறைகள் என்னவென்பதை இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமை.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு, சீனாவின் கொள்கை தொடர்பாக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சீனா தொடர்பாக உரையாற்றும்போது இந்தியா தொடர்பிலும் உரையாற்ற வேண்டியது கட்டாயம். இந்தியா என்று நாங்கள் பேசினால் இங்குள்ள சிலருக்கு அது கசக்கும்.

இந்தியா எனக்கொன்றும் இனிப்பல்ல. ஆனால் யதார்த்தம் புரிய வேண்டியது அவசியம். பொருளாதார சிக்கலில் நாம் மூழ்கியிருந்த போது நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசிய மருந்து, எரிபொருட்களுக்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி இந்தியா வழங்கியது

ஆனால் அந்த வேளையில் சர்வதேச நாணய நிதியம் கூட.2.9 பில்லியன் டொலர்களை பல்வேறு நிபந்தனைகளுடன்தான் வழங்கியது நான் ஒன்றும் இந்திய ஆதரவாளன் அல்ல.

ஆபத்தில் கை கொடுப்பவனே நண்பன் . ஆபத்து நேரத்தில் உதவுவதுபோல் தனது நலனை நிறைவேற்ற நினைப்பவன் நண்பனல்ல. இந்திய,சீன உறவு தொடர்பாக இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது .நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை நாம் தவிர்க்க வேண்டும்.நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எமக்கு உற்ற நண்பனாக விளங்குவது இந்தியா மாத்திரமே .

அண்மைக்காலமாக எமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களை அவதானிக்கின்றோம். இது நமது தேசிய கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைய நாட்களில் சீன பாதுகாப்புத்துறை தொடர்பான உளவுக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பதும் நமது கடலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வருகை தெரிவதாக கூறுவதும் அதற்கு எமது நாடு செங்கம்பளம் விரித்து வரவேற்பதும் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எமது வெளிநாட்டுக் கொள்கை சீனாவுடன் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல. எமது சீன சார்பு என்பது இந்து சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கு நமது நாடு காரணமாகிவிடக்கூடாது.

சீனாவை விட இந்தியா எமது நட்பு நாடு. பௌத்த,இந்து மக்களின் ஆணிவேரின் மூலம் இந்தியாவே பாரம்பரிய கலாசார தொடர்புகள் மட்டுமல்ல இங்கு நீங்கள் பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழி இந்தியாவில் தான் தோன்றியது. பௌத்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும் இந்தியாவில்தான். இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்க கொள்ளப் போகின்றீர்களா ? என்றார்.

Posted in Uncategorized

இமாலய பிரகடனமா? எங்களிற்கு எதுவும் தெரியாது ; எந்த தொடர்பும் இல்லை – பௌத்தசாசன அமைச்சு தெரிவிப்பு

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ள பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதானபத்திரன மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரகடனத்தைமுழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் மக்களின் அரசியலை புலம்பெயர் தனிநபர்கள் கையாள முனைவது கண்டனத்துக்குரியது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்ப சேர்ந்த ஒரு சிலர் பௌத்தப பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாது அவர்களது அனுமதியை பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளையும் தவறாக வழி நடத்திச் செல்லும் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நடவடிக்கையானது அவர்களது சொந்த நலன்களை பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களின் அரசியலை பலிக்கடாவாக்கும் செயற்பாடா என்று சந்தேகம் கொள்ள வேண்டி உள்ளது.

ஈழத் தமிழர்களால் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக நமது தேசத்தில் அயராத முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாக செயற்பட வேண்டுமே தவிர அவற்றை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

அவர்கள் முன் வைத்திருக்கும் பிரகடனத்திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது வேடிக்கையானது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பாகவே இருக்க முடியும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறாத கொள்கையோடு தொடர்ந்தும் பயணித்து வருகிறது . அந்த அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப் பட்டபோது, நல்லிணக்க நடவடிக்கையாக ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து தேர்தல்களை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளாம். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைளும் நடந்தன. இந்த நேரத்திலே புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைக்கான அதிகாரங்களை பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கின்ற கோரிக்கை அபத்தமானதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான நடவடிக்கையும் ஆகும்.

ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு, நமது கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.

சுரேந்திரன்
பேச்சாளர்-ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

ரெலோ இயக்கத்தின் வீரகாவியம் படைத்த கப்டன் நிக்லஸ் 39 வது வீர அஞ்சலி

எழுச்சித்தலைவர் சிறீசபா்த்தினம் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் 20.11.1984 இல் சாவகச்சேரி பொலிஸ் நிலயம் வெற்றிகரமாக தாக்கி முற்றாக அழிக்கப்பட்டது.

ரெலோ இயக்கத்தின் கன்னிப் போரில் பங்குகொண்டு வீரகாவியம் படைத்த கப்டன் நிக்லஸ் அவர்களுக்கு எமது 39 வது வீர அஞ்சலியை செலுத்திக் கொள்ளுகிறோம்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.

யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமை கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ….! அச்சத்தில் காணி உரிமையாளர்கள்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்நிலையில், இன்றைய தினம் (26.10.2023) வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள்

காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என காணி உரிமையாளர்கள் கூறி இருந்தனர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள்.

இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி, இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து, உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும்? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறினர்.

அதனை அடுத்து, இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது. அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது. அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

காணி உரிமையாளர்கள்

ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே, அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.